வியாழன், 21 ஜூன், 2018

கருப்பன் வழிபாடு



                           கருப்பன் வழிபாடு                                                     



நாட்டுப்புற  நகர்புற மக்களிடத்திலும் தெய்வம் பற்றிய நம்பிக்கை இருந்து வருகின்றன. சிறுதெய்வம், பெருதெய்வம் என்ற பாகுபாட்டிற்கேற்ப மக்கள் தங்கள் வழிபாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். சிறு தெய்வங்களில் ஒன்றான கருப்பனார் என்றழைக்கப்படும் சங்கிலி கருப்பனைப் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.

சங்கிலி கருப்பன்

கருப்பனார் பெரு தெய்வங்களுக்கு காவலாலியாகவும். மக்களைக் காக்கும் கடவுளாகவும் எண்ணப்படுகிறார். ஆனால் சங்கிலி கருப்பன் என்பவர் இன்றையச் சூழலில் முதன்மைத் தெய்வமாகக் வணங்கப்படுகிறார். இவருக்கு வழிவழியாக வழிபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மக்கள் பக்தியோடு அவரிடம் வேண்டினால் உடனே வரம் தருவதாக மக்கள் நம்புகின்றனர்.

உருவத் தோற்றம்

     கரிய நிற உடம்பும், உடம்பில் ஆயுதமாக சங்கிலியும் அணிந்திருக்கிறார். ஒரு கையில் பெரிய கொடுவாலும் மறு கையில் சங்கிலியும் பிடித்தவாறு காட்சியளிக்கிறார்.  வீரபராக்கிரமம் கொண்டவராகவும் காட்சியளிக்கிறார் தின்தோள் வலிமையும் சங்கிலியையும் உடம்பில் அணிந்திருந்த காரணத்தினால் சங்கிலி கருப்பன் எனப் பெயர் பெற்றிருக்கிறார்.

வேறு பெயர்கள்

     சங்கிலி கருப்பன், கருப்பனார், மின்னடியான், கருப்பு சாமி, வேடியப்பன், மூப்பனார், சின்ன மூப்பன், பெரிய மூப்பன் இன்னும் மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றார்.

ஊரும் வீற்றியிருக்கும் இடமும்

சேலம் மாவட்டம் பொன்னாம்மாப்பேட்டை இரயில்வே கேட்டையடுத்த புத்துமாரியம்மன் கோவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெரிய வேப்ப மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார். அதன் அருகில் பெரிய கிணரும், தண்ணீpர் ஓடையும் அமைந்துள்ளது. இக்கோவில்  ஆதி காலத்தில் இங்கு தோன்றியதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

வழிபாட்டுப் பொருட்களும் வழிபடுவோரும்

     வழிபாட்டு பொருட்களாக பெரிய மாலையும், கிள்ளு சரம் பூவும், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்கு, விளக்கெண்ணெய், எலும்மிச்சை பழம் தேங்காய், வாழைப்பழம், கரும்பு, மஞ்சள், குங்குமம், காய், பழம் போன்றவையாகும்.

பூஜைகள்

முதலில் சாமிக்கு நீர் அபிசேகம் பால் அபிசேகம் மஞ்சள் அபிசேகம் நடைபெறும். சாமிக்கு  பூ மாலையாலும், எலுமிச்சை மாலையாலும் அலங்காரம் செய்வர். தேங்காய் உடைத்து ஊதுபத்தி பற்றவைத்து கற்பூரதீபம் காட்டி மணி அடித்து அருள் பாலிக்க வேண்டுவர்.

     பிறகு அனைவருக்கும் கற்பூரத்தைக் காட்டி ஆண்களுக்கு நெற்றியில் திருநீறுயிடுவதும், பெண்களுக்கு வலது கையில் திருநீறு கொடுப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார். பிறகு பக்தர்கள் கற்பூரதீபத்தட்டில் காணிக்கை செலுத்துவார்கள். அதன் பிறகு சாமியின் மேலும் காணிக்கையை வைக்கச் சொல்வார்கள்.

     பிறகு பூசாரியான மாரியப்பன் அனைவருக்கும் தீர்த்தத்தைத் தெளிப்பார். வந்த அனைவருக்கும் சுண்டலும், எலும்மிச்சை சாதமும், புளி சாதமும் அவுள் போன்ற உணவுகளை அனைவருக்கும் கொடுப்பார்.

     சாமியை தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அரை மூடி தேங்காயும் இரண்டு வாழைப்பழமும் திருநீறும் அனைவருக்கும் கொடுப்பார். பிறகு எலும்மிச்சைபழம் கொண்டுவந்த பக்தர்களுக்கு அவர்கள் எத்தனை பழம் கொண்டு வந்தார்களோ அவைகளில் ஒன்றை மட்டும் சாமி அருகில் வைத்துவிட்டு மற்றவைகளை பக்தர்களுக்குக் கொடுப்பார். அவர்கள் வேண்டுதலுக்காக வீடு, காடு, வாகனம், வியாபாரம், பில்லி, சூனியம், கால் வலி போன்ற அனைத்திற்கும் அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திச் கொள்வர்.

     பிறகு கேட்கும் பக்தர்களுக்கு தீர்த்தம் தருவார். பூசாரியின் அண்ணனிடத்தில் பக்தர்கள் அனைவரும் அவரிடத்தில் தங்களுக்கு ஏற்படும் இன்பதுன்பங்களையும் கூறுவார்கள். அதற்கு அவர் தரும் வாக்கு அனைவரும் மன தைரியத்தை ஏற்படுத்தும்.

கண்ணேறு கழித்தல்

     பக்தர்கள் செல்லும் போது எலும்மிச்சை பழத்தை இரண்டாக அறுத்து சிகப்பைக் கொட்டி குடும்பம் குடும்பமாக சாமிக்கு ஐந்து மீட்டர் முன்னிலையில் நிற்க வைத்து சுற்றிப் போட்டு நெற்றியில் பொட்டும்.

கையில் பொட்டும், கால்களில் எலும்மிச்சை சாறையும் இடுவார்கள். இதனால் தனக்கு ஏற்பட்டிருக்கிற காத்து, கருப்பு, பயம், கண்ணேறு, கை, கால் வலி போன்றவை தன்னை விட்டு நீங்கி விட்டதாக நம்புவார்கள்.


கண்ணேறு கழித்தல் மந்திரம்

     காத்து, கருப்பு, பில்லி, சூன்யம், நல்ல கண்ணு, நொல்ல கண்ணு, நாய் பேய், பிசாசு எது பிடிச்சிருந்தாலும் உட்டு தூர ஓடிப்போயிரு. கருப்புசாமி எப்பவும் நீதாம்பா கூடவே இருக்கனும் நோய், நொடி, இல்லாமல் நல்லா வெட்சி இருக்கணும். உன் பிள்ளைகளை நீதாம்பா காப்பாத்தணும் கருப்பா வாடாப்பா ஏரிக்கையா தலையில என்று கூறுவர்.

கையுறை வழங்குதல்

     பக்தர்களுக்கு சங்கிலி கருப்பன் வேண்டியவற்றைத்  தந்தவுடன் பக்தர்கள் சாமிக்குத் தருவதாகச் சொன்னபடி அனைத்தையும் வழங்கவார்கள். மணி, அறுவாள், பணம், கிடாய், கோழி, முட்டை, காய், கறிகள் போன்றவைகளைத் தருவார்கள்.

சாமிக்கு படைக்கப்படும் உணவு

சுண்டல், பால், பழம், ஆட்டுக்கறியும் சுட்ட ஈரலும் (நெருப்பால் சுட்ட ஈரல்) கோழி ஈரல் மற்றும் மதுபானம், சாராயம், சுருட்டு, வாழைப்பழம், தேங்காய் போன்றவைகள் வைத்து படைக்கப்படும்.

     எலுமிச்சைச் சோறும், புளிச்சோறும் சர்க்கரைப் பொங்கலும் வைத்துப் படைக்கப்படும். கருப்பனாருக்கு பூஜை நடைபெறும்.

பூசாரி வாழ்கைவரலாறு

     பூசாரிமாரியப்பன், பூசாரியின் அண்ணன் சேகர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை மாரியப்பனுக்கு நாற்பது வயதும் சேகருக்கு ஐம்பது வயதும்  ஆகிறது. இருவரும் வீட்டில் நூல் நெய்யும் தறிப்போட்டு தங்களுக்கு வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர். இவர்களுக்கு ஒர் அம்மா இருந்தது சமீபத்தில் இறந்துவிட்டார், இவர் மட்டும் தனியாக சமைத்து உண்டு வாழ்கின்றார்.

     சங்கலி கருப்பன் வீட்டிருந்த இடமானது வேறொருவரின் சொந்த நிலம் இவர்களுக்கும் பூசாரிகளுக்கும் மனகசப்பு ஏற்பட்ட காரணத்தினால் தனது வீட்டிற்கு அருகிலே கருப்பனார் என்று பெருஞ்சிலையை வைத்து மக்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

சிலையின் உயரயமும் வடிவமைக்கப்பட்ட இடமும்

           கருப்பனார்  சிலையின் உயரம் ஏழு அடியாகும் இந்தச் சிலையை கோயம்புத்தூரில் செதுக்கப்பட்டு இங்கு கொண்டுவந்து ஒரு வருடம் தண்ணீரிலும் ஒரு வருடம் பழத்திலும் ஊறவைத்து வழிபாடு செய்தனர்.

யாகம் வளர்த்ததேவையான இயற்கைப் பொருள்கள்

     சந்தனகுச்சி


    கருப்பன் வழிபாடு
     வேங்கைக் குச்சி

     பொரசன் குச்சி

     வெளேறி

     வேப்பங்குச்சி

     செம்பளிச்ச

     கருங்கேறி

     கிளுவகுச்சி

     பாலகுச்சி

     வெள்ளமொண்டி

கருப்பாளகுச்சி

     ஆலகுச்சி

     சுடிறுகுச்சி

     வெள்ள எறுக்கங்குச்சி

யாகம் வளர்த்தவர்கள்

     யாகம் வளர்க்க வந்தவர்கள் பிரமாணர்கள் ஆவார்கள். சேலம்; ஈரோடு மாவட்டத்திலுள்ள  அனுபவம் வாய்ந்த பிராமணர்களை வரவழைத்து யாகம் நடத்தப்பட்டது.

     ஏழுநாட்கள் யாகம் நடத்தப்பட்டது. இதில் ஐந்து யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு யாக குண்டத்தில் மூன்று பிராமணர்கள் வீதம் பதினைந்து பிராமணர்கள் யாகம் வளர்த்தனர்.

யாகத்தின் பயன்கள்

உலக மக்களின் நன்மை வேண்டிக் கருப்பனார் சிலையைப் பிரதிஸ்டை செய்வதற்கு யாகம் வளர்க்கப்படுகின்றது. சிலையிலிருந்து வெளிப்படும் ஆத்மாவால் மக்களின் துன்பம் நீங்கி இன்பம் செழிக்கும் என்று நம்புகின்றனர். மாதம் மும்மாறி மழைபெய்யவும் எனவும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று நம்புகின்றனர்.

யாகத்திற்கத் தேவைப்படும் நாட்கள்

     யாகம் வளர்த்துவதற்கு குறைந்த பட்சம் ஏழுநாட்கள் தேவைப்படுகிறது. ஏழுநாட்கள் இரவு, பகல் என பார்க்காமல் யாகம் வளர்த்துவார்கள். மேலும் பதினான்கு நாட்கள் கால் மண்டலம் என அழைக்கப்படுகிறது. இருபத்தி எட்டுநாள் அரை மண்டலம் என அழைக்கப்படுகிறது. நாற்பத்தி எட்டு நாள் முக்கால் மண்டலம் என அழைக்கப்படகிறது. அறுபது நாட்கள் ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

     ஒரு மண்டலம் அரை மண்டலம் என யாகம் வளர்த்துபவர்கள் பொருளாதாரத்திலும் ஜனத்தொகையிலும் மேன்மை அடைந்தவர்களே இந்த யாகத்தை நடத்துவார்கள்.

பூஜை நடைபெறும் காலம்

     பூஜையைச் சிறப்பாகச் செய்வதற்கு செவ்வாய்க் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் உகந்ததாக எண்ணுகிறார்கள். அம்மாவாசை, பௌர்ணமி அன்று விமர்சியாக வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது.

அம்மாவாசைக்கும் கருப்புசாமிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அம்மாவாசை நாளன்று வெளிப்படும் காத்து, கருப்பு, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகள் வெளிப்படுவதைத் தடுப்பதற்காக கருப்புசாமி வழிபாடு நடத்தப்படுகின்றது.

கருப்பனாருக்கு பூறை நடைபெறும் நேரம்

     கருப்பனாரக்கு காலை ஐந்து மணிக்கு பூஜை நடைபெறும். மதியம் பன்னிரண்டு மணியளவில் இரண்டாம் பூஜை நடைபெறும். மூன்றாம் பூஜையாக மாலை ஏழு மணி அளவில் இறுதி பூஜை நடைபெறும். பூஜையை முடித்த பிறகு தான் நீராடிவிட்டு கறி உணவைச் சாப்பிடுவார். முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜையை நடத்தவார்.

பூசாரியின் சமயமும் சாதியும்

     பூசாரியானவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர். வன்னியர் குலத்தில் பிறந்து வளர்ந்தவர். பூசாரி பண்டாரர் வகுப்பைச் சாராதவர். ஆனாலும் தன்னைக் கடவுளுக்காகவும் மக்களுக்காவும் இறைப்பணியில் ஈடுபட்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் கூறும் வார்த்தைகளைக் கருப்பனார் வாக்கு கொடுத்ததாக நம்புகின்றனர்.

பக்தர்களின் சமயமும் சாதியும்

     பக்தர்கள் அனைவரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர். இங்கு வரும் பக்தர்கள் வன்னியர்,  நாடாh,;  குரும்பர் இன மக்களும். ஆசாரி இன மக்களும்,  வெள்ளாளர், சாணார், நாயக்கர் போன்ற இனத்தவர்கள் தவறாமல் வந்து வழிபடுகின்றனர். கீழ் வகப்பினர் யாரும் வருவதில்லை.


நாடி வரும் பக்தர்களின் ஊர்கள்

     சங்கிலிக் கருப்பன் என்ற கருப்பனாரைத் தேடி நாடிவரும் அதிக பக்தர்கள் வெள்ளாளகுண்டம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். சேலம், பொன்னம்மா பேட்டை கேட், கிச்சிப்பாளையாம், அம்மாபேட்டை, வாழப்பாடி, ஆத்தூர் முதலான ஊர்களிலிருந்தும் சங்கிலி கருப்பனை வழிபட வருகின்றனர்.

சங்கிலி கருப்பனின் அருகில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை      

     சங்கிலி கருப்பனின் அருகில் மக்கள் விவசாயம் செய்கின்றனர்.  ஆட்டோ ஓட்டுதல், நூல் நெய்யும் தறி ஓட்டுகின்றனர். ஆடு, மாடு, பன்றி வளர்த்தல் போன்ற தொழில்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

 மக்கள் ஓரளவிற்கு படிப்பறிவு பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். களி, கம்மஞ்சோறு போன்ற உணவுகளைச் சாப்பிடுகின்றனர்.

முடிவுரை

     மக்கள் எவ்வளவு நாகரிகம் அடைந்தாலும் அவர்கள் கடவுள் குறித்த நம்பிக்கைகளிலும் கடவுள் கொள்கைகளிலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.  அவ்வகையில் சங்கிலி கருப்பன் என்ற கருப்பனார் பெரும் சக்தி வாய்ந்த கடவுளாகக் கருதப்படுகின்றார். நினைத்ததை, வேண்டியவுடன் நிறைவேற்றுவதில் வல்லவராய்த் திகழ்கிறார். அவரை நாடி வரும் பக்தர்களுக்கு வீடு தேடி வரம் தருகிறார் என்று மக்கள் நம்புகின்றனர். துன்பத்தில் அவரை நினைத்தால் இன்பத்தை அள்ளிக் கொடுப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக