வெள்ளி, 20 ஜூலை, 2018

அகநானூற்றிலும் நந்திக்கலம்பகத்திலும் அக கோட்பாட்டுப்பொதுமைகள்

ஆ.இராஜ்குமார்
ஆய்வியல் நிறைஞர்
பெரியார் பல்கலைகழகம்
சேலம் 11

 



கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்குடி. அகம் புறம் என தமிழர் தம் வாழ்வியலை அழகாக வகுத்து வாழ்ந்துள்ளனர். அகம் புறம் என்ற இவ்விரு உணர்ச்சிகளை பாடுப்பொருளாக கொண்டு தமிழ் மொழியில் பல்வேறான இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அகநானூற்றிலும் நந்திக்கலம்பகதிலும் காணப்படும் அக கோட்பாடுகளை இக் கட்டுரையில் காண்போம்.

நந்திக்கலம்பகம்

    தமிழ்மொழியில்  தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். அரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன்  நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்திவர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.
தமிழில் திணைத் கோட்பாடு
    அகம் என்ற சொல்லுக்கு மனம், வீடு, உள்ளிடம், காமஇன்பம், ஆகாயம், உலகம,; எண்ணம், அகப்பொருள், ஆன்மா. மருதம், போன்ற பல பொருள்கள் உள்ளன. மனதில் நிகழும் நிகழ்வு இது இவ்வாறு என்று பிறிடத்தில் கூறப்பெறாமையால் அகத்திணை எனப்படுகிறது.களவு கற்பு என அகத்திணை இருவகைப்படும் கைக்கிளை, பெருந்திணை என  அன்பின் ஐந்திணை முப்பிரிவுகளாக நிகழும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்து  திணைகளாகும், ஐந்து திணைகளுக்கு தனித்தனியே நிலங்கள் பகுக்கப்பட்டன.
    தலைமக்களின் காதல் வாழ்க்கை களவு என்று அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் களவுக்கு
    “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
    அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
    காமக் கூட்டம் காணும்காலை
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
    துறையமை நல்யாழ்துயைமையோர் இயல்பு”
                (தொல் களவியல் நூற் 1)
    காந்தர்வ மனத்துடன ஒத்த மணம் கொண்டது களவு என்று இலக்கணம் வகுக்கிறார்.; இயற்கை புணர்ச்சி, இடந்தலைபாடு, பாங்கி மதியுடன்படுதல், பாங்கற்கூட்டம், பாங்கி கூட்டம் அறத்தொடு நிற்றல,; உடன்போக்கு போன்றவை களவு புணர்ச்சியில் இடம்பெறுவன.
கற்பு வாழ்க்கைக்கு தொல்காப்பியார்,
    கற்பு எனப்படுவது கரணமொடு புணர
    கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
    கொடைக்கு உரி மரபினோர் கொடுப்பகொள்வது”
                    (தொல். கற்பியல் நூற் 1)
கற்பு என்பது கரணத்தோடு (வதுவைச் சடங்கோடு) பொருந்தி தலைவன் கொடுத்தற்குறிய மரபினரிடம் வேண்ட கொடுத்தற்குரிய மரபினையுடையோர் திருமணம் முடித்துக்கொடுப்பது என இலக்கணம் வகுக்கிறார். கற்பு வாழ்க்கையில் பிரிதல், ஊடல், வாயில் வேண்டல் எனும் நிகழ்வு நிகழ்கிறது. ஓதல், தூது, பகை, பரத்தைபிரிவு எனும் நான்கு வகையான பிரிவு சுட்டப்படுகிறது.;, தலைவன் தலைவியிடையே எழும் சிறு பிணக்கு ஊடல் ஆகும். பரத்தை பரிவின் பொருட்டு தலைவன் தலைவியிடம் வாயில் வேண்டல் நிகழ்கிறது.இதன் பொருட்டு நிகழும் நிகழ்வுகள் அகத்துறையாகவும், இதனை கூறுபவர்கள் அகத்தினை கூற்று மாந்தர்களாக சுட்டப்படுகின்றனர். இவையே தமிழின் அகத்திணைக்கோட்பாடுகள் ஆகும்.

கூற்று அடிப்படையில் பொதுமைகள்

    அகநானூற்றில் கூற்று அடிப்படையிலே பாடல்கள் அமைந்துள்ளன இதேப்போல் நந்திக்கலம்பகத்திலும் கூற்று அடிப்படையில் அமைந்துள்ளன இதை,
    ஈட்டு புகழ்நந்தி பாணநீ எங்கையர்தம்
    வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
    பேய்என்றாள் அன்னை பிறர்நரிஎன் றார்தோழி
    நாய்என்றாள் நீஎன்றேன் நான்.
            (நந்தி.13)
எனும்பாடலில் தலைவி கூற்றாக புகழுடைய நந்தி மன்னன் அனுப்பிய பாணனே, நீ  எமது மங்கையரான பரத்தையர் வீட்டிலிருந்து விடியும்வரை பாடினாய். ஆதைக் கேட்ட என் அன்னை காட்டில் அழும் பேயின் குரல் என்றாள். நான்  மட்டும் நீ பாடிய பாட்டின் ஒலி என்றேன். என்பதிலும்   
    வானுறு மதியை அடைந்ததுன் தட்பம்
        மறிகடல்  புகந்துன் பெருமை
    கானுறு புலியை அடைந்ததுன் சீற்றம்
        கற்பகம் அடைந்ததுன் கொடைகள்
    தேனுறு மலாரள் அரியிடம் புகுந்தள்
        சேந்தழல் அடைந்துன் மேனி
    யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம்
    நந்தியே எந்தை பிரானே            (நந்தி.22)
    நந்தி மன்னவனே, கருணை மிகுந்தவனே, உனது அழகிய முகம் வானில் உள்ள முழுநிலைவைச் சென்றடைந்தது. உனது பெருமை கடல்சூழ்ந்த உலகம் முழுதும் பரவியது. உனது ஒப்பற்ற வீரம் காட்டில் வாழும் புலியைச் சென்றடைந்தது.. உனது கொடைத்தன்மை வறியாது வழங்கும் கற்பகத் தருவை அடைந்தது. இதுவரை உன்னிடத்திருந்த திருமகள் அரியிடம் சேர்ந்துகொண்டாள். உனது வலிமையான உடல் செந்தணலிற் சேர்ந்தது. இந்நிலையில் நானும் எனது வறுமையும் இனி எங்கு போவோம். என்ற தலைவி பாடல் மூலம் அறியமுடிகிறது. மேற்கண்ட தகவல்களின் மூலம் நந்திக்கலம்பகமும் கூற்று அடிப்படையில் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

துறை அடிப்படையில் பொதுமைகள்

     பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்கள் பெரும்பாலும் துறை அடிப்படியிலே அமைந்துள்ளன.சான்றாக அகநானூற்றில் பகற்குறி, இரவுக்குறி , இடையீடு, வரைவு வேண்டல், அலர், உடன்போக்கு , பிரிவு, செலவு எனும் துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன. இதேப்போல் நந்திகலம்பகத்திலும்,
துயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவளை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யால்மலர்க் காவகத்து
முயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முனம் நின்றிவளை
முயக்குவித் தான்நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே!
                            (நந்தி.. 63)
தலைவன் இவளைச் சேரும்படி செய்தான். தூக்கத்தைப் போக்கும்படி செய்தான். முன்பொருநாள் தூங்கச்செய்து மயங்குமாறு செய்தான். மலர்ச்சோலையில் இவள் மனதைத் தன்வசமாக்கி வஞ்சனையால் தன்னைக் கூடுமாறு செய்தான். அவன் தந்த ஆடையை வாங்கிக்கொள்ளச் செய்தான். எதிர்நின்று இவளை மயங்கச் செய்தானென நான் உறுதியாகக் கூறுவேன். தோழி அறத்தொடு நிற்கிறாள் என்பதை   நந்திக் கலம்பக பாடல் மூலம் அறியமுடிகிறது.
    தலைவி இவ்வளவு நேரம் சோகமாக இருந்து விட்டு திடிரெண  மகிழ்ச்சியாக இருக்கிறாளே, இதற்கு காரணம் யாது என செவிலித்தாய் தோழியிடம் கேட்க தோழி தேன்நிறைந்த தொண்டை மாலையைப் பார்த்தபின் அதுவே அவளுக்குக்  கைவளையையும், உயிரையும் கொடுத்தது. என்கிறாள் இதை,
நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயிர் இவளுக்கு ஈந்ததே!
                (நந்தி   66)
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. இதேப்போல்  அகநானூற்றில்

‘இன்உயிர் கழிவது ஆயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்எனச் செப்பாதிமே’
            (அக-52)
எனும் அகநானூறு பாடலிலும் அறத்தோடு நிற்றல் எனும் துறையில்  அமைந்துள்ளது.
தோழி தலைவியின் துன்பங்களை கண்டிரங்கி, தலைவன் குணங்களைப் பழித்துறைப்பது பல சங்க பாடல்களில் காணமுடிகிறது அதுப்போல் நந்திகலம்பகத்தில்
ஆகிடுக மாமை அணிகெடுக மேனி
        ஆலரிடுக ஆரும் அயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி
        பொருபுணரி சங்கு வளைமென்
நாகிடறு கானல் வளமயிலை ஆளி
        நயபரனும் எங்கள் அளவே
ஏகொடிய னாகஇவை இயையும் வஞ்சி
        இனியுலகில் வாழ்வ துளதோ?
    தலைவியின் பசலை உண்டாகுக உடலழகு கெடுக அயலார் அனைவரும் பழி கூறுக கைவளைகள் கழன்று போகுக ஊரார் புறங்கூறுக. கரையில்  வந்துமோதும் அலையையுடைய கடலில் மென்மையான வெண்சங்கை எடுத்தெறியும் உப்பங்கழிகளைக் கொண்ட மயிலாபுரி ஆள்பவனும் நீதியில் உயர்ந்த தலைவன் எங்களுக்கு மட்டும் கொடியோன்  ஆகுக. இந்நிலைப்பட்ட கொடிபோன்ற தலைவி இனி இவ்வுலகில் வாழ்ந்திருப்பது உன்டோ?. என்று தலைவி நிலை கண்டு தோழி தலைவனை பழித்துரைக்கிறாள். இது இற்பழித்தல் எனும் துறையாகும் மேலும,; இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், பாங்கி மதியுடன்பாடு(  ), பகற்குறி, இரவுக்குறி, வரைவு கடாதல், வரைவு வற்புற்தல், மடலேறுதல், .உடன்போக்கு, பரத்தை பிரிவு ,வாயில் மறுத்தல் எனும் துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

புறச்செய்திகளின் தாக்கம்;

    அகநானூற்றில் மிக அதிகமான புறச்செய்திகள் உவமையாக கூறப்பட்டுள்ளன. பல வரலாற்று செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதேப்போல் நந்திக்கலம்பகத்திலும் புறச்செய்திகள் அகப்பாடலுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன. இதை,   
    “கோட்டை இடித்தகழ் குன்றாக்கிக்
    குன்றகழ் ஆக்கித் தெவ்வர்
    நாட்டை மதிக்கும் காடாக்களிற்
    றான்நந்தி நாட்டினில்”
என்ற பாடலில் கோட்டையை இடித்து அகழியாக்கி அகழியை கோட்டை போல் ஆக்கியவன் நந்திமன்னன். அதுபோன்ற வழியில் தன் மகள் உடன்போக்கு சென்றாளே என செவிலி புலம்புவதாக அமைந்துள்ளது. அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் அகம் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அகநானூற்றைப்போலவே நந்திக்கலம்பகமும் புறச்செய்திகளை தாங்கிநிற்பதை காணமுடிகிறது.

முடிவுரை

    அகநானூறு சங்கயிலக்கியம், ஆனால் நந்திகலம்பகம் மிக பிற்கால நூல் இரு நுல்களிலும் அககோட்பாடுகள் பொதுமையாகவே இடம்பெற்றுள்ளன. சுட்டி ஒருவர் பெயர் கூறப்பெறார் எனும் விதி மட்டும் மாற்றம் பெற்று, அக மரபை அதிகம் பெற்று அகப்புற கலம்பக இலக்கியமாக நந்திக்கலம்பகம் திகழ்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக