வியாழன், 25 மார்ச், 2021

தருமபுரி வன்னியர்குல சத்ரியரின் திருமணச் சடங்கு முறைகள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 

  


 
         

    தமிழகத்தின் பெரும்பாண்மை சமுகமாக  வன்னியர்குல சத்ரியர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அதிகபேர் வசிக்கின்றனர்.  

வன்னியர் மிகக் கட்டுப்பாடு உடையவர்கள் பண்பாட்டில் சிறிதளவும் குற்றம் குறை ஏற்படாமல் நடந்துகொள்பவர்கள்;. திருமணம் என்பது முக்கிய நிகழ்வாக கருதி இன்றும் அத்திருமணத்தில்  பெண்பார்த்தல், நலங்குவைத்தல், பந்தல்போடுதல், அரசாணி நடுதல், குந்தாணிவைத்தல், ஊர் அழைப்பு, கோத்திரம், பட்டம் அணிதல், பூனூல் அணிதல், தாலிகட்டுதல், மறுவீடு அழைத்தல் போன்ற சடங்கு முறைகளை பின்பற்றி வருவதை இக் கட்டுரை எடுத்துரைக்கிறது.

திருமணம்

    மனிதன் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்குச் செல்ல பாலமாக இருப்பது திருமணம் எனும் பந்தமாகும். நம் பண்பாட்டில் பன்நெடுங்காலமாக வேரூன்றியுள்ளது இத் திருமண நிகழ்வு. திருமணம் காதல் திருமணம், நிச்சயக்கபட்ட திருமணம் எனும் இருவகை நம் இந்திய கலாச்சாரத்தில் உள்ளது.

     பெரியோர்களால் நிச்சயக்கபட்ட திருமணம் போற்றதக்கதாக இன்றும் விளங்குகிறது. ‘திருஎன்பது தெய்வத்தன்மை எனவும். ‘மணம்;’ என்பது இணைதல் எனவும் அழைக்கப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்

திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்வாக நல்ல நேரத்தில் தாலி கட்டுதல் ஆகும். இதனை மாங்கல்ய தாரணம் எனக் கூறுவர். தாலிகட்டியதும் அப்பெண் சுமங்கலி அதாவது திருமணமானவள் எனும் தகுதி பெறுகின்றாள். அந்தத் திருமணம் தாமறிய ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே கற்பு வாழ்வாகும.;

பெண்பார்த்தல்

    தாங்கள் பார்த்த பெண்ணைப் பிடித்திருந்தால் பெண் வீட்டாருக்கு இந்த நாளில் மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்களாம், உங்களுக்கு சம்மதமா என்று ஒருவர் முலம் சொல்லி அனுப்புவார்கள்  மாப்பிள்ளைவீட்டார்.

 தமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஆட்கள் செல்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் குறிப்பிடும் நாளிலேயே பெண்வீட்டார் வரச் சொல்வார்கள்.

பரிசம் போடுதல் (பெண்ணை உறுதி செய்தல்)

     பெண்வீட்டாரும் பையனைப் பற்றி எல்லா குணநலன்களையும் அறிந்த பின்னர்; உறுதி செய்வார்கள். இதைப் பரிசம் போடுதல் என்கின்றனர். முறை மாப்பிள்ளை இருந்தால் அவர்களின் சம்மதம் கேட்டுதான் மற்றவர்களுக்கு பேசி முடிப்பார்கள். இல்லை என்றால்  முறை மாமனுக்கு பேசி முடிப்பார்கள்

    பெண்ணை உறுதி செய்ய  புது புடவை, தங்கம், வெற்றிலை மூன்று பாக்கு, தங்கம் 5 சவரன் அல்லது 3 சவரன் மணப்பெண்னுக்கு நிச்சயதார்தத்தில் மணமகன் வீட்டார் வழங்குவார்கள் (வசதியை பொருத்தது). இதன் மூலம் இந்த ஆணுக்கு இந்த  பெண் என்று உறுதி செய்யப்படுகிறது.

நலங்குவைத்தல்

    நலங்கு என்பது மஞ்சள் கொம்பை அரைத்துக் குழம்பாகக் கரைத்து பெண், ஆண் இருவருக்கும் உடலில் பூசுவதாகும். பெண்ணிற்கு மணநாள் 11 நாள் இருக்கும்போதே நலங்கு  வைப்பார்கள்.

 பெண்ணிற்கு தாய்மாமன் தான் நலங்கு வைக்கவேண்டும் அது அவர்கள் உரிமையாகக் கூறப்படுகிறதுமுதல் நாள் நலங்கு வைத்து நீராடியப்பின் மாப்பிள்ளை கையில் ஈட்டியோ அல்லது கத்தியோ கொடுப்பர் இன்னும் நடைமுறையில் இச்சடங்கு உள்ளது.

பந்தல் அமைத்தல்

    ஊரில் யார் திருமணம் நடந்தாலும் சம்பந்தி முறை உள்ளவர்கள் வீட்டுக்கு ஒருவர் வந்து பந்தல் அமைப்பார்கள். திருமணத்திற்கு ஒருநாள் முன்பே பந்தல் அமைக்கப்படுகிறதுஇரட்டை எண்ணிக்கையில் வீட்டின் வாசல் அளவுக்கு ஏற்ப கொம்புகள் நடப்படுகின்றன.

 மேல் பக்கவாட்டில் ஒருக்கொம்புடன் மற்றொரு கொம்பை இணைத்துக்கட்டி மேற்பகுதில் தென்னை ஓலைகளைப் போர்துவார்கள். சுவர் போல் நான்கு பக்கமும் அமைக்கின்றனர். இத்துடன் புங்கன், வேப்பிலை இலைகளையும் தொங்கவிடுகின்றனர்.

அரசாணி நடுதல்

    மணப்பந்தல் முடிந்ததும் அடுத்து மணமேடையின் முன்புறம் இலைகளுடன் அரசாணிக்கொம்பு நடுகின்றனர். மணநாள் அன்று கலையும் அரசாணியும் நடப்படுகிறது. வெப்பாளமரத்தில் மூன்று கிளை சேர்ந்த கொம்புகளும் மற்றும் அரச இலை, பச்சைமூங்கில்  சேர்த்து அரசாணி நடுகின்றனர்

நவதானியங்களை மஞ்சள் துணியால் முடித்து கட்டுகின்றனர். இதை மாமன் முறையுள்ளவர்களே செய்கின்றனர். இம்முறை இவர்களின் கடமையாகவும் உரிமையாகவும் பார்க்கப்படுகிறது

சாலங்கரகம்

    சாலக் கரகம் என்று பேச்சு வழக்கில் இதை அழைப்பார்கள். இரவு ஏழு மணியளவில் மணவீட்டில் இருந்து இன்னிசை முழக்கங்களுடன் வண்ணான் தீவட்டி பிடித்துக்கொண்டு முன் செல்ல குயவன் பெரிய குடம் ஒன்று, சிறிய குடம் ஒன்று, அதைவிட சற்று சிறியதாக உள்ள குடம் ஒன்று குடத்தின் மேல் மூட, தேவையான மூடிகள் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கு போதுமான அளவு அகழ்விளக்கு போன்றவற்றை வழங்குவான்

    சாலக்கரக குடங்களின் மேல் அரிசிமாவால் படங்களை வரைந்து அழகுப்படுத்துவர். சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களால் அலங்கரிப்பர்.

 குயவனிடம் மாப்பிள்ளை வீட்டார் பூசைப்பொருட்களை வழங்கிவுடன் வழிப்பட்டு குயவன் மணமகன் வீட்டாரிடம் சாலக்கரகங்களைத் தருவான். இன்னிசை முழுங்க பறைகொட்ட சாலக்கரகம் எடுத்துக்கொண்டு முன் செல்ல அவர் பின் மணமகன் வீட்டார் மணப்பந்தலை நோக்கி செல்கின்றனர்.

 

குந்தானி வைத்தல்   

குந்தானி பழங்காலத்தில் தாணியங்கள் இடிக்க பயன்படுத்த பட்டன. நாட்டுப்புற மக்கள் தமக்கு எது எளிதில் கிடைக்க கூடியதோ அதை சடங்கு உள்ளிட்ட தம் வாழ்வோடு இணைத்துள்ளனர்.

    அரசாணியின் அருகில் மூன்று இடங்களில் முளைப்பாரிகளைக்  கட்டி அதன்மீது ஒவ்வொரு இடத்திலும் சாலங்காரகச் சட்டிகளை வைத்து அதில் மூன்று சுமங்கலிப் பெண்கள் மூன்று குடங்களில் தண்ணிரைக் கொண்டுவந்து சாலக்கரகங்களில் வழிய வழிய ஊற்றி விட்டு அகல்களைக் கொண்டு மூடிவைப்பார்கள்.

 சிறிய மூடிகளில் அரச மர இலையை வைத்து முளைகட்டிய தாணியங்களை நிரப்பி வைப்பார்கள். அதன் அருகிலேயே குந்தானியைக் கவிழ்த்துவைத்துவிட்டு  குந்தானியின் மேலுள்ள வட்ட வடிவ ஓட்டைச் சுற்றி ஒரு நில சாணத்தை வைப்பார்கள்.

  சாணத்தின்மேல் எள் எண்ணெய் ஊற்றி ஒரு வெள்ளைத் துணியில் திரி செய்து அகலில் வைக்க வேண்டும். மாமன் முறையுள்ளவர்கள் பூசை செய்வார்கள், இந்த விளக்கு மூன்று நாட்கள் அணையாமல் பந்தலில் பாதுகாப்பார்கள்விளக்கு மூன்றுநாள்கள் எரியவிடப்படுகின்றன.

பெண் அழைப்பு

    ஊருக்கு வெளியே அம்மன் கோவில் அருகில் பெண்வீட்டார் நின்றிருப்பதாக மாப்பிள்ளை வீட்டார்க்குச் சொல்லியனுப்புவார்கள். மாப்பிள்ளை வீட்டார்கள் பானகம் தயாரித்து எடுத்துக்கொண்டு ஊர்கவுண்டருக்கு(வன்னியர்) மரியாதை வழங்கி அவரை அழைத்துக்கொண்டு ஊரே திரண்டு மணப்பெண்வீட்டார் நின்றுள்ள இடத்திற்கு சென்று தாம்பூலம், பானகம் கொடுத்து மேளதாள இன்னிசையுடன் பெண்வீட்டாரை முறைபடி அழைத்து செல்கின்றனர்.

 அம்மன் கோவில் மற்றும் குல தெய்வ கோவில் இருந்தால் அங்கு பூசை செய்யப்படுகிறது. பின்னர் மணபந்தல் நோக்கி அழைத்து வரப்படுகின்றனர்மணபந்தலில் நுழைந்து அரசாணியை வணங்கிய பின் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யபடுகிறது. தருமபுரி பகுதில் எந்த ஊரில் திருமணம் நடந்தாலும் பெண் அழைப்பு சிறப்பாகச் செய்யபடுகிறது.

தாய்மாமன் சிறப்பு

    மனித உறவுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புக்கொண்டது. நமது உறவுகள் நம்மை விட்டு எந்த சூழ்நிலையிலும் விலகாமல் இருக்கவே சில நெருங்கிய சொந்தங்கள் சடங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தாய்மாமன் எனும் உறவுக்கு திருமணத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுவதைக் காணமுடிகிறது.

    மணப்பெண், மற்றும் ஆண் இருவருக்கும் தாய்மாமன் சீர் செய்வது அவர்கள் உரிமை மற்றும் கடமையாகும்தாய்மாமன் சீர் செய்யும் சிறப்பின்போது தாய்மாமனின் பெருமைகள் சுட்டப்படுகிறது. நலங்கு நிகழ்வின்போது தாய்மாமன் புதுப்பெண்ணுக்கு கால்மெட்டி மற்றும் நெற்றிப்பட்டம் வளையல், புத்தாடை  போன்றவை சீராகத் தரவேண்டும்.

    மணமகனுக்கும் அவரின் தாய்மாமன் நலங்கு வைக்கும்போது புத்தடை, நெற்றிப்பட்டம் மற்றும் பூணூல்  சீர் வரிசை முதலியன சீராக மணமகனின்தாய்மாமன் சிறப்பு செய்வார்.

 

பட்டம் கட்டுதல்

    தாய்மாமனுக்குறிய உரிமையாக பட்டம் வழங்குதல் பார்க்கபடுகிறது. தாய்மாமனின் பட்டத்தை மட்டுமே அணியவேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படுகிறது

பூணூல் அணிதல்

    வன்னியர் குல சத்ரியர் திருமணத்தில் மணமகன் கட்டாயம் பூணூல் அணிகின்றனர். பூணூல் இச்சமுகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பூணூல் அனைவரும் அணிவது இல்லை. திருமணத்தில் மட்டுமே பூணூல் இடம்பெறுகிறது.

தாலி அமைப்பு         

    பண்டைய சமுகங்கள் ஒவ்வென்றிற்கும் ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. அதுப்போல வன்னியர் குல சத்ரியர் தாலிமுறையும் சிறப்பு வாய்ந்ததாக தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்கத்தால் ஆன விநாயகர் உருவம்போல் இச்சமுகத்தின்  தாலி காணப்படுகிறது.  

மணமகள் அமர்தல்

     ஒவ்வொரு சமுகத்திலும்; திருமணத்தின் போது பெண்களை அமரவைக்கும் முறை மாறுபட்டு காணப்படுகிறது. வன்னியர் குல சத்திரியரில் மணமகளை மாப்பிள்ளையின்  வலது பக்கம் அமரவைத்து தாலி கட்டுகின்றனர்

தாலி கட்டுதல்

    பெண் அழைப்பு முடிந்த உடன் மற்ற வேலைகளை இருவீட்டாரும் சேர்ந்து செய்து முடிப்பார்கள். விடியற்காலையில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சுமங்கலிகள் மூன்று பேர்  நலங்கு வைப்பார்கள்

பெண்ணுக்கு தாய்மாமன் செய்த சீரில் உள்ள எண்ணையைத் தலைக்குத் தேய்த்து குளிக்க சொல்கின்றனர். மணமகனுக்கு பெண்ணின் சகோதரர்கள் எண்ணை தேய்த்து விடுகின்றனர்.

    மணமகன் விநாயகரை வணங்கி முகூர்த்த புடைவையை விநாயகர் மடியில் வைத்து படைத்து பின்னர் மணப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. மணப்பெண் அந்த புடவையைக் கட்டிக்கொண்டு மணவரையில் அமரவேண்டும் இப்புடவையை கூரப்புடவை என்று அழைக்கபடுகிறது

மணமக்களின் பெற்றோர்கள் எதிர் எதிரே நிறுத்தி கோத்திரம் சொல்ல வைக்கப்படுகிறது. இருவர் கைகளிலும் வெற்றிலைப்பாக்கு தேங்காய் வைத்திருப்பார்கள். இதன் மூலம் இருவரும் சம்பந்திகளாக மாறிக்கொள்வார்கள். பிறகு முக்காலிகள் வைத்து அதன் மீது முருக்கன் இலையில் உப்பும், அரிசியையும் தனித்தனியாக வைப்பார்கள்

அதனை மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் மாறிமாறி தமது கைகளில் மாற்றிக்கொள்கின்றனர். மணப்பெண் கைகளில் உப்பு வைத்து அதன்மீது வெற்றிலைப்பாக்கு தேங்காய் வைத்து அதன்பின் மணப்பெண்வீட்டார்கள் அனைவரும் அந்த தேங்காய் மீது பால் ஊற்றுவார்கள் இதற்கு தாரை வார்த்தல் என்றுபெயர்பின்னர் மணமகன் கையில் மூத்தோர் தாலி எடுத்துக்கொடுக்க உடன் மணப்பெண் கழுத்தில் தாலி காட்டுவார் மணமகன்.

மணமகன் தாலி கட்டி முடிந்தவுடன் முடிச்சை இடக்கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் திருநீறு, மஞ்சள், குங்குமம் எடுத்து நெற்றியிலும், தாலியிலும் பொட்டு வைப்பார். மணமக்கள் இருவரும் சுண்டு விரல் பினைந்த நிலையிலும் , இருவரின் துணியின் நுனிப்பகுதி கட்டியும் அக்னியை வலம்வருவர். பின்னர் மற்ற சடங்குகள் நிகழ்தப்படுகிறது

    மணமகனின் காலில் தாய்மாமன் மெட்டி அணிவிப்பார், மணப்பெண்ணிற்கு மணமகன் மெட்டி அணிவிப்பார். மணமகளின் தாயார் மாப்பிள்ளையின் கால்களுக்கு மஞ்சள் குங்குமம் இடுவார். மணமக்கள் தம் பெற்றோர்களின் பாதம் பணிந்து ஆசிபெறுகின்றனர்.

மணமகன் வீடு அழைப்பு

    திருமணம் மணமகன் வீடு அல்லது மண்டபத்தில் நிகழ்கிறது. திருமணம் முடிந்ததும்  தம்பதியர் மணமகள் வீட்டிலே தங்குகின்றனர். மூன்று நாள் அங்கே தங்குகின்றனர். மூன்று நாளுக்கு பிறகு மணமகன் வீட்டில் இருந்து இரட்டை படை எண்ணிகையில் வந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு மணமகன் வீட்டிற்குச் செல்கின்றனர்

    இந்நிழ்வின் போது மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு சிறப்பு செய்வார்கள். மனமகள் வீட்டார் ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, காய்கறிகள், இரசம் போன்றவை சமைத்து விருந்தளிக்கின்றனர்.  

பெண்வீட்டார் மறுவீடு அழைப்பு

    மணகன் வீட்டில் பெண் இருப்பதால் பெண்வீட்டார் மண மகன் வீட்டிற்கு மணமகன் வீட்டார் அழைத்து வந்த நாளில் இருந்து ஐந்து நாட்கள் கழித்து செல்வார்கள். மணமகள் வீட்டார் செய்த விருந்தைப்போல் மணமகன் வீட்டார் விருந்து தருவார்கள். மறுவீடு அழைப்பில் மட்டுமே இருவிட்டாரும் அசைவ உணவு பரிமாறுகின்றனர். திருமணத்தில் சைவ உணவே பறிமாறப்படுகிறது.

முடிவுரை

    இந்தியாவில் உள்ள எல்லா சமுகங்களும்  ஒரு குறிப்பிட்ட சடங்கை பாரம்பரியமாகக் பண்ணெடுங்காலமாக தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர். அதுப்போல வன்னியர் குல சத்ரியர்களும் திருமணத்தின் போது பல்வேறு சடங்குகளைப் பின் பற்றுகின்றனர். சடங்குகள் எளிமையானதாகவும் மக்களின் வாழ்வியலுடன் பிணைந்து காணப்படுகிறது.

    இது போன்ற சடங்கு முறை வன்னியர் குல சத்ரியரிடையே வழி வழியாகப் பின்பற்றபடுகிறது. திருமணம் வாழ்வில் மிகவும் இன்றியமையாத பகுதி என்பதால் சடங்குகள் அதிகமாகவே பின்பற்றபடுகிறது. இன்றைய சூழ்நிலைகளில் திருமணசடங்குள் சில எளிமையாக்கப்பட்டுள்ளன.   

by. A RAJKUMAR . Ma.,Mphil. 



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக