புதன், 20 ஜூன், 2018

அகநானூற்றிலும் திருக்கோவையிலும் மீவியல் புனைவுகள்

 

அகநானூற்றிலும் திருக்கோவையிலும் மீவியல் புனைவுகள்

    தொகை நூல்களில் ஒன்றான அகநானூறும் பக்தி இலக்கிய நூலான திருக்கோவையும் காலத்தினால் வேறுபட்டவை. இவ்விரண்டிலும் ‘மீவியல்’ என்ற உத்தி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதனையும், அதன் கற்பனைத் தன்மை, இரண்டிலும் உள்ள ஒற்றுமையையும் ஆராயும் விதமாய் இக்கட்டுரையின் நோக்கம் அமைகின்றது.

மீவியல் - விளக்கம்

    “மிசை - மீமிசை என்பது போல் இயல்பு - மீவியல்ர் என்றாயிற்று என்று கொள்வது பொருத்தமானதாகும்” என்பர். இயல்பு நிலைகளால் விளக்க இயலாததும், இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டதுமாக அமைவனவற்றை மீவியல் நிகழ்வுகள் எனலாம். இயல்பு நிலையும் மீவியல் நிலையும் ஒப்பு நோக்கு நிலைகளாகும். அதீத கற்பனையுடன் நடக்காதவற்றையும் நம்ப முடியாதவற்றையும் பற்றி கூறுதல் மீவியல் புனைவு ஆகும். மீவியல் என்ற சொல் அகராதிகளில் காணப்படவில்லை எனினும் அதற்கு இணையான மீ, மீக்கூறல் ஆகிய சொற்களுக்கான விளக்கங்களைக் காணும் போது,
    ‘கழகத் தமிழ் அகராதி ‘மீ” என்பதற்கு ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் ஆகிய பொருளையும், ‘மீக்கூறல்” என்ற சொல்லிற்கு கொண்டாடல், புகழ்தல், வியத்தல் ஆகிய பொருளையும், ‘மீக்கூறு” என்பதற்கு புகழ், புகழ்ச்சி, மீக்கூற்றம் ஆகிய பொருள்களையும் கூறுகின்றது.” (ப.765)
    சாதாரண மனிதனை கடந்த தெய்வம் அல்லது தெய்வத்தன்மை பொருந்திய ஒன்றைக் குறிப்பதையே மீவியல் என்று கருதலாம்.

புனைவு விளக்கம்

    புனைவு என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. ‘புனை தேர்” (புறம். 122) ‘புனை மாணல்லில்” (முல்லைப்பாட்டு-62) ‘புனையிழை” (குநற்-2) ‘புனையா ஓவியம்” (நெடுதல்-142) இவ்விடங்களில் அழகு செய்யப்பட்ட எனும் பொருண்மையிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
    ‘புனைவு” என்பது அழகுபடுத்தி கூறுவது. ஒன்றனை சுட்டுவதற்கு பல விளக்கங்களில் கூறுவதற்கு பதிலாக அழகுபடுத்தி உவமையாக்கி மெருகூட்டி சொல்லப்படும் உத்திகளில் ஒன்று. புனைவு என்பது சொல்லுக்கு அலங்காரம் செய்வது, பொலிவூட்டுவது எனினும் பொருள்படும்.


இயற்கையிறந்த நிகழ்வு

    கழகத் தமிழ் அகராதி ‘இயற்கை” என்ற சொல்லிற்கு ‘வழக்கம், இயல்பு, முறைமை என்றுப் பொருள் கூறுகிறது. (ப-113) இவற்றிலிருந்து இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் என்பதற்கு இயல்பு அல்லாத வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சிகளை கூறுவது என்பது பெறப்படும்.
    நம்ப முடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத, வியப்பூட்டுகின்ற, காரணகாரிய முறைமைக்கு உட்படுத்த முடியாத நிகழ்வுகளை இயற்கை இறந்த நிகழ்ச்சி என்று வரையறுக்கலாம்.

இல்லது புனைதல்

    இல்லாததைக் கற்பனை செய்து கூறல் இல்லது புனைவாகும். ‘உலகில் நிகழ முடியாத ஒன்றை நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடுவதாக அமைவது இல்லது புனைதல்” என்று ந.முருகேசன் கூறுவார். (பாரதிதாசன் கற்பனை (ப.29))
    உலகில் நடக்காத ஒன்றினை நடந்தது போலவும், இல்லாத ஒன்றனை இருப்பது போலவும் கூறுவது இல்லது புனைவாகும்.

தேர் புனைவில் மீவியல்

    தலைவன் பொருள்வயின் பிரிந்து வினைமுற்றி மீளும்போது தன்னுடைய தேரினை விரைவாக செலுத்துமாறு பாகனிடம் கூறுவான். அவ்வாறு கூறுகையில் தேரின் வேகம் குறித்து அது மீவியலாக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.
    ‘கால்இயல் நெடுந்தேர்” (அகநா.175:10)
    ‘நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
    கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி” (அகநா.334:11-12)
ஆகிய அகநானூற்றுக் பாடலில் தேரின் வேகத்தினை காற்றை விட வேகமாகச் செல்லும் தேர் என்று புனைந்துக் கூறப்பட்டுள்ளது.

மனிதன் குறித்த புனைவுகள்

    மனிதன் குறித்த மீவியல் புனைவுகளில் தலைவன், தலைவி ஆகிய இருவரின் வருணனைகள், அழகுநலம், வருத்தங்கள் ஆகியன யாவும் புனைந்து சொல்லப்படுகின்றன.
    ‘அன்பும் மடனுஞ் சாயலும் இயல்பும்
    என்பும் நெகிழ்க்குங் கிளவியும்” (அகநா.225 : 1-2)
என்ற அகநானூற்றுப் பாடலில் அன்பு, இளமை, அழகு இனிய தன்மைகளோடு என்பையும் இளகச் செய்யும் வார்த்தைகளும் என்று தலைவியை அவளது வார்த்தைகளை புனைந்து சொல்லப்பட்டுள்ளது பெறப்படுகிறது.

    ‘அம்பணை நெடுந்தோள் தங்கி” (அகநா.223 : 11)
என்ற பாடலடிகளில் ‘உயர்ந்த அணை போன்ற தோளிடத்தே தங்கும்” என்று தோளை வருணித்து புனைவாகச் சொல்லப்பட்டு உள்ளமை காணப்படுகின்றது.
    இதே முறையை பக்தி இலக்கியமான திருக்கோவையிலும் காணமுடிகின்றது. தலைவி வெளியே சென்று விளையாடாத காரணத்தினால் இவளுடைய நடையைக் கண்டு அன்னங்கள் நடையைக் கற்கவில்லை. இவளுடைய பார்வையைப் பெண் மான்களும் பெறவில்லை. இவளுடைய இனிய சொற்களைக் கிளிகளும் பெறவில்லை என்ற தலைவியை வருணித்து கூறுமிடத்து, மீவியல் புனைவாய் சொல்லப்பட்டமையை, பின்வரும்
    ‘கற்றில கண்டன்னம் மென்னடை
        கண்மலர் நோக்கருளப்
    பெற்றில மெனிபினை பேச்சுப்
        பெறாகிள்ளை பிள்ளையின்றொன்று” (கோவை 97 : 1-2)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
    மேலும், மாடங்களை வைத்துச் செய்யப் பெற்ற தேவலோகமும் இவளுக்கு ஒப்பில்லை என்று சொல்லும் வண்ணம் அழகு படைத்தவள் தலைவி என்ற அழகினை புனைந்துரைக்கப்பட்டமையை,
    ‘மாடஞ்செய் பொன்னக ரும்நிக
        ர்pல்லைஇம் மாதர்க் கென்னப்” (கோவை. 129 : 1)
என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

இயற்கை குறித்த மீவியல்

    ‘வான்தோய் வெற்ப” (அகநா.168:3) என்ற பாடல் வரியில் வானை முட்டும் மலையை உடையவனே என்று தலைவனை புகழுமிடத்து வானை முட்டும் மலைகளை உடைய ஊரினன் என்று மலையை புனைந்து சொல்லப்பட்டுள்ளது பெறப்படுகின்றது.
    ‘அமையறுத் தியற்றிய வெள்வாய்த் தட்டையின்
    நறுவிரை ஆரம் அறவெறிந் துழுத
    உளைக்குரற் சிறுதிணை” (அகநா. 388 : 2-4)
என்ற பாடலடிகளில் கதிரையுடைய சிறிய தினையை மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
    ‘அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
    குப்பை வெண்மணல்..... அளவைப் பகுவாய்” (அகநா. 160 “ 3-8)
என்ற பாடலடிகளில் கடற்கரைச் சோலையை அழகுபடுத்திக் காட்ட புனைந்துரைக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு அகநானூற்று பாடல்களில் இயற்கை, மனிதன், பிறபொருள்கள் என அனைத்தின் மேலும் புனைவை மிகுதிப்படுது;திக் காட்டப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.

இறைவன் குறித்த மீவியல்

    சங்க இலக்கியங்களில் காணப்படும் புனைவுகளைப் போலவே பக்தி இலக்கியத்திலும் மீவியலாக காட்டப்பட்டுள்ளன. மனிதனுக்கு அப்பாற்பட்ட விஷயம் எல்லாமே மீவியல் என்ற நிலையில் பார்க்கின்ற பொழுது கடவுள், இறைவன் என்ற சொல்லே மீவியலாகக் காட்டப்பட்டுள்ளது. இறைவன் பாம்பினை இடையில் அணிந்தவன், முப்புரங்களை எரித்தவன், விண்ணைக் கடந்தவன், கங்கையை சடையில் தரித்தவன் என்று கூறுமிடத்து இறைவனின் பெருமைகளை கூறும் போது மீவியல் புனைவாய் சொல்லப்பட்டுள்ளது.
    ‘புரங்கடந்தான் அடிகாண்பான்
        புவிவிண்டு புக்கறியாது” (கோவை . 86:1)
    ‘ஆரத் தழையராப் பூண்டுஅம்
        பலத்துஅன லாடிஅன்பர்க்கு
    ஆரத் தழையன் புஅருளி” (கோவை. 91:1-2)
    “அக்கும் அரவும் அணிமலைக்
        கூத்தன் சிற்றம்பலமே” (கோவை.103:1)
இவ்வடிகளிலெல்லாம் இறைவனின் சிறப்புகளையும் பெருமைகளையும் கூறுமிடத்து மிகுத்து கூறப்பட்டுள்ளது தெரிய வருகின்றது.

முடிவுரை

    சங்க இலக்கிய காலக் கட்டத்திலும் சரி பக்தி இலக்கிய காலக் கட்டத்திலும் சரி மிகுதியாய் உவமைப்படுத்தி பார்க்கும் தன்மையை காண முடிகின்றது.
    அவை இறைவனாய் இருந்தாலும், மனிதனாய் இருந்தாலும் அல்லது பிற பொருள்களின் மீது சொல்லப்பட்டாலும் ஒன்றனின் சிறப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு அதன்மீது உவமை, கற்பனைகளை புகுத்தி புனைந்து சொல்லப்பட்டமையை இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக