திங்கள், 19 ஜூன், 2023

தமிழ் இலக்கியத்தில் பேய்! -

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம் இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். பெண்ணின் மீது ஆண் செலுத்திய ஆதிக்க மனோபாவமும், வன்முறை வெறியாட்டமும் அவள் இறந்தவுடன் பழியெடுக்கக்கூடும் என்ற பய உணர்வுமே அவள் பேயாய் வருவதாக நம்பினான். கடைச்சங்க காலத்தில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனப் புலவர்களுக்கும் அருளாளர்களுக்கும் பெயர்கள் வழங்கி வந்துள்ளன. "பேய்' என்னும் சொல் அச்சுறுத்துவது, அஞ்சுவது என்னும் பொருள்படும். அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப் பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி(சடைமுனி) அரமகள், அணங்கு எனப் பேய் இனம் பலதிறந்ததாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச்சாத்தான் என்பர். பேய்களில் காட்டேறி, தூர்த்தேறி முதலிய பலவகைகள் இருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம், பெரும்பூதம் என இரு வகை உண்டு. சூர், சூர்மகளிர், சூர்அர மகளிர், வரை அரமகளிர், வான் அரமகளிர் முதலிய பெயர்களில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் அணங்கும் சக்திகளாகும். இவற்றின் பெயரால் சூள் (சத்தியம், ஆணை) உரைத்த வழக்கமும் அன்று இருந்துள்ளது. சூள் பொய்த்தால் சூள் உரைத்தவரையும் தவறு செய்வோரையும் அந்தத் தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சம் இருந்தது. இதுவே பின்னர் "பூதம்' என்று அழைக்கப்பட்டது ""குண்டைக் குறப்பூதம்'' என்கிறது தேவாரம் ( 944:1). அக்காலத்தில் போரில் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாதவாறு, பெண்களும், உறவினரும் வேப்பந் தழையை வீட்டில் செருகியும், மையிட்டும், வெண் விறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சதுப்பு நிலங்களில் அழுகிய பொருள்களிலிருந்து கிளம்பும் ஆவியும் (Gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு "கொள்ளிவாய்ப் பேய்' என்பது மக்களின் அறியாமையே ஆகும். நீர் நிலைகளெல்லாம் வற்றி, வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழுங்காடாதலால், பிணந்தின்னும் பேய்களுக்குத் தலைவியாகிய காளியே அவற்றுக்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப்பரணிப் பகுதிகளாலும் அறியலாம். ""ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு'' (புறநா. 356) என்று பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள். ""பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்றார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்). இக் கூற்றிலிருந்து பேய்க்கும் பிணத்துக்கும் ஒரு தொடர்பு கூறப்படுகிறது. ""பெருமிழலைக் குரும்பர்க்கும் பேயர்க்கு மடியேன்'' என்று காரைக்கால் அம்மையாரைப் போற்றுகிறது திருத்தொண்டத் தொகை. ""வயங்குபன் மீனினும் வாழியர் புலவென உருக்கெழு பேய்மக ளயர்'' (புறநா.371:25-26) என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார், "அரசன் பல்லாண்டு வாழ்வானாக' என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதைக் கூறியுள்ளார். இத்தகைய செய்திகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மேலும், "காடுபடர்ந்து கள்ளி மிகுந்து பகற்காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்து விட்டெரியும். அங்கு அகன்ற வாயையுடைய பேய் மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர்' என்றும் பாடியுள்ளார் (புறநா.356:1-4) கதையங்கண்ணனார் என்னும் புலவர். ""பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்'' (புறநா.359:1-8) என்று சுடுகாட்டில் நிகழ்வதைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறார் காவிட்டனார். போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களை உடைய யானை பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறை தலைப்பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள் என்று பாடியுள்ளார் (மதுரைக்காஞ்சி.24-28) மாங்குடி மருதனார். பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் பெற்ற பேய் வடிவத்துக்கு விளக்கம் கூறும் உரைக்காரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""காரைக்காலம்மையார் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளால் பெற்ற உடம்பு இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதலிய புறக்கரணங்களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்'' என்கிறார்(காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருநூல்களும் பக்.52). ஆனால், சாதாரணமான பேய்களோவெனின், வடிவற்ற வாயு உடம்பு அல்லது சூக்கும உடம்பு உடையன என்பது கருத்தாகும். பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பதும், சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் நன்கு புலனாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக