புதன், 20 ஜூன், 2018

அரசப் புலவர்களின் பாடல்களில் உள்ளுறையும் இறைச்சியும்

 

  அரசப் புலவர்களின் பாடல்களில் உள்ளுறையும் இறைச்சியும்

    சங்க இலக்கியம் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. சங்க இலக்கியத்தினை பல்வேறு புலவர்கள் இயற்றியுள்ளனர். ஆண் பாற், பெண் பாற் புலவர்கள் என்ற நிலையிலிருந்து கொங்குநாட்டுப் புலவர், அரசப் புலவர் என்ற நிலைக்கு மாறி ஆய்வு செய்யதக்கது. இந்நிலையில் அரசப் புலவர்களின் பாடலில் புதைந்திருக்கும் உள்ளுறை இறைச்சி ஆகியவற்றினை எடுத்து வெளிக்கொணரும் வகையில் இக்கட்டூரை அமைப்பெறுகிறது.

இறைச்சி

    இறைச்சி என்பதற்கு கருப்பொருள் என்றும் இறைச்சிப்பொருள் என்பதற்கு கருப்பொருளின் உட்பொருள், உடனிலை, உவமை, கருப்பொருளடியாய் பிறக்கும் உள்ளுறை உவமை என்று பலவாறு விளக்கம் தருகின்றது மதுரைத் தமிழ்ப் பேரகராதி. (ப. 301)
    இறைச்சி என்ற சொல்லுக்கு அறிஞர்கள் பலரும் பலவாறாக கருத்து தெரிவித்துள்ளனர். “உள்ளுறை தவிர இறைச்சி என்பது பிறிதொரு கோட்பாடா அல்லது இரண்டும் ஒன்றா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.  உள்ளுறை ஐந்தில் முதலாவதாகிய உடனுறையே இறைச்சி” என்பார் நச்சினார்க்கினியர். ஐங்குறுநூறுக்கு உரை எழுதிய ஒளவை. சு. துரைசாமி பிள்ளை அதன் முன்னுரையில் இறைச்சிப் பொருள்கள் என ஒன்றைத் தொல்காப்பியர் கூறினார் எனக்கோடல் உண்மையாகத் தோன்றவில்லை என்று கூறுகிறார். நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயன சாமி ஐயர் மிகப் பெரும்பாலான பாடல்களுக்கு உள்ளுறை இடம் பெற்ற பாடல்களையும் சேர்த்து இறைச்சிப் பொருள் என்றே எழுதிசெல்கிறார்.
    இறைச்சி என்பது விரும்புவர்க்கு நேயமாகிய அன்புணர்ச்சியைத் தருவதையே சுட்டும் எனலாம். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இறைச்சிக்கான விளக்கங்களைக் காணலாம்.
    “இறைச்சி தானே உரிப்புறத்ததுவே”  (தொல். பொருள். 225)
    “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே
    திறத்தியல் மருங்கில் தெரியுமோர்க்கே” ( தொல். பொருள்.226)
“ அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டலும்
    வன்புறை ஆகும் வருந்திய பொழுதே”  (தொல். பொருள். 227)
இறைச்சி என்பது உரிபொருளின் புறத்தே தோன்றும் பறவை, விலங்குகள் போன்ற உயிரினங்களின் செயல் பற்றிய செய்தியாகும்.
தலைவி பிரிவாற்றாத காலத்தில் தோழி கருப் பொருள்களுள் சிறப்பாக உயிரினங்களின் செயல்களுள் தலைவன் அன்புறுதற்கு இடனான நிகழ்வைச் சுட்டிக்காட்டி தலைவர் திரும்பிவிடுவர் என வற்புறுத்தலும் உண்டு.
    “நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாசும் யொளிக்கும்
    அன்பின தோழி அவர் சென்ற ஆறே”  (குறுந். 37)
தலைவன் விரைவில் திரும்பி வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கும் இடம் இது. அவன் சென்ற வழியில் யானை தன் பசியை நீக்குவதற்காக யா மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச்செய்தல் அன்பைப் புலப்படுத்தும் நெறியாகும். தலைவர் நின்பால் அன்புமிகவுடையர் உனக்கு அருள்செய்வார். அவர் சென்ற வழி இத்தகைய அன்பைப் புலப்படுத்துவதாக பகலின் அவருள்ளத்தே அன்பு தோன்றி நின்னை மறவாமல் திரும்புவார் என்பது குறிப்புப் பொருளாகும்.
    தலைவி பொருள் தேடப் பிரிந்தவராகிய தலைவர் உறுதியாகத் திரும்பிவிடுவார் என்று தோழியிடம் கூறி மனதைத் தேற்றிக் கொள்வதைக் கலித்தொகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதில் களிறு, புறா, மான் ஆகியவற்றின் அன்பினைச் சுட்டி இறைச்சியையு வெளிக்கொணரப்படுகிறது.
    “இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீய்ந்த உலவையால்
    துன்புறுஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
    அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
    மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே”
                    (கலித். 11 : 10-13)
என்ற பாடலடிகளில் புறாவின் அன்பினை எடுத்துக் காட்டி இறைச்சியை சுட்டப்பட்டமை அறியப்படுகிறது.

தொல்காப்பியர் கருத்து


    இறைச்சி என்பது பொதுவாகக் கருப்பொருளையும் சிறப்பாக அக்கருப்பொருள் சார்ந்த உயிரினங்களையும் குறிக்கும். மக்கள் நுதலிய அகன் ஐந்திணையில் இவ்வுயிரினங்களின் வாழ்வு முறை பற்றிச் சுட்டுமிடங்கள் பலவுண்டு. உரிப்பொருள் போலச் சுட்டப்படினும் அவை உயிரின் பகுதியாக அவை உரிப்புறத்தனவாகும்.
    பிரிவுக் காலத்தில் அன்புறுவனவாம் உயிரினங்களைத் தலைவன் வழியிடைக் காண நேரின், அவள் நினைவு  வந்து விரைவில் திரும்புவான் என்று தலைவியைத் தோழி வற்புறுத்தி ஆற்றுவதுண்டு. இவ்வாறாக, தொல்காப்பிர் கூறும் கருத்தை தமிழண்ணல் சங்க இலக்கிய ஒப்பீடு எனும் நூலில் கையாண்டுள்ளார்.

உள்ளுறை

    தொல்காப்பியர் உள்ளுறை என ஒரு பொருளை எடுத்தோதுகின்றார். அதன் உட்பிரிவுகளுள் ஒன்றே உள்ளுறை உவமை ஆகும். இவ்வுள்ளுறை உவமை பற்றிஒரளவு அறிந்திருக்கும் நாம் உள்ளுறை என்ற பொதுக் கோட்பாடு பற்றி யாண்டும் எப்பொழுதும் சிந்திப்பதில்லை இக் கோட்பாடு பற்றிச் சங்க நூல்களுள் நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன. ஆயினும் அவை அனைத்தும் உய்த்துணரப் படாமல் உள்ளன. இதனால் உரையாசிரியர்கள் தாமும் இக் கோட்பாட்டினை தெளிவுபெற விளக்கிச் சென்றிலர். இந்நிலையில் இதனை முழுவதும் புலனாக விளக்கிச் சென்றிலர். இந்நிலையில் இதனை முழுவதும் புலனாக விளக்க முடியுமா என்பது ஐயத்திற்கு இடமாகவே உள்ளது. எனவே பொதுவாக உள்ளுறை உவமம் பற்றியும் இங்கு காண்போம். பொருளியல் உள்ளுறை பற்றி மூன்று நூற்பாக்கள் இடம் பெறுகின்றன.
    உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்
    கெடலரும் மரபின் உள்ளறை ஐந்தே  (தொல். பொருள். 1188)
    அந்தமிழ் சிறப்பின் ஆக்கிய இன்பம்
    தன்வயின் வருதலும் வகுத்த  பண்பே   ( தொல். பொருள். 1189)
    மங்கல மொழியும் வைஇய மொழியும்
    மாறில் ஆண்மையின் சொல்லிய மொழியும்
    கூறியல் மருங்கின் கொள்ளும் என்ப   (தொல்.பொருள்.1190)

உள்ளுறை ஐந்து வகைப்படும். உடனுறை உடனுறைவதொன்றைச் சொல்ல, அதனானே பிறிதொரு பொருள் விளக்குவது ஏதேனும் ஒரு பொருளைக் கூறிவரும் பொழுது, பிறிதொரு கருத்தும் உடன் உறையுமாறு கூறுவதை இந்நூற்பா குறிக்கும்.

உவமம் என்பது ஏனை உவமம் என்பதன் வேறுபட்டு உள்ளுறை பொருளைத் தருவதாகும். எனவே இதனை உள்ளுறை உவமம் என்றே ஆளுவா.; தொல்காப்பியர் உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தொக்கு நின்று உணரப்படும். அடுத்த நூற்பாவில் இவ்வுள்ளுறை பொருளைத் தெளிவு படுத்துவதற்கு மட்டுமின்றி முடிவில்லாத சிறப்பினையுடைய இன்பத்தைத் தருவதற்கும் வருதல் அதன் பண்பாகும் என்பது விளக்கப்படுகிறது.
தலைவனுக்குத் தீங்கு வரும் என்று அஞ்சி மங்கல மொழியாற் கூறுவது, தம்மை வஞ்சித்தனாகத் திட்டிக் கூறுவது. தலைவனின் மாறுபாடற்ற ஆண்மையிற் பழிபடக் கூறியமொழி ஆக இம் மூன்றும் உள்ளுறை உவமையால் பெறப்படும்.

    அகபொருனொழுகலாற்றில் செல்லால் வெளியிட்டுக் கூறுவதற்குரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுவதன் பொருட்டு அமைத்துக்கொண்ட உரையாடல் முறையே உள்ளுறையுவமமாகும். பொருள் புலப்பாட்டிற்கு இன்றியமையாத ஏனைக் கருப்பொள்களின் நிகழ்ச்சியினை வெளியிட்டுரைக்கும் முகத்தில் அந்நிகழ்ச்சியினை உவமையாகக்கொண்டு தலைவன் தலைவியாகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளை உய்த்துணர்ந்துகொள்ளச் செய்தல் உள்ளுறையின் நோக்கமாகும். இவ்வுள்ளுறை உவமமானது சங்க அரசப்புலர்களின் பாடல்களில் பெருமிடத்தை காண்போம்.

    கிள்ளைத் தௌ;விளி இடை பயிற்று
    ஆங்கு ஆங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
    சிறுகிளி கழதல் தேற்றாள்     (அகம். 28  10-12)

    தினையைத் தின்ன வரும் கிளியை ஓட்ட மறந்ததால் தினைக்கதிரைக் கிளிகள் உண்கின்றன. அதனால் தினைப்புனம் காப்பதற்கு நீ தலைவனைப் பகலிலும் சந்திக்க இயலாது அதனால் தினைப்புனம் காப்பதுபோன்று கிளிகளை விரட்ட ஓசை எழுப்பி ஓட்டுதல் போன்று செயல் பட வேண்டும். என்று தோழி தலைவிக்கு கூறுவதாக அமைகின்றது. தலைவி தலைவனை சந்திக்க தோழி தலைவிக்கு உள்ளுறையாக உணர்த்துகிறாள்.

    உப்புஓய் உமணர் அருந்துறை போக்கும்
    ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழிஇ
    அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கி
    பெருங்களம் தொகுத்த உழவர் போல
    இரந்தோர் வறுங்கலம் மல்க வீச
    பாடுபல அமைத்து கொள்ளை சாற்றி    அகம். 30 5-10

    நுளையர்கள் பெருங்கடலுள் சிக்கி கிடக்கின்ற மீன்களை அதில் இருந்து நீக்கி உயிரைப் போக்கிக் கண்டவர்க்கு எல்லாம் கூறு வைத்துப் பரப்பி, உயிருக்குத் துன்பம் செய்தோம் என்னும் இரக்கம் சிறிதும் இன்றி மணற் குன்றிலே உறங்கினாற் போல பெரிய குலத்தில் பிறந்த குவளை நீங்கள் உங்கள் வசமாகி வருத்தி வேறுபாட்டால் எல்லாரும் இவளைச் சூழச் செய்து அலரை உண்டாக்கிய நீர் கவலையின்றி இருக்கின்றிர் என்பது உள்ளுறைப் பொருளாகும்.
    வேப்பறனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
    இரைதேர் வெண்குருகு அஞ்சி அயலது
    ஒலித்த பகன்றை இருஞ்சேற்று  அள்ளில்
    திதலையின் வரிப்ப ஒடி      அகம் 176: 8-11

    வயலில் உள்ள நண்டுக்கு வேம்பின் கரும்பைப் போன்ற நீண்ட கண். அது மற்றொரு பெண் நண்டோடு சேர்ந்து இன்பம் துய்க்கச் சென்றது. அப்போது நாரை தான் உண்பதற்குரிய இரையைத் தேடுவதைக் கண்டு அஞ்சிப் பக்கத்தில் உள்ள பகன்றைச் கொடிகள் தழைத்த சேற்றின் மீது மனிதரின் உடம்பில் படரும் தேமலைப் போன்ற வரிகள் தோன்றும் படி ஒரு வலைக்குள் பதுங்கியது விலங்குகளே இவ்வாறு இருக்கும் போது. அறிவுள்ள தலைவனே நீ மட்டும் ஏன் பரத்தையுடன் கை கோர்த்து செல்கின்றாயே என்று உள்ளுறையாக கூறப்படுகிறது.

முடிவுரை

    இறைச்சி என்பது கருப்பொருளின் வழியே பெறப்படும் உட்பொருள் என்பதனோடு அகராதிதரும் விளக்கத்தையும் அறிஞர்களின்  கருத்தையும் கொண்டு அறியமுடிகிறது. அதோடு உள்ளுறை என்பது  அகப்பொருளொழுகலாற்றின் வெளிப்பாட்டை சுட்டுதற்கு நாகரிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தி. ஆகவே இவ்விரண்டையும் அரசப் புலவர்களின் பாடலின் வழியே அறியப்படுகின்றது.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக