பதிற்றுபத்தும் போர் நிகழ்வுகளும்

போர்- விளக்கம்
மக்களினம் தன் இனத்தை காத்துக் கொள்ளவும், பொருளாரத்தை பெருக்கிக் கொள்ளவும் பிறரோடு போராடி வந்துள்ளனர். இவ்வாறு வீரத்தின் அடிப்படையில் மக்கள் நிகழ்த்திய போர் நிகழ்வு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போர் என்பதற்கு பல நிகண்டுகள் அகராதிகள் பொருள் கூறுகின்றன.
“ஊழ்வு வெஞ்சமம் மெய்செரு ஞாட்பே
இரணம் தாக்கே இகழ் ஆயொதனம்
அமாபோர் உடன்றல் ஆர்ப்பு நிகர்ப்பு”
என சேந்தன் திவாகரம் போர் என்பதற்கான வேறுப் பெயர்களைத் தொகுத்துரைக்கிறது.
களஞ்சியம் தரும் விளக்கம்
வீரம் விளைந்த தமிழ் நிலத்தில் போர் குறித்த செய்தியை விளக்கும் நூல்கள் பல வெளிவந்துள்ளன. வாழ்வியற் களஞ்சியம் போர் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் அதன் நோக்கத்தையும் விளக்கியுள்ளது.
“போர் என்ற சொல்லை உள் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் வருக்கங்களுக்கு இடையேயான மோதல் ஆகியனவற்றைக் குறிக்க உள்நாட்டுப்போர், வருக்கப் போர் என்று பயன்படுத்தினாலும் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலே போர் ஆகும்.” என்று வாழ்வியற் களஞ்சியம் விளக்கம் தருகின்றது.
போரின் பழமை
போர் என்பது மனிதனை நெறிப்படுத்தும் இன்றியமையாத ஒரு கருவியாகும். மனித இன வரலாற்றில் போரானது சிற்சில குறுகிய கால இடைவெளியோடு நிகழ்ந்துள்ளது. எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கேயோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போரில்லாத உலகம் இல்லை. போர்ப் பண்பு உயிரினங்களின் குணமாக உள்ளது. போராட்டம் என்பது உயிரினங்களின் இயற்கையான ஒரு பகுதி பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உலக இயற்கை என்றாற் போலவே போர் புரிவதையும் உலகத்தின் இயற்கையாகவே சங்கப் புலவர்கள் கருதியுள்ளனர் என்பதை,
“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ் வுலகத்து இயற்கை”
(புறம் 76; 1-2)
என்ற இடைக்குன்றூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. இதன் முலம் பண்டைய காலம் முதல் இன்று வரை போர் மனித இனத்தின் முக்கியப் பிரச்சனையாக இருந்துள்ளது புலனாகிறது.
போர்க்குரிய காரணங்கள்
காதல் வீரம் இரண்டும் மனிதனின் இயல்பான குணநலன்கள். ஓவ்வொரு மனித இனமும் ஏதாவதொரு தேவைக்காகப் போராட வேண்டியுள்ளது. போர்குணம் மனிதன் தோன்றிய நாளிலிருந்தே இருந்து வரும் ஒன்றாகும். மன்னர்களுக்கிடையே போர் ஏற்பட காரணங்களாக பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை யாவன.
போர் என்பது மனிதனுடைய இயற்கைச் செயல்
அரசக் குலப் பகைமைகள்
வெற்றியையும் நாடுபிடித்தலையும் பெரிதும் வேண்டல்
மறக்கலத்தால் உந்தப்பெற்ற மற உணர்ச்சி
போர் களத்தில் இறந்துபட்டோர் துறக்கம் அடைவோர் எனும் நம்பிக்கை
படையும் போர் மரபுகளும், மன்னனுடைய புகழை மிகுவித்தன என்னும் எண்ணம்
நடுகல் வழிபாடு
போர் போரை விளைவிக்கும்.
போன்ற பல காரணங்கள் போர்க்கு அடிப்படையாய் அமைவதை உணரமுடிகிறது.
பதிற்றுப்பத்தில் போர்
புறத்திணை நூலான பதிற்றுப்பத்து முழுவதும் சேர மன்னர்களின் போர் பற்றிய குறிப்புகளைக் கூறுவதாக அமைகின்றது. போர்க் குணம் மிகுந்து விட்டால் அரசர்கள் வேறு எதையும் எண்ணமாட்டார் இரவெல்லாம் விழித்திருந்து பகைவர்களது அழிவிற்குத் திட்டமிடுவர். தூங்க வேண்டிய நேரத்தில் கூட அவர்கள் தூங்க மாட்டார்கள் இதனை
போர்களத்தில் இறந்த வீரன் உயிரிய உயரிய
மேனிலை யுலகை எய்துவான்”
(பதிற் 50)
என்ற பாடல்வரியானது விளக்குகிறது. போர்களத்தில் இறந்தால் துறக்கம் செல்லலாம் என்ற தமிழருடைய நம்பிக்கையினை விளக்குகிறது.
படையெடுப்பு
ஒரு நாட்டின் மீது படையெடுத்து செல்லும் அரசன், அவனது வீரர்கள் முதலில் படையை தயார் நிலையில் வைப்பர். அதன்பின் படைகருவிகளுக்கு பூசையிட்டு வணங்குவர். படைவீரர்கள் போருக்கு ஆரவாரத்துடன் செல்வர்.
“ நெடுங்கொடிய தேர்மிசையும்
ஊடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன் அணியானை முரண் சேர் எருத்தினும்”
( பதிற் 34)
என்ற பாடல் வரி மூலம் வேந்தனின் வீரர்கள் புறமுதுகிட்டு ஒடாதவர்கள். வீரக்கழல் அணிந்தவர்கள் என்ற சிறப்பு கூறப்படுகிறது.
அகப்பாக் கோட்டையை அழித்தல்
அகப்பாக் கோட்டை மிக வலிமையானது. உயர்ந்த மதிற்சுவரை உடைய அழமான அகழியும் அதைச் சுற்றி காவற்காடு கொண்ட இக்
கோட்டையை பல்யானை செல்கெழுகுட்டுவன் அழித்தான். இதனை
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீருடைத் தேஎந்த முனைகெட விலங்கிய
நோர் உயர் நெடுவரை அயிரைப் பொருந.” பதிற் 21;26-29
என்ற பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன. இந்த அகப்பாக் கோட்டையை அழித்த சிறப்பை
“அகப்பாவை யழித்த குட்டுவன் என்று கூறும்போது
ஆஃது ஒர் அரும்பெருஞ்செயல் என்ற முறையிலேயே கூறப்படுகிறது..
என்று எஸ் கிருஷ்ணசாமி ஐயங்காரின் கூற்று எடுத்துரைக்கிறது. இத்தகைய முறையில் சேர மன்னன் அகப்பாக் கோட்டையை அழித்த விதம் அறியமுடிகிறது.
கடம்ப மரம் அழித்தல்
மன்னன் பகை மன்னர்களின் கடம்ப மரத்தினை அழித்து அதில் முரசம் செய்துக் கொள்ளுதல் சிறந்த போர் வீரமாக கருதப்படுகிறது. கடம்பமரத்தை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் கட்டளையிட்டான் என்பதை
“பலர் மொசிந்து ஒம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்
வென்றெறி முழுங்கும் பணை செய்த வெல்போர்.”
என்ற பாடல் வரிகள் முன் மொழிகின்றது. இப்பாடல் நெடுஞ்சேரலாதன் கடம்பழித்ததை உணர்த்துகிறது. இச்செய்தியை பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி “நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டப்பட்டது. அதன் பின் அடித்துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்கான போர் முரசு செய்து கொண்டான்” என்ற கூற்றின் மூலம் புலனாகிறது.
பண்டைய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் சின்னமாகக் கொடியும், கொடையும், முரசும் கொண்டிருந்தது போல காவல் மரங்களையும் கோட்டை வாசல் முன் வைப்பது மரபாக பின்பற்றப்பட்டுள்ளது.
“கடம்பு மரத்தை வேருடனும் கிளையுடனும் அழித்து வீரவேந்தனாக நறவு என்ற இடத்தில் ஆண்டதாக இமயவரம்பன் குறிக்கப்படுகிறான் என்று எஸ். கிருஷ்ணசாமி ஐய்யங்கார் குறிப்பிடுகிறார். பல மன்னர்களுக்கும் காவல் மரமாக பலவகையான மரங்கள் உண்டு. அவற்றில் கடம்ப இனத்தவரின் காவல் மரமாக கடம்ப மரம் இருந்தது. சில சேர வேந்தர்கள் கடம்ப மரத்தை அழித்ததை பதிற்றுபத்து எடுத்துரைக்கிறது.
மோகூர்ப்போர்
மோகூர் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். பழையன் இவ்வூரை ஆட்சி செய்து வந்தான். அறுகை செங்குட்டுவனின் நண்பன். இவன் குன்றத்தூரில் ஆட்சி செய்து வந்தான். பழையன். அறகையை வென்று சிறையில் அடைத்தான். ஆகவே செங்குட்டுவன் தன் நண்பனை மீட்க போரில் ஈடுபட்டான் என்பதனை
“மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் Nவும்புமுதுல் தடிந்து”
(பதிற் 44; 14-16)
“ மொய் வளம் செருக்கி மொசிந்து வரு மோகூர்
வலம்படு குழஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்” (பதிற் 49. 8-10)
என்ற பாடல் வரிகளால் புலவர்கள் இம்புகின்றனர். மேலும் பழையன் நாட்டில் சென்று அவர்களின் பெண்டிர்களின் கூந்தலை கயிறாக திரித்து யானையைக் கட்டினான் என்பதும் புலனாகிறது. இவை மட்டுமின்றி கொல்லிமலைப்போர் நெடுமிடல் என்ற இடத்திலிருந்து நடைபெற்ற போர். சேரர்கள் தகடுரை வென்ற சிறப்பு. பகைவர்களின் கடம்ப மரத்தை அழித்தல் போன்ற பல்வகையான போர் நிகழ்வுகள் பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
முடிவுரை
பதிற்றுப்பத்து பாடல்களின் வழி தன் இனத்தை பாதுகாத்து கொள்ளவும், பொருளாதாரத்தை பெருக்கி கொண்டு புகழுடன் வாழ்வதனையும் நோக்கமாக கொண்டு பழங்காலத்தில் போர் நிகழ்வு மேற்கொள்ளப் பட்டது புலனாகிறது. படையெடுத்து செல்லும் மன்னனும் வீரனும் தம் படையெடுப்பால் வெற்றி விளைய வேண்டும் என எண்ணி நிமித்தம் பார்த்து சென்றுள்ளனர் என்பது புலனாகிறது. மன்னர்களின் பலவகை செயல்கள் பகைவர்களை இழிவுப்படுத்தும் செயலாகவும் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக