வெள்ளி, 20 ஜூலை, 2018

விளம்பிநாகனாரின் கல்விச் சிறப்பு

  
       விளம்பிநாகனாரின்   கல்விச் சிறப்பு

      எக்குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கல்வி கற்றவனாக இருந்தால் பொருள் கொடுத்தாவது அரசன் அவர்களை தம்வசம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கல்வியின் தன்மையை போற்றியவன் தமிழன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக   இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழில்  தொல் பழங்காலம் தொட்டு தோன்றிய இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை கல்வியின் சிறப்புகளைப் பதிவு செய்கின்றன. நான்மணிக்கடிகை உணர்த்தும் கல்வியின் சிறப்பை  காண்போம்.
கல்வி 
    கல்வி ஒரு மனிதனுக்கு நிழல் போன்றது. அறியாமையை போக்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சி, நூல் எனப் பொருள் கூறுகிறது தமிழ் லெக்சிகன் அகராதி.  மற்றவாகளால் கவர்ந்து செல்லமுடியாத ஒரே செல்வம் கல்விச்செல்வம் ஆகும்.
புறநானூற்றில் கல்விச் சிறப்பு
    பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று போற்றப்படுவன சங்க இலக்கியங்கள். பாட்டும் தொகையுமாக விளங்கும் இவ்விலக்கியம் தமிழ் மக்களின் ஒழுக்கலாறுகளை அகம் புறம் எனப் பகுத்துக் கூறுகின்றன. எனவே, இவ்விலக்கியங்களும் அகப்புற பாகுபாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றன. புற இலக்கியங்களில் தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று போற்றப்படுவது புறநானூறு ஆகும். பல்வேறு வகைப்பட்ட மனித இனம் பற்றி கூறும் புறநானூறு, மனித வாழ்வியலுக்குரிய பல்வேறு துறைகள் பற்றியும் பேசுகின்றன. அவற்றுள் சிறப்புமிக்க கல்வி பற்றி அந்நூல்,

“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே;” (புறம், பா. 183)

என்று ஆசிரியருக்குத் தேவையானபோது பொருள்கொடுத்தும், பின்னின்று கற்கும் முறைமையை உணர்ந்து கற்றல் நல்லது என ஆசிரியருக்கு உதவி செய்தும், பணிவிடை செய்தும் கல்வியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

அற இலக்கியங்களில் கல்விச் சிறப்பு
    உலக அற இலக்கியங்களில் முதன்மையானதாகவும்,  உலகப் பொதுமறையாகவும் விளங்கும் இலக்கியம் திருக்குறள்.  திருக்குறள் கல்வியின் சிறப்புகள் குறித்து நான்கு அதிகாரங்களில் வலியுறுத்துகின்றது. கல்லாதவர்களை விலங்கிற்கும், மரத்திற்கும் ஒப்பிடுகிறது. கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை கீழே உள்ள வரிகளால் சுட்டுகின்றார். கல்வியின் சிறப்பினை உணர்த்தவே திருவள்ளுவர் கல்லாதவர்களின் கண்களைப் புண்களாகக் குறிப்பிடுகிறார்.

“கண்உடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண் உடையார் கல்லாதவர்” (குறள்-395)

என்பன போன்ற குறட்பாக்களை வகுத்துரைத்து கல்வி சிறப்பை இவ்வுலகில் நிலை நாட்டுகின்றார்..
அற இலக்கியங்களில் திருக்குறளுக்கு இணையான நூலாக விளங்கும் நாலடியார்,
“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”

    என உடல்தோற்றம், கூந்தல், ஆடை, அபரணம், வண்ணப்பூச்சு இவையெல்லாம் ஒரு பெண்ணிற்குக் அழகைத் தருவதல்ல. கல்வி கற்று எழுதத் தெரியுமானால் அதுவே பெரிய அழகாகும் என நாலடியார்; குறிப்பிடுகிறது.
    ஒருவருக்குப் புற அழகு எப்பொழுதும் ஆக்கத்தைத் தருவதில்லை. மாறாக அழிவினையே தருகின்றன. இதனையே வள்ளுவர்
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பி லவர்க்கு” (குறள்.79)

    அழகு, அறிவு, வாய்மை, தூய்மை, மெய்மை, பொய்மை, அனைத்தும் அகத்து உறுப்பாகிய மனத்தோடு தொடர்புடையது. எனவே, மனந்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகின்றன. புறத்து உறுப்புகள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது மாறும் தன்மை கொண்டது. அகமே என்றும் மாறாத தன்மைகொண்டது. எது மாறாதத் தன்மை கொண்டதாக இருக்கிறதோ அதுவே, அழகுடையது. எது, தான் மாறாமல் சமூதாயத்தில் மாற்றத்தைத் தருகிறதோ அதுவே, அறிவும், அழகும் உடையது. அந்த வகையில் கல்வி என்றும் மாறாதத் தன்மை கொண்டது. ஆனால் இந்த சமுதாயத்தை மாற்றும் வலிமை கலவிக்கு மட்டுமே உண்டு. அதிலும் குறிப்பாக பெண் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்கள்,

“இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு”

    என்னும் பாடல் வழி ஒரு பெண்ணிற்கு இடையோ, தோளோ, நடையோ, அவளிடம் உண்டாகும் நாணமோ, கழுத்தோ, அழகல்ல. மாறாக அவள் கல்வி பயின்று எழுதும் எழுத்தே அழகுடையதாகும் என்றும்,

“கல்லாதான் கண்ட கழிநுட்பம் கட்டரிதால்
நல்லேயாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணங்கி வெகுண்டு அருகிற் பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுதில்”

என்றும் கல்வியின் சிறப்புகள் குறித்து பல இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன
நம் பண்பாட்டில் கல்வியின் உண்மையான நோக்கம் மாணவர்களின் அறிவைப் பெருக்குவதும், அனுபவத்தைப் பெறுவதற்கும் அவர்களின் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்து எதிர் காலத்தைச் சிறப்புடன் அணுகச் செய்வது ஆகும்.

கல்வியே அடிப்படை

    பலவகையான அறிவு நூல்களைக் கற்றவரிடம் இழந்த பொருளுக்கு இரக்கம் தோன்றாது. ஊக்கத்தோடு முயற்சியைச் செய்பவரிடம் தனக்கு கிட்டாமையால் ஆன முயற்சித் துன்பம் தோன்றாது. எப்போதும் தீமையையே செய்பவருக்கு நல்லச் செயல் தோன்றுவதற்குச் சிறிதும் சாத்தியமில்லை. ஒருவர் கோபத்தோடு இருந்தால் எந்த நன்மைகளும் தோன்றினது என்பதை விளக்கும் நான்மணிக்கடிகையின் பாடலொன்று,

“கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும்”

என்று கூறுகிறது.அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி
ஒரு சமுதாயம் பின்னடைவைச் சந்திப்பதற்கும், முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கும் காரணம் அறியாமையே. அறியாமை மனிதனை அடிமையாக்குகின்றது. அரசியல், சமூகப், பொருளாதாரத் தளத்தில் ஒரு நாட்டை முடக்குகிறது. மக்களை சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்குக் காரணம் அறியாமையே. மக்கள் தொகை பெருக்கமே இந்தியாவின் வளர்;ச்சிக்குத் தடையாக உள்ளன. அறியாமை பிற்போக்குச் சிந்தனையையே உருவாக்குகின்றன. பிற்போக்குச் சிந்தனை எந்தவிதமான வளர்;ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

    அறியாமையை அகற்றும் மருந்து என்பது கல்வியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கல்வி அறியாமையைப் போக்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கின்றது.

“புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை-காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு.”

என்ற பாடல் வரிகள் கல்வி கற்றவர்களின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. ஒருவன் மிகுதியான அறிவு நூல்களைக் கற்பதனால் மிக்க அறியாமையானது குறையும். கல்வி கற்பதால் அறியாமை குறைந்து தேவையற்ற குணங்கள் அகன்று உலகத்தை அறிவான்.  உலகத்தின் இயல்பை அறிந்து கொண்டால், உண்மையான வழியில் செல்வான். கல்வியின் நெறியால் உலகத்தில் புகழை நிலை பெறச் செய்யலாம்.
 
“கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்த்து இவ்வுலகின் கோளுணரும்-கோளுணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ-உப்பால்
உயர்ந்த உலகம் புகும்”

என்று நான்மணிக்கடிகையும்  கூறுகின்றது.

துன்பத்தைப் போக்கும் கல்வி

    கல்வி ஒருவனுக்கு வரும் எல்லா துன்பத்திலிருந்தும் அவனைப் பதுகாக்கின்றது. தண்ணீர் எப்பொழுதும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் இயல்புடையது. கல்விகற்ற சான்றோர்கள்  அந்த தண்ணீரைப் போல தன் நிலையிலிருந்து மாறாமல் தனக்குரிய இயல்புப்படி நடந்துகொள்வர். நன்மையும் தீமையும், செய்வனச் செய்யத்தகாதன, பேசுவனப் பேசக்கூடாதன, பெருக்கவேண்டுவன, நீக்கவேண்டுவன  என அனைத்தையும் அளந்தறியும் அறிவு கல்வியினால் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் சரியாக அறிந்துகொண்டால் ஒருவனுக்கு துன்பங்கள் ஏற்படாது.
    
கல்வியின் பயன்

    இன்றைய காலத்தில் ஒருவனுக்குச் செல்வந்தான் சிறந்த வலிமையுடையதாகப் கருதப்படுகின்றது. கற்ற கல்வி தகுந்த நேரத்துக்குப் பயனாவது போல் வேறு எதுவும் பயனைத் தருவது இல்லை. வறுமை ஒரு மனிதனுக்குத் துன்பமாக அமைகிறது. கையேந்தி இரப்பவர்க்கு இல்லை என்னாது மன உறுதியைப் போன்ற திட்பமானது கல்வியைத் தவிர வேறு இல்லை.

“ ‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
‘கொள்’ எனக் கொடுத்தல் உயாந்தன்று; அதன் எதிர்,
‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்தன்று;”(புறம், பா.204, 1-4)

    என்ற பாடல் உணர்த்துவது போல, நீ எனக்குத் தருக என்று கேட்பது இழிவு. கேட்ட பின்பு தருபவன் தரமாட்டேன் என்று கூறுவது அதனைக்காட்டிலும் இழிவு. கேளாமலேயே இதைப் பெற்றுக்கொள் என்று கூறுவது உயர்வு. ஆனால் தந்த பொருளை வேண்டாம் என்று மறுத்துக் கூறுவது அதனை விட உயர்ந்தது. மனிதனுக்குரிய இத்தகைய மிகச் சிறந்த பண்புகளை வளர்ப்பது கல்வியே ஆகும். இதே கருத்தைப் பதிவு செய்யும் பாடல் ஒன்று நான்மணிக்கடிகையில் இடம் பெற்றிப்பதை அறியலாம்.

    நீதியை மட்டும் போதிப்பதற்காக எழுந்த இலக்கியங்கள் தவிர்த்த பிற தமிழ் இலக்கியங்களும், ஏதே ஒரு வகையில் வெளிப்படையாகவோ, மறைபொருளாகவோ நீதிக் கருத்துகளை வலியுறுத்துவதை காணலாம். அத்தகைய நூல்களைத் துணையாகக் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பமும் ஏற்படாது என்பதை,
‘எள்ளற் பொருள் திகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருள தறநெறி பன்னூலும்
சேர்தற் பொருள பொருள்”

                          என்ற நான்மணிக்க



டிகை பாடல் மூலம் அறியலாம்.
முடிவுரை
    கல்வி குறித்த குரல்கள் இன்று உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தின் முக்கியத் தேவையாக இருப்பனவற்றுள் முதல் நிலையில் இடம் பெறுவது கல்வியாகும். அத்தயை கல்வியின் சிறப்புகளையும், கல்வி கற்றோர் அடையும் மேன்மையினையும், கல்வியால் ளவிளையும் பயன்கiயும், இலக்கியங்கள் கூறும் கல்வியின் சிறப்புகளையும் கண்டோம்.

2 கருத்துகள்: