நாலடியார் இயம்பும் இளமை நிலையாமை

அறிவுடையவர் செயல்
அழகின் அழகாக தம்மை உருவாக்கிக்கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர். அறிவுடையவர்கள் இளமையிலே துறவரம் செய்வார்கள் என்பதனை,
“நரை வரும்! என்று எண்ணி, நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
மன்னா இளமை மகிழ்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்”
நல்ல அறிவை உடையவர்கள் முதுமையில் நரையும் மூப்பும் வரும் என்பதை முன்பே உணர்ந்து பருவத்திலேயே துறவியாகி விடுவர். குற்றங்களை விலக்காத நிலைக்காத இளமையை நம்பித் துறவு நோற்காமல் காம வெகுளி மயக்கங்களில் மூழ்கிக் கிடந்தவர் முதுமையுற்றக் கொம்பு ஊன்றித் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.
கிழப்பருவம் எய்திப் பேச்சுத் தடுமாறிக் கொம்பு ஊன்றி தளர்ந்த நடை நடந்து பற்கள் விழ, பொக்கை வாய் ஆகி உடல் பழி சுமக்கும் அளவு இல்லத்தில் ஈடுபட்டுக் காம வழிகளில் செல்லும் கருத்துடையவர்க்குத் துறவற வழியில் செல்லும் ஏமநெறி இல்லை.இல்லறத்தில் ஈடுபடுபவர்க்கு உயிர் காக்கும் துறவுநெறி வாய்க்காது.
உறவுகள் அறுபடும்
மனிதன் உறவுகளாளே வாழ்கிறான் உறவுகளாளே வீழ்கிறான். மனித வாழ்வில் உறவுகள் எல்லாம் நம் கண்முன்னே அற்றுபோகும் என்பதனை
“நட்புநார் அற்றன, நல்லாரும் அஃகினார்
அற்புதத் தளையும் அவிழ்ந்தன உள் காணாய்
வாழ்தலின் ஊதியம் என் உண்டாம்? வந்ததே
ஆம் கலத்து அன்ன கலழ்!”
நட்;பு என்னும் நார் அற்றுப் போயிற்று. அன்பு காட்டிய மகளிரும் அன்பு குறைவர் ஆயினர். அன்பு என்ற கட்டுகளும் நெகிழத் தொடங்கி விட்டன. உனக்கு உள்ளேயே ஆராய்வாயாக வாழ்வதால் என்ன பயன் உண்டாயிற்று? வாழ்க்கைக் கடலில் மூழ்கிப்போகும் கப்பல் ஆயிற்று. கூன் உற்று தளர்ந்து, தலை நடுங்கி, கொம்பு ஊன்றி விழுந்தும் எழுந்தும் செல்லும் கிழப்பருவம் எய்திய மனைவி மாட்டு முதிர்ச்சி இல்லாத காமத்தைக் கொள்ளுகின்ற கணவமாருக்குத்தான் ஊன்றி வரும் கைக்கோல் தன் மனைவிக்கும் ஊன்றுகோல் ஆயிற்றே என்று எண்ணத்தகும். முதுமை, துன்பம் தருவதாகும். முதுமையின் மோகம் பழக்கத்தக்கது. என்ற பாடலின் மூலம் அறியமுடிகிறது. மேலும்
“எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு
தனக்குத் தாய் நாடியே சென்றாள், தனக்குத் தாய்
ஆகியவளும் அது ஆனாள், தாய்த் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து, இவ் உலகு”
என்னைப் பெற்றெடுத்ததாய் என்னை இங்கு விட்டுவிட்டுத் தன்னைப் பெற்றெடுத்த தாய் சென்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள் (இறந்து விட்டாள்). என் தாய்க்குத் தாயானவரும் என் தாயை விட்டுவிட்டுத் தன் தாயை நாடிச் சென்றுவிட்டாள். இவ்வுலகம் இப்படி நிலையாமை உடையது. பெற்ற தாயாக இருந்தாலும் செத்தே தீரவேண்டும் எனும் நிலையாமை உடையது இவ்வுலகம். வெறியாட்டுக் களத்தில் வெறியாடுபவன் கையில் இளம் தளிர்கள் மாலையின் ஊடே இருக்கும். வெறி ஆட்டத்தின் முடிவில் வெட்டப்பட இருக்கும் ஆடு ஆங்கே இருக்கும் தளிரை இடைஇடையே அது உண்டு மகிழும். முடிவில் தான் பலியிடப்படுவோம் என்பதை ஆடு அறியாது. இத்தகு அறியாமை நல்ல அறிவுடையோர் இடத்துக் காணப்படாது. இளம்பருவ மகிழ்ச்சி ஆட்டிற்குக் கிடைக்கும் தளிரைப் போன்றது.
பெண்ணின் அழகு
மின்னல் பார்வையும் அள்ளும் சிரிப்பும் பெண்களுக்கே உரியது. ஆண் பெண் இணைந்த வாழ்வே இல்லறம், ஆணை சுற்றியே பெண்வாழ்கையும், பெண்ணை சுற்றியே ஆணின் வாழ்க்கையும் அமைகிறது.இதனை
“பனிபடு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை நனி பெரிதும்
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்
கோல் கண்ணள் ஆகும் குனிந்து.”
குளிர்ச்சியான சோலையில் காய்ந்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்துவிடும். இளமையும் அதுபோல உதிரும் தன்மையதே வேலைப் போன்ற கூரிய விழிகளை உடையவள் என்று ஒரு பெண்ணை விரும்பிட வேண்டாம். இவளும் கூனள் முதுகுடையவளாகிக் கொம்பு ஊன்றி நடைதடுமாறும் முதுமைப் பருவம் வந்து அடைவள்.
பெண்ணின் இளமை அழகும், முதுமையில் அழிந்துப்போகும் வயது எத்தனை ஆகிறது பற்கள் விழுந்தவை எத்தனை? எஞ்சியிருப்பவை எத்தனை? எல்லா வேளைகளிலும் முழு உணவு உண்டீர்களா? என வயது ஏறத் தமக்குள் வினவப்படும் தகையது. உடல்நிலை உடலின் இளமை, நிற்பது இல்லை. எனவெ அறிஞர் இளமையை ஒரு பொருளாகக் கருதார். வயது ஏற ஏறப் பற்கள் விழுவதும் உணவின் அளவு குறைவதும் இளமை நிலைப்பதில்லை என்பதைக் காட்டும். எனவே அறிஞர் இளமையைப் பொருட்டாகக் கருதுவதும் இல்லை.
அறம் செய்தல்
பிறப்பும் இறப்பும் அவன் கையில் என்பார்கள் பாமரமக்கள் எனவே இறப்பு வரும் முன் அறம் செய்ய வேண்டும் என்பதனை நாலடியார் பின்வருமாறு கூறுகிறார்.
“மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது அறம் செய்ம்மின்
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியாய்
நல்காய் உதிர்தலும் உண்டு.”
மரங்களில் கனிந்த பழங்கள் உதிர்வதற்குப் பதிலாகத் தீமைதரும் புயற்காற்றால் நல்ல காய்களும் உதிர்ந்து விடுவது உண்டு. அதைப் போல இளைய மனிதர்க்கு இறப்பு நிகழ்தலும் உண்டு. எனவே செய்ய வேண்டிய அறச் செயல்களை இப்போது இளமையாகத் தானே உள்ளோம் நன்கு ஆராய்ந்து பின்னாளில் செய்வோம் என்று தள்ளி வைக்க வேண்டாம். கையில் காசு இருக்கும் போதே மறக்காமல் அறம் செய்தல் வேண்டும். கையில் காசு உள்ள இளமைப் பருவத்திலேயே தள்ளிப்போடாமல் தர்மம் செய்தல் வேண்டும்.
கருணை இல்லாத எமன் காலம் முடியும் மனிதரைத் தேடிப் பார்த்துக் கொண்டே இருப்பான். இளம் கருவினின்றும், வெளிப்படுத்தி தாய் பெற்ற பிள்ளையின் உயிரைக்கூட அப்பிள்ளையின் வாழுங்காலம் முடிந்து விடுமானால் தாய் கதறக் கதற எமன் கொண்டு சென்று விடுவான். எமனின் வஞ்சச் செயலை அறிந்திருத்தல் நல்லது. எனவே மறுமை உலகிற்கு உணவுபோல்வதாகிய அறத்தை இளமைக் காலத்திலும் செய்தல் வேண்டும். இறத்தல் உறுதி எனவே இளமையிலேயே அறம் செய்க. திருவருட்பா மனிதனின் வாழ்நாளை அவனது இளமையின் கால அளவினை உதாரணங்கள் காட்டி விளக்குகிறார். இதனை
“………………………….பருவம் நேர்
கண்டொழியும் இளமைதான் பகல்வேளை”
என்ற அடிகளின் மூலம் இளமை, இன்பம் இவை நிலையற்றவை என அறிய முடிகிறது. செல்வம் இருப்பினும் அதன் பயனை அனுபவிப்பதற்கு இளமை வேண்டும். காலையில் கிழக்கே உதிக்கின்ற சூரியன் பகலில் உச்சிக்கு வந்து மாலையில் மறைவதைக் காண்கிறோம். இளமை நலம் பொருந்திய கன்று பெரியதாய் முத்து மடிவதையும் காண்கிறோம். அவ்வாறுள்ளபோது மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடி இளமையோடு இருக்க முடியும்? அறிவில்லாதவர் இவ்வுண்மையை உணரவில்லையே என இரங்குகிறார் திருமூலர்.
“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே”
இளமை கழிந்து போகுமுன் அருமையான செயலைச் செய்துவிட வேண்டும். முதுமையில் எண்ணினாலும் அருஞ்செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும். ஆடவரை இளமையில் அழகிய மாதர் விரும்பிப் பயனைப் பெறுவர். ஆனால் இளமை நலத்தை நுகர்ந்த பின்னர் கரும்பின் சாற்றைப் பெற்றுச் சக்கையை ஒதுக்குவது போல வெறுத்து ஒதுக்குவர் என்று உவமையோடு ஆசிரியர் கூறும் விளக்கம் நகைச்சுவையாக உள்ளது.
கசப்பினை நல்கும் காஞ்சிரங்காயைச் சொல்லும்போது வெறுப்பின் எல்லையைக் காட்டுகிறார் ஆசிரியர். பின் மனிதன் பாலனாக, இளைஞனாக வித்தனாக இருந்து மறைவதைக் காட்டி அவர் இளமை நிலையாமையை விளக்குகிறார்.
“பாலனாய்க் கழிந்தாளும் பனிமலர்க்கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்தாளும் மெலிவோடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தாளும் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுமாம் பழனவேலித் திருக்கொண்டீர் சரத்துளானே “
என்ற திருநாவுக்கரசரின் வாக்கினையும் ஒப்பு நோக்கலாம். சூரியன் நாளாகிய வாளைக் கொண்டு மனித ஆயுளை அறுக்கிறான் என்று உணர்ந்து இளமை கழியா முன்னர் இறைவனது திருவடியை ஏத்தி அறவாழ்வு வாழ வேண்டும் என்பது அவரது அறவுரை. இறப்பை நழுவவிட்டால் மீண்டும் எப்பிறப்பு வாய்க்குமோ அறியோம். ஆகவே வாய்க்கப் பெற்ற இவ்வரிய மானுடப் பிறப்பை நழுவவிடாமல் தக்கவாறு பயன்படுத்தி பிறப்புப் துன்பத்திலிருந்து விடுபட்டு முக்தி இன்பத்தை அடைந்திட வேண்டும் என்பதைத் திருமந்திரம் மூலம் திருமூலர் எடுத்துக் காட்டுகிறார்.
மானுட வாழ்க்கையில் எவரும் இளமை பருவத்துடன் என்றும் நிலைத்து இருப்பதில்லை. இளமை இறந்து முதுமை வரும் என்பது உலகில் தெளிவு. ஆதலால் இளமையிலேயே அறம் செய்ய வேண்டும். இல்லையெனில் யாதொரும் மறுமைப் பயனையும் அடைய முடியாது.
“பனிபடு சோலைப் பயன் மரமெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற்றிளமை நனி பெரிதும்
வேல் கண்ணன் என்றிவளை வெஃகமின் மற்றிவரும்
கோல் கண்ணனாரும் குணாந்து”
என்ற பாடல் தெளிவுப்படுத்துகின்றன. கனிகள் உதிர்ந்து மரம் விரும்பத்தக்கதாகக் கருதுவது இல்லை. அதுபோன்று இளமை கழிந்த உடலும் விரும்பப்படுவது இல்லை. எனவே இளமையிலேயே அறம் செய்திடல் வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றன. இளமையில் அறவழியில் செல்லாமல் சுகபோகம் அனுபவித்தவர்கள் முதுமையில் வருந்துவர்.
பொய் நூல்களாகிய மற்ற எந்த நூல்களைக் கற்பதாலும், கேட்பதாலும் என்ன பயன் மெய்ந்நூலாகிய இந்த அறநெறிச் சாரத்தைக் கற்றும் கேட்டும் அறிந்தவர்கள் உயிருக்கு உறுதியைத் தரும் அடிப்படையை அறிந்து வீடுபேற்றினை அடைவார்கள்.
“ஆற்றாமை ஊரஅறிவு இன்றியாது என்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பு இருதல் நன்று”
ஒருவன் துன்ப மிகுதியால் அறிவிழந்து ஏதும் தெரியாதவனாக இருக்கிறான் என்று இகழப்படும் நிலையில் வீட்டிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பதைவிட காட்டிற்குச் சென்று தன் உடம்பை அழியச் செய்வது மேலானது என்கிறது அற நூல்கள்.
முடிவுரை
சமண, பௌத்த சமயங்கள் பொருள் நிலையாமையை விட யாக்கை நிலையாமையே அதிகமாக வலியுறுத்துகின்றன. காப்பியங்கள் பெரும்பாலும் சமண பௌத்த சமயங்களையே தழுவி எழுதப்பட்டதாகும். மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களும் மனித உடலின் நிலையாமை பற்றிக் கூறுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் நிலையில்லாதது என்பதனை மூன்று பிரிவுகளாக கூறுகின்றனர். அதில் “இளமை நிலையாமை” என்பதும் ஒன்று. இளமை நிலையில்லாதது என்பதனை அனுபவத்திலிருந்து தெரிந்துக்கொண்டு இவ்வுலகம் பொருள்கள் மீதும் மற்றும் உடலின் மீதும் பற்று இல்;லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருதி ஆசையை விட்டுவிட்டு அற வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். என வாழ்வதே சிறந்த நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக