வெள்ளி, 26 மார்ச், 2021

அற இலக்கியங்கள் வெளிப்படுத்தும் ஊழ்வினை கேட்பாடுகள்

 

 


                                                     

ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில்

 arajkumartamil@

பாமர மக்கள் முதல் செல்வத்தில் உயர்ந்த செல்வந்தர்கள் வரை அனைவரும் வாழ்க்கையில் அன்றாடம் அனைத்திற்கும் விதியே காரணமென கூறுவதை ; காணமுடிகிறது. ஒருவர் தம் வாழ்வில் உயர்வு தாழ்வடைய காரணம் அவர்அவர் விதிபயன் எனும் வழக்கையும் காண்கிறோம். தீதும் நன்றும் பிறர் தரவாரார் எனும் உயர்ந்த கோட்பாடுகளுடன் வாழ்ந்தவன் தமிழன் . தம்மொழியில் உள்ள தன்நிகரற்ற இலக்கிய ஆளுமைகள் கூறியுள்ள ஊழ் கருத்துகளைக் காண்போம்.

அறயிலக்கியம்

                சங்கயிலக்கியத்தை நாம் நன்கு ஆராயும்போது சில விடயங்களை அறியமுடிகின்றது. பல குடி மரபுகள் இருந்துள்ளதையும் அவர்கள் தமக்குள் போர் செய்து மடிந்ததையும் காணமுடிகிறது.மேலும் ஒரே அரச மரபுகள் இரண்டிற்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தமக்குள்ளே போர் செய்து வீழ்ந்ததை காணமுடிகிறது. மேலும் திணைக் கடவுள்கள் மட்டும்மல்லாமல் பெருந்தெய்வம் மற்றும் வட நாட்டு சமயங்களான சமணம் பௌத்தம் போன்றவன்றின் தாக்கங்களையும்  விரிவாக அறியமுடிகிறது. இதன் மூலம் பல்வேறுபட்ட மக்களுக்கும் பொதுவான அறக்கருத்துகளை கூறவேண்டிய  சுழல்கள்  இயல்பாகவே அமையப்பெற்றதால் பல்வேறு அறயிலக்கியங்கள் தமிழ் மொழியில் தோன்றியுள்ளன.

 ஊழ்வினையின் வலிமை

                ஒருவன் அழியும் காலம் வந்தால் எங்குயிருந்தாலும் அவன் உயிர் விதிபயனால் நிச்சயம் பறிக்கபடும் என்பர். தருமபுரி வட்டார மக்களிடையே இன்றும் நாட்டுபுறக் கதைகளாக ஊழ் பற்றிய சில கதைகள் வழங்கப்படுகின்றன.  உலகில் பாண்டுமக்கள் என்று அழைக்கப்பட்ட   குள்ள மனிதர்கள் சில யுகங்கள் வாழ்ந்தனராம் அவர்கள்; உலகம் நேருப்பால் அழியபோகும் நேரத்தை துள்ளியமாக கணித்து புவியில் சுரங்கம் அமைத்து தப்பினராம். இவர்களை அழிக்க திருமால் திட்டம் தீட்டி தங்கமழையை பொழியவைத்தாராம். அதுவரை பதுங்கியிருந்த மக்கள் தங்கத்தை  எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு அன்று பிறந்த குழந்தையை கூட எடுத்து வந்து கணக்கிற்காக  தங்கத்தை புவியிலிருந்து எடுத்தனராம் . அப்போது இறைவன் நெருப்பு மழையை பொழியவைத்து அழித்தார். என்றும், யுகமாற்றத்தால் உலக  மக்களை அழிக்க இறைவன் முற்பட்டார் எனும் கருத்து கதையாக வழங்கப்படுகிது.;. இக்கருத்தைப்போலவே திருக்குறளிலும்  எவ்வளவு தடுப்பதற்கான உத்திகளையும், உபாயத்தையும் ஒருவன் செய்த போதும் ஊழ் அவனைப் பாதித்தே தீரும். என்றும்   ஊழைவிட வலிமையான ஒன்று உலகில் இல்லை என கூறுவதை

                ஊழின் பெருவலியா உள மற்ற ஒன்று

                சூழினும் தான்முந் துறும் (குறள்.380)

இப்பாடல் வழி அறியமுடிகிறது. மேலும் உயிர்கள் பிறக்கும் போது பிறக்க வேண்டாம் என்று தடுப்பதால் நின்றுவிடாது. உலகைவிட்டு உயிர் இறக்கும்போது உலகில் இரு என்றாலும், இருக்காது திருமகள் இசையின் செல்வம் நாளும் பெருகும். அவள் வேண்டாம் என விலகில் என விலகில் எல்லாச் செல்வமும் ஒழிந்துவிடும். எனும் கருத்தை

      பிறக்குங்கால், பேர்எனவும் பேரா, இறக்குங்கால்

                நில்எனவும் நில்லா, உயிர் எனைத்து நல்லாள்

                உடம்படின் தானே பெருகும், கெடும் பொழதில்

                கண்டனவும் காணா கொடும்.

                                                நான்மணி -40

என்ற பாடல் வழி அறியமுடிகிறது.

வினையே மிக வலிமை

                தாம்தாம் முன் செய்த வினைதாமே அனுபவிப்பார்

                ஈண்டு நீர்வையத்துள், எல்லாரும், எள்துணையும்

                வேண்டார்மன், தீய, விழைபமன் நல்லவை

      வேண்டினும், வேண்டா விடினும் உற்றபால

      தீண்டா விடுதல் அரிது

                                                நாலடி.11 பழவினை 9

விரும்பினாலும், விடும்பாவிட்டாலும் முன் வினைக்கு தகத் துன்ப விளைவு நிகழ்ந்தே தீரும்.

வினை உருவாக்கம்

      சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்துவாரா,

      உறு காலத்து ஊற்றுஆகா, ஆம் இடத்தே ஆகும்

      சிறுகாலைப் பட்ட பொறியும், அதனால்,

      இறுகாலத்து, என்னை பரிவு?

                                நாலடி 11. பாழ்வினை 10

      கருவுறும் பருவத்திலே ஊழ்கள் முடிவு செய்யப்பட்டு விடப்படுகின்றன. எனவே, அதன் செயல்கள் குறைவதுமில்லை, பெருகுவதுமில்லை. முறை தவறுவதுமில்லை ஆகும் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவியாகும். ஆகாக் காலத்தில் உதவிக்கு வாராது. எனவே அழியும் காலத்தில் அந்த அழிவைக் குறித்து இரங்குதலால் பயனில்லை.

வருவன வந்தே தீரும்

                அம் கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்

                திங்களும், திங்குறுதல் காண்டுமால் - பொங்கி

                அறைப் பாய் அருவி அணி மலைநாட

                உற்றபால யார்க்கும் உறும்

                                                பழ 15

                ஒரவர் அடையத் தகும் துன்பம் வந்தே திரும்.

ஊழே பெரிது

                எவ்வம் துணையாய பொருள் முடிக்கும் தாளாண்மை,

                தெய்வம் முடிப்புழி என்செய்யும் மெய்கொண்டு

                பூப்புக்கு வண்டு ஆர்க்கும் ஊர! குரும்பு இயங்கும்

                கோப்புக்குழி, செய்வது இல்.

      எத்துனைத் துன்பம் இடையிட்டுத் தடுப்பினும் நினைத்ததை முடிக்கும் முயற்சி உடையவனை வெற்றிபெற இயலாமல் ஊழ் எனும் தெய்வம் குறுக்கிட்டுத் தடுக்குமானால் என்ன செய்ய முடியும், பேரரசனின் ஆணையை  எதிர்த்துக் குறுநில மன்னன் செய்வது ஒன்றும் இல்லை.

ஊழே உயர்வானது

                சுட்டிச் சொல்லப்படும் பேர் அறிவினார்கண்ணும்,

                பட்ட இழிக்கம் பலவானால், பட்ட

                பொறியின் வகைய, கருமம் அதனால்

                அறிவினை ஊழே ஆகும். (பழ.203)

                சுட்டிப் பாராட்டப்பெறும் பேர் அறிவும் உடையவர் இடத்தும் குற்றங்கள் காணப்படுமானால் அதற்குகாரணம் அவர் செய்த முன் வினையே. ஆதலால் ஊழானது அறிவினை வென்று விடும் வினை பயனில் இருந்து தப்பமுடியாது

தலைவிதி

                அழ அமுக்கி முகத்தினும் ஆழ்கடல் நிர்

                நாழி முகவாது, நால்வாழி- தோழி

     நிதியும் கணவனும் நேர்படினும், தம்தம்

     விதியின் பயனே பயன்  

                                                வாக்குண்டாம் 19

      நாழியை கொண்டு கடலில் அமுக்கி மொண்டாலும் ஒரு நாழி நீரைத்தான் அது மொள்ளும். நீர் கடல் முழுவது அதிகம் நிறைந்துள்ளதால் நாழி நான்கு நாழி நீரை மொண்டுவிடாது. அதுப்போல பொருளும் கணவனும் ஒரு பொண்ணுக்கு கிடைப்பது அவரவர் வதியின் படிதான் அமையும்.

      நூறு கோடி ஆண்டானாலும் விதி விடாது.

      தானே புதிவினையான் சாரு மிருபயனுந்

      தானே யனுபவித்த றப்பாது தானுறு

      கோடிகற்பஞ் சென்றாலுங் கோதையே

      நாடி நிற்கும் மென்றார் நயந்து.  நிதிவெண்பா 47

      ஒருவன் செய்த விணைக்கு ஏற்ப நல்வினை தீவினை வந்தே தீரும். அதில் இருந்து தப்ப இயலாது. நூறுகோடி வருடம் கடந்தாலும் ஒருவர் செய்த வினை அவரைத் தேடி வரும்.

ஏழ்மையும் செல்வமும் முன்வினைப் பயன்

                உறற்பால நீக்கல் உறுவர்க்கும், ஆகா

                பெறற்பால் அனையவும் அன்னஆம்  மாறி

                வறப்பின், தருவாரும் இல்லை, அதனைச்

                சிறப்பின் தணிப்பாடும் இல்

                                                                                நலடி 11 பழவினை 4

                மழை பொழியாத போது விளைவிக்க வல்லவர் எவரும் இலர். அது மிகுதியாகப் பொழியும் போழ்து தணிப்பாரும் எவருமில்லர். அவற்றை போலவே ஒருவன் பழவினைகளால் பெற வேண்டிய அனைத்தையும் பெற்று இன்பமுடையவனாக இருப்பான் அவனை எவராலும் தடுக்கயிலாது.

                ஒருவன் பணக்காரனாக இருந்து சுகப்படுவதும் ஏழையாக இருந்தும் சோகப்படுவதும் முன்வினைப் பயன்கள். அதனை யாராலும் மாற்ற முடியாது. மனிதனால் ஆகக் கூடியது எதுவும் இல்லை.

வினைப்பயனே எல்லாம்

                தினைத் துணையார் ஆதி, தம்தேசு உள் அடக்கி

                பனைத் துணையார் பைகலும் பாடு அமிந்து வாழ்வர்

                நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம், மேலை

                வினைப்பயன் அல்லால் பிற

                                                நாலடி 11  பழவினை 5

                பனையின் அளவு பெரியவராக இருந்தும் தம் பெருமையைத் தம்முள் அடங்க வைத்து தினை அளவுவினராகச் சிறியராகிப்  பெருமை தொட்டு நாள்தோறும் வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருப்பர். அது அவர்தம் முன்வினைப் பயன்.

                ஒரு பிறப்பில் வாழ்ந்து உயர்வதும், தாழ்ந்து தளர்வதும் அவரவர் செய்த முன்வினைப் பயன்களைப் பொறுத்தே அமைகின்றன.

வினை கூடாது

                பல் அவுள் உயத்துவிடினும், குழக்கன்று

                வல்லதுஆம், தாய்நாடிக் கோடலை தொல்லைப்

                பழவினையும் அன்ன தனகத்தே, தற்செய்த

                கிழவனை நாடிக் கொளற்கு

                                                நாலடி பழவினை 1

பல பசுகள் இருந்தாலும் கன்று எவ்வாறு தம் தாய் பசுவை தேடி கண்டறிகிறதோ அதுப்போல ஒருவர் முன் செய்தவினை வினைக்கு உரியவனைத் தேடிப் பற்றிக்கொள்ளும்.

முடிவுரை

   நம் தமிழ் சமூகத்தில் ஊழ்வினை பற்றிய புரிதல் பண்டைய காலம் முதல் இன்று வரை நிலைவியுள்ளதை அறியமுடிகின்றது.  கன்று தன் தாய் பசுவை தேடி  அறிவதைப்போல ஊழ்வினை பற்றிக்கொள்ளும் என நாலடியார் கூறுவதை நோக்கும் போது ஊழவினையை அக்காலத்து மக்கள் போற்றிய விதத்தை அறியமுடிகின்றது.  சிலப்பதிகார காலகட்டத்தில் இருந்தே ஊழ்வினை பற்றிய தகவல்களை அறியமுடிகின்றது. வாழ்க்கையில் பல நேரங்களில் தொடர்ச்சியான இழப்புகள் நிகழத்தான் செய்கிறது; அக்காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் தடுக்க முயற்சி செய்தாலும் அது பயனற்று தான்போகின்றது. அத்தகு நேரங்களில் ஊழ்வினை என்று  கடந்து சென்றால்தான் நம் வாழ்வில் அடுத்த கட்டத்தை அடையமுடிகிறது. எனவே ஊழ் எனும் கோட்பாடு பல நேரங்களில் இக்கால கட்டத்திலும் தேவைப்படுகின்றது.

துணை நூற்ப்பட்டியல்

1)      ங்க இலக்கியம் சா வே சு.,  மணிவசாகர் பதிப்பகம் 2006

2)      நாலடியார் க. ப அறவாணன் தமிழ் கோட்டம் பதிப்பகம் 2010

3)      நீதி வெண்பா சாரத பதிப்பகம் 2006

4)      மூதுரை கன்னல் பதிப்பகம் 2012

5)      பழமொழி நானூறு சாரதா பதிப்பகம் 2010

6)      திருக்குறள் கழக வெளியிடு

7)      பதினெண் கீழ்கணக்கு நூல்கள் சா வே சு மணிவாசகர் பதிப்பகம்