
வெற்றிச் சிறப்பு
“காதலும் போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும் விஞ்ஞானமும் மனிதவியலும் இக்கால இலக்கியங்களின் பிரிவாகவும் அமைந்துள்ளன|| என்று பூர்ணலிங்கம் பிள்ளை கூறுவார். அவ்வாறு காதலும் போரும் பற்றி கூறிய பழைய பாடல்களை கடல்கோளும் கறையானுக்கும் போக எஞ்சி நின்றவையே சங்க இலக்கியங்கள் என தொகுத்தனர். இவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகும். இவற்றுள் எட்டுத்தொகை அகம்,புறம், அகப்புறம் என பிரிக்கப்பட்டுள்ளது. புறப்பொருள் பற்றி கூறுவன புறநானூறும், பதிற்றுப்பத்தும் ஆகும். ஆகவே பதிற்றுப்பத்தின் வெற்றிச் சிறப்பினை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையாகும்.
பதிற்றுப்பத்து விளக்கம்
சேர நாட்டு அரசர் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப்பத்து பாடல்களாக பாடிய 100 பாடல்களின் தொகுப்பு அந்தாதி வகை இலக்கியத்திற்கு வித்திட்ட நூல் இது. ‘எரிஎள்ளு வன்ன நிறத்தன் எனும் கடவுள் வாழ்தூது அமைந்துள்ளது முதற்பத்தும், இறுதிபத்தும் கிடைக்கப்பெறவில்லை. எட்டுப்பத்துக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எல்லாப் பாடல்களும் பாடாண் திணையில் அமைந்துள்ளன. வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை பயன்படுத்தியதால் ‘இரும்புக்கடலை|| எனப் போற்றப்படுகிறது ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு பெயர் என்பன குறிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த சேர மன்னர்களைப் பற்றி கூறுவது. 18 வகையான துறை வகைகளை குறிப்பிடுவது. அவற்றில் 8 துறைகள் பற்றி தொல்காப்பியர் சுட்டாத பதிய துறைகளாகும். அனைத்துப் பாடல்களும் பாடாண் திணையிலே அமைந்துள்ளன.
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங்காலை நாலிரண் டுடைத்தே||
(தொல்.புறத்.78)
எனும் தொல்காப்பிய நூற்பாவின்படி பாடாண் திணைப் பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இவை எட்டு வiயினை உடையது. கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை, கைக்கிளை வகை வசைவகை என்பன. பாட்டுனத் தலைவனைப் புகழ்தலால் இது பாடாண்பாட்டு எனப்படும்.
அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)
சேரர்கள் இருபிரிவினராக பிரிந்து நாடாண்டு உள்ளதை இலக்கியம் வழி அறிய முடிகிறது. அவை
வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்
இமையவரம்பன் 58 ஆண்டுகளும், இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகளும,; இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகளும், இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் 55 ஆண்டுகளும், இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகளும் வஞ்சியில் இருந்து ஆண்டுள்ளனர்
கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்.
செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் 25 ஆண்டுகளும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகளும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகளும் கருவூரில் இருந்து நாடாண்டனர்.
வெற்றிச்சிறப்பு:
தொல்காப்பியர் தனது புறத்திணையியலில் குறிப்பிடுவது.
“போந்தை வேம்பே யாரென வருஉ
மாபெரும் தானையர் மலைந்த பூவும் (தொல்.புறத்.5)
என்பதன் மூலம் சேரர்மாலையாகிய போந்தையை முற்படவைத்து பாண்டியர் மாலையை அதன்பின் வைத்து சோழர் மாலையை இறுதியாக குறிப்பிடுவதன் மூலம் சேரரின் புகழ் வெற்றி பெருமையை அறியலாம். இம் முறையே சங்க நூல்களிலும் காணப்படுகிறது. புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய சேரராகிய ஐயனாரிதனாரும் தன் நூலின் பொதுவியல் படலத்தில் இம்முறையையே கூறுகின்றனார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வெற்றி:
இமயவரம்பன் கரூரை தலைநகரமாக கொண்டவன். இவரின் பெற்றோர்கள் உதியஞ்சேரலாதன் வேளியன் வேண்மாள். இவன் வடவரை வெற்றி கொண்டதால் இமயவரம்பன் என்ற பெயர் பெற்றான். குமட்டூர் கண்ணனார் இமயவரம்பனின் வீரம், வெற்றி, புகழ் ஆகியவற்றை சிறப்பாகப் பாடியுள்ளார்.
“பேரிசை மரபின் ஆரியர் வணக்கி||
(பதிற்.பதி.2..7)
வடபகுதியில் மிகுந்த புகழோடு வாழ்ந்த ஆரிய மன்னர்களான கனக விசயர்களைத் தன் கீழ் அடிபணிய வைத்தான்.
“நயனில் வன்செய் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற்கொள்இ|| (பதிற்,பதி.2.8)
கடுமையான சொற்கள் கூறிய யவனர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் நெய்யை ஊற்றிக் கைகளை பின்புறம் கட்டி அவர்களின் தவறுக்கு இணையாக அரிய விலைமதிப்பற் அணிமணிகளையும் வயிரங்களையும் பெற்றவன்.
“ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மான் மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.
(பதிற்.11.23-25)
நெடுஞ் சேரலாதன் இமயம் தொடங்கி தென்திசை குமரி வரை நிகழ்த்திய பல போர்களில் வென்றவன். இவனை வெல்வார் இந்நிலப்பரப்பில் யாரும் இல்லை. என்பதை மேற்கூறிய பாடல்வரி மூலம் அறியலாம்.
சூரபத்மனை அழிக்க கந்தவேள் யானையின் மீதேறி கடலினுள் மாமரத்தை இரண்டு கூறாக்கியதுப் போல சேரலாதனும் யானைமீது சென்று கடலினுள் இருந்த கடம்பர்களின் கடம்ப மரத்தை அழித்த வெற்றி புகழாளன் ஆவான்.
சேரலாதனின் எதிர்நின்று போரிடும் பகைமன்னர்களின் புகழு; பெருமையையும் அழிய போரிட்டு வெல்லும் சிறப்புடையவன். பகை மன்னர் எழுவருடன் போரிட்டு வென்று. அவர்களின் தங்கக் கீரிடங்களை அழித்த பொன்னை கொண்டு செய்த பொன் ஆரத்தைத் திருமகள் தங்கும் தன் மார்பில் அணிந்த செய்தியை
“எழுமு கெழீயை திரு ஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை|| (பதிற்: 14: 11-12)
என்ற பாடல் வரி சுட்டிக் காட்டுகிறது.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் வெற்றி:
செல்கெழு குட்டுவன் இமயவரம்பனின் தம்பி. இவனைப் பற்றி பாலை கௌதமனார் பத்துப்பாடல்கள் பாடியுள்ளார். குதிரை, பொன்னலான நெற்றிப் பட்டம் உடைய ஆண்யானைகளும், தேர்ச்சீலைகள் போர்த்தப்பட்ட தேர்களும், போருக்கு தயாராக அணிவகுத்து நிற்கும் சேனை படையும் என்ற நால்வகைப் படையையும் கொண்டு சிறப்பாக வழி நடத்தி. செல்லும் ஆற்றல் படைத்த வெல்கெழு குட்டுவன்.
அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த
பொன் புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ!
(பதிற்:22:24-25 )
கணையமரம் பொருந்திய கோட்டையையும், மதில்களில் கட்டிய பகைவரைத் தானே தாக்கக்கூடிய ஐயவித்துலாம் என்ற மதிற்பொறியையும், காட்டரணையும், ஆழமான அகழிகளையும், உயர்ந்த மாடம் கொண்ட கோட்டையையும் அழித்து வெற்றி கொண்ட சிறப்புடையவன். பகையரசர் நாடுகளின் வளம் கெட்டு அழியும் வகையில் போரிட்டு வெல்லக்கூடியவன்.
கடல் பிறகு கோட்டிய செங்குட்டுவன் வெற்றி:
நெடுங்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த செங்குட்டவனைப்பற்றிய வீரம் புகழினை பரணர் பாடியதே ஐந்தாம் பத்தாக அமைந்துள்ளது.
“கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி
கான் நவில் கானம் கணையின் போகி”
(பதிற்:பதி 5 )
பத்தினியாக கண்ணகிக்குச் சிலை செய்ய காட்டுவழியில் சென்று இமயத்தில் வெட்டி எடுத்த கல்லை கங்கையில் நீராட்டி இடும்பாதவனம் எனும் ஊரிலே தங்கி போரிட்ட வெற்றிச் சிறப்புடையவன்.
புலிப்போல போரிட்ட பகைவீரர்கள் மடிய வியலூரை போரிட்டு வென்ற செய்தியை
“உறுபுலி அன்ன வயவர் வீழ
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி”
(பதிற்: பதி - 5)
இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன. வியலூரை அடுத்து கொடுகூர் என்ற ஊரையும் வெற்றிக்கொண்டான்.
பழையன் என்னும் குறுநில மன்னன் காவல் மரமாகக் காத்து வந்த கருத்த கிளைகளையுடைய மத்தளம் போன்ற அடிமரத்தை வெட்டி வீழ்த்தியவன். பழையன் இறந்தப் பின் அவன் மனைவியரின் கூந்தலைக் கயிறாக்கி யானையைப் பூட்டி வெட்டிய வேப்பமரத்தினை ஏற்றிக்கொண்டு வந்த வெற்றியாளன்.
“ஆராச்செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ”
சோழர் குடியில் பிறந்த ஒன்பதுபேர் அழிய நேரிவாயில் எனும் இடத்தில் தங்கி போரிட்டு வென்றான். கடலே தனக்கு பின்னால் செல்லும்அளவு முன்னேறிச் செல்லும் படையை உடையவன் செங்குட்டுவன்.
போர்களமும் ஏர்க்களமும்
போர்க்களத்தை ஏர்க்களத்தோடும் ஒப்பிட்டு கூறுகின்றார். அரசன் உழவனாகவும் கூறுகின்றார்.
செருப்படை பிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
(புறம் 369:11-12)
மறவர்களை மின்னலாகவும், முரசினை இடிமுழக்கமாகவும் குதிரைகளை காற்றாகவும், கணைகளை மழைத்துளியாகவும் அரசர்கள் போரிடும் போதும்அங்கு வீழும் குருதியினை சேறாகவும் ஒப்புமைபடுத்தி செங்குட்டுவனின் போர் வெற்றியைச் சிறப்பிக்கிறார்.
செல்வக் கடுங்கோ வாழியாதன் வெற்றி
செல்வக் கடுங்கோ அந்துவஞ் சேரல் மரபினை சேர்ந்தவன். அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் பெருந்தேவிக்கும் பிறந்தவன்.
“நாடு பதி படுத்து, நண்ணார் ஒட்டி
வெருவரு தானை கொடு செருப்பல கடந்து” (பதிற் பதி : 7)
பகைவரை வென்று பல ஊர்களை உண்டாக்கி தன் நாட்டை விரிவு படுத்திக்கொண்டவன். பகைவர் அஞ்ச பலபோர்களை செய்து வென்றவன். எதிர் நின்றவரை வெற்றிக்கொல்லும் ஆற்றல் மிக்க படையைத் துணையாக உடையவன்.
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
(புறம் : 8 : 4-5)
எதிர்தவரின் நாட்டை கொண்டு தன்நாட்டை விரிவுபடுத்திய செய்தியை புறநானூற்று பாடல் மூலம் அறியலாம். இளஞ்சேரலரும்பொறையோடு போரிட்டு சோழர்படை தோற்றபோது எறிந்த வேள்விகள்.
“நனவில் பாடிய நல்லிரசைக் கபிலன்
பெற்ற ஊரினும்”
என்று பெருங்குன்றூர்கிழார் பாடுகிறார்.
முடிவுரை
பதிற்றுப்பத்து சேரரின் வரலாறு செப்பும் செந்தழ் களஞ்சியமாகவும், வரலாற்று கரூவூலமாகவும் விளங்குகிறது. இருமுறை இமயத்தை என்ற சிறப்பை கொண்டவர்கள் சேரர்கள். சேரமன்னர் பத்துபேரின் வெற்றிச்சிறப்பை பதிற்றுபத்து வெளிப்படுத்துகிறது. இமயவரம்பன் , செல்கெழு குட்டுவன், செங்குட்டுவன், செல்வக்கடுங்கோ வாழியாதன் போன்றவரின் வெற்றிச் சிறப்பை; இதன் வழி அறியமுடிகிறது.