சனி, 9 டிசம்பர், 2023

அதிய(க)மான்களின் சான்றுகள்

வில்_கல்வெட்டு.. சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சிசெய்த அதியமான்களை "சேர வம்சத்தவர்கள்" என திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் திருமலை கல்வெட்டும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள லட்டிகம் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. "ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா" (சமஸ்கிருதப்பகுதி, திருமலை கல்வெட்டு) ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி" "வஞ்சியர் குலபதி எழினி"(தமிழ்ப் பகுதி, திருமலை கல்வெட்டு) "கேரள அரசன் அதிகேந்திர வ்யாமுக்த ஸ்ரவனோஜ்வலன்" (சமஸ்கிருதப் பகுதி, லட்டிகம் கல்வெட்டு) "சேரனதிகன் திருநெடுமால் தென்தகடை வீரன் விடுகாதழகியான் பாரளந்து செங்கோடுபோலச் சிலையை வடதிக்களவுங் கங்கொட வெட்டினான் கல் மேதினி நீர் வேண்டில் விடுகாதழகியான் கோதில் புகழதிகன் கோயாற்றூராதி வடவிருங் கோளீச்சரத்தில் வைத்த சிலை மார்பிலிட விருங்கொள மன்னரிசைந்து" (தமிழ்ப் பகுதி, லட்டிகம் கல்வெட்டு) மேற்குறிப்பிட்ட "திருமலை" மற்றும் "லட்டிகம்" கல்வெட்டுகள், மழவர் குல அதியமான் மன்னர்களை சமஸ்கிருதத்தில் "கேரள அரசர்கள்" என்றும் தமிழில் "சேர மன்னர்கள்" என்றும் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களை "வஞ்சியர் குலபதி" (சேர வம்சம்) என்றும் "எழினி" என்றும் "விடுகாதழகியான்" என்றும் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம், #சித்தூர் மாவட்டம், புங்கனூருக்கு அருகில் இருக்கும் லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் கல்வெட்டு, அதியமான் விடுகாதழகிய பெருமாளை :- "திருமால் போன்ற அவன் வடதிசைக்குச் சென்று தன்னுடைய சின்னமான வில்லை பொறித்தான்" என்று தெரிவிக்கிறது. அக்கோயிலில் பல இடங்களில் தங்களது குலச் சின்னமான "வில்" சின்னத்தை மேடையில் அமர்த்தி, அதன் இருபுறங்களிலும் சாமரம் வீசுவது போலவும், அவ் "வில்லின்" சிற்பத்தின் மீது வெண்கொற்றக் குடையையும் அதியமான் விடுகாதழகிய பெருமாள் பொறித்துள்ளார். (#புகைப்படம் காண்க) இதன் மூலம் "மழவர் குல அதியமான்கள்", வில்லவர்களான சேரர்களின் வழித்தோன்றல்கள் என்பது முடிவாகிறது.
சோழர் காலக் கல்வெட்டுகளில் அதியமான் மன்னர்கள் தங்களை "தகடையர் காவலன்" என்றும் "தகடை மன்னன்" என்றும் "தகடை வீரன்" என்றும் குறிப்பிட்டனர். தகடூரை (தர்மபுரி) ஆண்ட காரணத்தினால் தங்களை அவ்வாறு குறிப்பிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில், பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடாதராயன்" என்று குறிப்பிட்டனர். அதாவது தங்களை "தகடூர் அதியரையன்" என்று குறிப்பிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், முழுவனப்பள்ளி என்ற ஊரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :- "ஸ்வஸ்திஸ்ரீ கா சம்வற்சரத்து குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாத. . . னான சேரமான் பெருமாளேந்" இதைப்போலவே, தருமபுரி மாவட்டம், அத்திமுட்லு என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், மேற்குறிப்பிட்ட முழுவனப்பள்ளி கல்வெட்டின் செய்தியையே குறிப்பிடுகிறது. அது :- "ஸ்வஸ்திஸ்ரீ கார சம்வற்சரத்து குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாதழகிய பெருமாளான சேரமான் பெருமாளேந்" மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகளில், தகடூர் அதியரையன் விடுகாதழகிய பெருமாள் அவர்கள், "சேரமான் பெருமாள்" என்று மிகத் தெளிவாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் குறிப்பிடப்படுகிறார். வெண்பா_கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள குந்துகோட்டையில் 13 ஆம் நூற்றாண்டில் தகடூரை(தருமபுரி, கிருஷ்ணகிரி) ஆட்சி செய்த ,அதியன் மரபை சேர்ந்த விடுகாதழகிய பெருமானின் கல்வெட்டை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. ஆய்வு மைய குழு, மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.இரா.பூங்குன்றன், திரு.தி.சுப்பிரமணி, திரு.வீரராகவன், அறம்கிருஷ்ணன், ப்யாரீப்ரியன், மஞ்சுநாத், சீனிவாசன், கணபதி, ஆகியோர் ஒன்றிணைந்து குந்துகோட்டையில் இருக்கும் கல்வெட்டை ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனியிலிருந்து அஞ்செட்டி போகும் சாலையில் குந்துகோட்டை வருகிறது.இங்கு உயரமான மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகளில் இரண்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளை குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் பல புதிய தகவல்களை தெரிவித்து பத்திரிக்கையாளர்களிடையே பதிவு செய்துள்ளனர். இக்கல்வெட்டு கி.பி.13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கல்வெட்டின் மேல் பகுதியில் ஒரு பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மேல் இரண்டு அடி உயரத்திற்கு வில் வரையப்பட்டுள்ளது. வில்லுக்கு மேல் பகுதியில் வெண்கொற்றக் குடை காட்டப்பட்டு உள்ளது.வலது பக்கம் சாமரம் மற்றும் குத்து விளக்கும்,அதே போல் இடது பக்கமும் சாமரம் மற்றும் குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது. பீடத்திற்குக் கீழ் இடது பக்கம் ஒரு முக்காலியின் மேல் கெண்டி வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் முதல்நான்கு வரிகள் கிரந்த எழுத்திலும், கன்னட மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு வரிகள் தமிழ் வெண்பா பாட்டு வடிவில் அமைந்து உள்ளது. இக்கல்வெட்டு ஸ்வஸ்த ஸ்ரீ என்று தொடங்கவில்லை. நேரடியாக அதியனின் புகழ்பாடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வெண்பா வடிவிலான கல்வெட்டு வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன. ~~~~~~~~~~~~~~~~ “பண்டோரு...க்குடித்தாழ வடுக பாவைர் தங் கண்டோர் நின்றோழகக் காய்ந்ததே-விண்டோயுங் குன்றால் நிரைகாத்த கொற்றக்குடை யதிகன் வென்றாரை வென்றான் கைவேல்” “போரணிகாட் டியபேயுங் குரங்கும் பொருகளத்துக் கோரணிகாட்டுங்கொடியல்லவே கொங்கர் மங்கையர் கண்ணிரனி காட்டிட பொருந்தோளதி கன்நிலம் காட்டுக்குச்சியுண் காட்டுக திருக்கொற்றவீரச் சிலைக் கொடிக்கே.” ~~~~~~~~~~~~~~~~ இதன் பொருள். பண்டையக்குடிகளுக்கு இடையில் போர்நடந்த போது குரங்கும் ,பேயும் கொடிகளை எடுத்துச் சென்றன.அந்தக் கொடிகள் எல்லாம் கொடிகள்அல்ல,. ஆனால் குன்றால் ஆநிறைகளைக் காத்த போருக்குரிய சிறந்த தோள்களை உடையவனும், மலையைத் தூக்கி ஆநிறைகளைக் காத்தவனுமான அதியனுடைய வில் கொடியே புகழில் உயர்ந்தது.போர் அணியாகசென்ற படை வகுப்பில் பேயும் குரங்கும் போர்க் கொடியை எடுத்து சென்றன.இந்த கொடிகள் புகழ்மிக்க கொடிகள் என்று சொல்ல முடியாது.தேன் நிறைந்த மலர் சூடிய கண்ணீரைப் போக்கும் வலிமை படைத்த அதியமானுடைய வெற்றி மிக்க வீரர்கள் எடுத்து சென்ற கொற்ற வில் கொடிக்கே புகழ் உரியது. இந்த கல்வெட்டின் சிறப்பு இப்பாடல்களில் வில்லை பற்றி புகழ்ந்து பாடப்படுகின்றது. பொதுவாக வில் சின்னம் பண்டைக்கால சேர மன்னர்களுக்கு உரியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்பாடலில் அதியமானுக்குரியதாக வில் கொடி கூறப்படுகிறது.மேலும் அதியமான்கள் சேரமரபினர் இனக்குடிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் சேரர் கொடிக்குரியவர்கள் என்பதை திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் திருமலை என்ற ஊரிலுள்ள சமண பள்ளியில் விடுகாதழகிய பெருமான் என்ற பிற்கால அதியமான் வஞ்சியர் குலபதி எழினி மரபில் வந்தவனாக கூறுகின்றது. இது அவர்கள் சேரமரபினருக்குரியவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.திருமலைக் கல்வெட்டும் பாடல் வடிவில் அமைந்துள்ளது. இச்செய்தி வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது. விடுகாதழகிய பெருமாளின் பாடல் வடிவில் அமைந்திருப்பது மேலும் பல கல்வெட்டுகளில் தெரியவருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த கம்பைநல்லூரின் பாடல் கல்வெட்டில் பார்க்கலாம். வடமொழியிலும்,தமிழ் மொழியிலும் தேர்ந்தவர் என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கல்வெட்டு விடுகாதழகிய பெருமான் என்று பெயரை கூறவில்லை என்றாலும் பாடல் மொழியில் தமிழ் மொழியும் ,கன்னட மொழியும் , பயன் படுத்தப்பட்ட தன்மை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. திருமலைக் கல்வெட்டில் வடமொழியும் குந்து கோட்டை கல்வெட்டில் கன்னடமும் பயன்படுத்தப்பட்டதற்கு காரணம் இருந்திருக்க வேண்டும். திருமலையில் சமஸ்கிருதம் தெரிந்த சமண முனிவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தமிழக கல்வெட்டை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கலாம். அந்த சமஸ்கிருதக் கல்வெட்டு சார்தூலம் என்ற பாட்டுவகையைச் சார்ந்தது.இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள கன்னட வாசகம் செய்யுள் வடிவில் இருக்க வாய்ப்புள்ளது. வில்கொடி இப்பாட்டில் குறிக்கப்படும் வில் மேலும் சிற்பவடிவில் அமைக்கப்பட்டுள்ள வில் ஆகியவை வில் அதியமானுக்குரியது என்பதை வலியுறுத்துகின்றது.பொதுவாக வில்கொடி சேரர்களுக்குரியதாக கருதப்படுகிறது.சங்க காலத்தில் வெளியிடப்பட்ட #கொல்லிப்புறை என்ற நாணயத்திலும் வில் தனியாகக் காட்டப்பட்டுள்ளது.. மேலும் கரூரில் கிடைத்த சில் நாணயங்களில் பெயர் பொறிக்காமல் வில்லை மட்டும் வரைந்து உள்ளனர். இந்த வில் வில்லோர் என்ற பழங்குடிக்குரிய வில்லாக இருக்கலாம். வில்லோருடைய தலைவன் பிட்டன் கொற்றன் ,சேரமன்னர்களின் படைத் தலைவனாக இருந்தவன் .பாட்டில் கொற்ற வீர சிலைக் கொடி என்ற வாசகத்தில் வரும் கொற்ற என்பது பிட்டன் கொற்றனையும், குறிக்கலாம். இடைக்கால சேரன்கள் பெரும்பாலான காசுகளில் யானையை பொறித்துள்ளார்கள். இதனால் சேர மரபினரின் ஒரு பிரிவினர் யானைக்குலத்தவராக இருந்திருக்கவேண்டும்.ஒரு சேர மன்னனுக்கு “யானைக்கட்சேய் மாந்தரக் சேரர்” என்ற பெயர் வருகின்றது. யானைகட்சேய் என்பது அவன் யானைக் குலத்தை சார்ந்தவனாக இருக்கலாம். வில்லோன் அதிய மரபினர் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் இரு குடிகளும் ஒன்றாக இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் வில்கொடி அதியமான்களுக்கும் உரியதாகியிருக்கலாம்.மேலும் பிட்டன் கொற்றன் இருந்த கரூர் பகுதியையும் இடைக்கால அதியமான்கள் தங்களின் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் கரூர் பகுதியில் தங்கியிருந்த போது வில் கொடி அவர்களுடையதாக இருக்கலாம் .மேலே காட்டப்பட்ட வஞ்சியர் குல பதி என்ற வாசகம் திருமலை வாசகம் அதியமான்களுக்கும் கரூருக்கு உரிய தொடர்பை வலியுறுத்துகின்றது. இந்த அடிப்படையில் வில் கொடி அதியமான்களுக்கு உரியதாகக் காட்டப்பட்டிருக்கலாம். நிரைக்காத்த ஆயன் பொதுவாகப் புராணக்கதைகளில் இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பூசலால் இந்திரன் தொடர்ந்து மழை பெய்ய வைத்து ஆநிரைகளையும்,ஆயர்களையும் அழிக்க முயற்சித்தான்.ஆனால் கிருஷ்ணன் கோவர்தன மலையை தூக்கி ஆயர்களையும் ,கால் நடைகளையும், மழையிலிருந்து பாதுகாத்தான் என்பது புனைமரபு. இந்த புனைமரபினை விடுகாதழகிய பெருமான் உடன் தொடர்புபடுத்தி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதிமான் மரபினர் தங்களை திருமால் பக்தர்களாகக் காட்டி கொண்டனர்.அதற்கு சான்றாக நாமக்கல் குடவறையிலுள்ள திருமாலின் உருவங்களைக் குறிப்பிடலாம். இப்பகுதி (தகடூர்)கால்நடை வளர்ப்பில் மேலோங்கி இருந்ததால் கால்நடை வளர்ப்பை பாதுகாத்ததை பெருமைப்படுத்தி ப்ரியமாக காட்டுகின்றது. இப்பாடல் சங்ககாலத்து அதியமான்களும் நிரைகாத்தலிலும் நிரைமீட்டலிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது புலப்படுகின்றது.கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பேடு ஒன்று இந்த மாடுபிடி சண்டைப் பற்றி பேசுகின்றது.இது தருமபுரிக்கு அருகில் உள்ள மலையனூரில் கிடைத்தது.இந்த பின்னணியில் ஆநிரைகளுக்கும், அதியமான்களுக்கும் இடையிலான தொடர்பு புலப்படும்.அதை வலியுறுத்தும் வகையில் குந்து கோட்டையின் கல்வெட்டு சான்றாக புலப்படுகின்றது. 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான "சேரமான் பெருமாள் நாயனாரின் வம்சத்தவர்" என்பதை உறுதிப்படுத்துகிறது. சேரமான் பெருமாள் நாயனாரின் சிற்பத்தொகுப்பு உலகப்புகழ் பெற்ற சோழர் கால கோயிலான தாராசுரம் கோயிலில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சேர அரசர் "ராஜா ராம வர்மா" அவர்கள், 63 நாயன்மார்களுள் ஒருவரான "சேரமான் பெருமாள் நாயனாரை", தங்களது வம்சத்து முன்னோர் என்று குறிப்பிடுகிறார். மேலும் தகவலுக்கு ==================== (1) நற்றிணை - 52. (2) தகடூர் யாத்திரை - 7. (3) S.I.I. Vol-I, No.75. (4) A.R.E, No.547 of 1906 & S.I.I. Vol-XXII, No.547. (5) ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள சேர குல அதியமானின் வில் சின்னம் பொறித்த கல்வெட்டு. (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு தொடர் எண் : 8/1975, பக்கம் - 148. (7) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு தொடர் எண் : 3/1973, பக்கம் - 152. (8) கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் கோயிலில் உள்ள சேரமான் பெருமாள் நாயனாரின் சிற்பத்தொகுப்பு. (9) T.A.S, Vol-V, No.96. (10) வன்னியர் மாட்சி, பக்கம் - 77, தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா. (11) S.I.I. Vol-III, No.59. ----- xx ----- xx ----- xx ----- #ப்யாரீப்ரியன் மீள்... https://m.facebook.com/story.php?story_fbid=4496936967055939&id=100002190405617

புதன், 13 செப்டம்பர், 2023

இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள்

இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள் நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றுள்ளது. சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினரே என்றும் மணிமேகலையில் உள்ளது. தீப வம்சமும் மணிமேகலையும் இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன, நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு முன்பே நாகநாடான இலங்கையை யாழ்ப்பாணம் நகரை கோநகராக்கி ஆழ்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர். தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு மணமுடித்து அவளுக்கு சீதனமாக தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான். யாழ்ப்பாண நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான். இப்போது யாழ்ப்பாண நாகராசனான மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தை பெரும் பெயரில் போர் தொடுக்கிறான். இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கி போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர். இதே கதையை மணிமேகலையும் கூறுகிறது. தமிழ் புலவர்கள் தமிழ் சங்கங்களில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் தன் இலக்கியங்களை அறங்கேற்றியுள்ளனர். அவர்கள், புறத்திணை நன்னாகனார் மருதன் இளநாகனார் முரஞ்சியூர் முடிநாகராயர் வெள்ளைக்குடி நாகனார் சங்கவருணர் என்னும் நாகரியர் தொடர்ச்சி.......

திங்கள், 19 ஜூன், 2023

தமிழ் இலக்கியத்தில் பேய்! -

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம் இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். பெண்ணின் மீது ஆண் செலுத்திய ஆதிக்க மனோபாவமும், வன்முறை வெறியாட்டமும் அவள் இறந்தவுடன் பழியெடுக்கக்கூடும் என்ற பய உணர்வுமே அவள் பேயாய் வருவதாக நம்பினான். கடைச்சங்க காலத்தில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனப் புலவர்களுக்கும் அருளாளர்களுக்கும் பெயர்கள் வழங்கி வந்துள்ளன. "பேய்' என்னும் சொல் அச்சுறுத்துவது, அஞ்சுவது என்னும் பொருள்படும். அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப் பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி(சடைமுனி) அரமகள், அணங்கு எனப் பேய் இனம் பலதிறந்ததாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச்சாத்தான் என்பர். பேய்களில் காட்டேறி, தூர்த்தேறி முதலிய பலவகைகள் இருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம், பெரும்பூதம் என இரு வகை உண்டு. சூர், சூர்மகளிர், சூர்அர மகளிர், வரை அரமகளிர், வான் அரமகளிர் முதலிய பெயர்களில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் அணங்கும் சக்திகளாகும். இவற்றின் பெயரால் சூள் (சத்தியம், ஆணை) உரைத்த வழக்கமும் அன்று இருந்துள்ளது. சூள் பொய்த்தால் சூள் உரைத்தவரையும் தவறு செய்வோரையும் அந்தத் தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சம் இருந்தது. இதுவே பின்னர் "பூதம்' என்று அழைக்கப்பட்டது ""குண்டைக் குறப்பூதம்'' என்கிறது தேவாரம் ( 944:1). அக்காலத்தில் போரில் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாதவாறு, பெண்களும், உறவினரும் வேப்பந் தழையை வீட்டில் செருகியும், மையிட்டும், வெண் விறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சதுப்பு நிலங்களில் அழுகிய பொருள்களிலிருந்து கிளம்பும் ஆவியும் (Gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு "கொள்ளிவாய்ப் பேய்' என்பது மக்களின் அறியாமையே ஆகும். நீர் நிலைகளெல்லாம் வற்றி, வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழுங்காடாதலால், பிணந்தின்னும் பேய்களுக்குத் தலைவியாகிய காளியே அவற்றுக்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப்பரணிப் பகுதிகளாலும் அறியலாம். ""ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு'' (புறநா. 356) என்று பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள். ""பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்றார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்). இக் கூற்றிலிருந்து பேய்க்கும் பிணத்துக்கும் ஒரு தொடர்பு கூறப்படுகிறது. ""பெருமிழலைக் குரும்பர்க்கும் பேயர்க்கு மடியேன்'' என்று காரைக்கால் அம்மையாரைப் போற்றுகிறது திருத்தொண்டத் தொகை. ""வயங்குபன் மீனினும் வாழியர் புலவென உருக்கெழு பேய்மக ளயர்'' (புறநா.371:25-26) என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார், "அரசன் பல்லாண்டு வாழ்வானாக' என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதைக் கூறியுள்ளார். இத்தகைய செய்திகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மேலும், "காடுபடர்ந்து கள்ளி மிகுந்து பகற்காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்து விட்டெரியும். அங்கு அகன்ற வாயையுடைய பேய் மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர்' என்றும் பாடியுள்ளார் (புறநா.356:1-4) கதையங்கண்ணனார் என்னும் புலவர். ""பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்'' (புறநா.359:1-8) என்று சுடுகாட்டில் நிகழ்வதைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறார் காவிட்டனார். போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களை உடைய யானை பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறை தலைப்பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள் என்று பாடியுள்ளார் (மதுரைக்காஞ்சி.24-28) மாங்குடி மருதனார். பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் பெற்ற பேய் வடிவத்துக்கு விளக்கம் கூறும் உரைக்காரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""காரைக்காலம்மையார் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளால் பெற்ற உடம்பு இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதலிய புறக்கரணங்களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்'' என்கிறார்(காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருநூல்களும் பக்.52). ஆனால், சாதாரணமான பேய்களோவெனின், வடிவற்ற வாயு உடம்பு அல்லது சூக்கும உடம்பு உடையன என்பது கருத்தாகும். பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பதும், சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் நன்கு புலனாகிறது

சிலப்பதிகாரத்தில் பேயும், பூதமும்

நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினர். இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல பேய்கள் பூதம் பற்றிய குறிப்புகள் சுட்டப்படுகின்றன. சிலம்பில் பல பேய் பற்றிய குறிப்புகளில் “கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிக் விவரிக்கிறது. வனசாரினி என்ற வன தேவதையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இயம்புகிறது. குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. கொல்லிப் பாவை பற்றியும் மிக விரிவாக சிலம்பு சுட்டுகின்றது. பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியிடமிருந்து கோவலன் தன்னைக் காத்துக் கொள்கிறான் என்கிறது சிலம்பு. யார் இந்த வனசாரிணி, யார் இந்த பாய் கலப் பாவை? வனசாரிணி என்பது மோகினிப்பேய் அல்லது வன தேவதை. பாய்கலப்பாவை என்பது கொற்றவை தான் என பதில் கூறுகிறது சிலம்பு. சிங்கம் மட்டுமல்ல; மானும் கூட அவளுக்கு ஒரு வாகனமாம். நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலம்பில் காட்சிகள் உள்ளன. அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் பற்றியும் சிலம்பு பேசுகிறது. சிலம்பில் ஆவி வழிபாடு மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றது. “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” என்று இந்திரனின் ஏவலால் பூதம் வந்து நகரைக் காத்ததை சிலம்பு சுட்டுகிறது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. இன்றைய சிறு தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படையாக அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.