பழமொழி நானூற்றிலும் விவிலியத்திலும் கல்வி

காடுகளிலும், மலைகளிலும் வாழத் தொடங்கிய மனிதன் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது இவனது அன்றாடத் தேவைகளைப் பெறக்கூடிய முறையினை அறிவதே கல்வியாக இருந்தது. மீன் பிடித்தல், வேட்டையாடுதல், ஆடு மாடு மேய்த்தல் போன்றவைகளைத் தந்தை தன் மகனுக்கும் மகன் தனது மகனுக்கும் எனப் பரம்பரையாகக் கற்றுக் கொடுத்தனர். அம்முறையிலேயே தொழில் முறைக் கல்வியானது உருப்பெற்றுப் பின்னர் ஏட்டுக் கல்வி இலக்கியக் கல்வியாக மலர்ந்தது. இம்மலர்ச்சியே மக்களை அறியாமை என்னும் இருளிலிலிருந்து அறிவுலகுக்கு வர துணையாக இருந்தது.
கல்வியின் சிறப்பு
ஒருவன் நாட்டினை ஆள வேண்டுமாயின்,
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (குறள்.383)
செயலை விரைந்து செய்தலும், நிறைந்த கல்வியும், ஆண்மையுடைமையும் வேண்டும். கல்வியில் சிறந்தவன் ஒருவனால் மட்டுமே நாட்டில் நடக்கக் கூடியவற்றையும், தன் மக்களுக்கு வேண்டியவற்றையும் நன்கு ஆராய்நது நாட்டினை ஆள முடியும். அரசன் கல்வி கற்று ஒருவருடைய சொல் கேட்டு அவற்றை ஆராய்ந்து நாட்டினை ஆளும்போது அந்த நாடு செழுமையுடன் இருக்கும்.
கல்வியும் சமூகமும்
கல்வி குழந்தைகளுக்கு அறிவையும் பயிற்சியையும் அளிப்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கை செம்மையுற அமையத் தேவையான பழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களிடையே வளர்க்கவும் இது இன்றியமையா பங்கு வகிக்கின்றது. அதனால் வாழ்க்கையின் விழுமிய பொருளையும், உயர்ந்த நோக்கங்களையும் கடைப்பிடிக்கதேவையான பயிற்சி அளித்தலே கல்வியின் நோக்கமாக அமைகின்றது. கல்வியானது மனித சமூகத்தை மேம்படுத்துவதோடு வாழ்க்கையை நெறிப்படுத்திச் சிறந்த இலக்கினை அடைய வழிவகுக்கும் சாதனமாகவும் திகழ்கின்றது.
“இளமைக் காலத்திலேயே கற்று விடல் வேண்டும்”
அறுவடை காலத்திலேயே நம் உடல் உழைப்பினைக் கொடுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் நிலத்தின் பயனை அடைதல் முடியாது.
“கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்” (நீதி.10:5)
இதனைப் பழமொழி நானூறு,
இளமைப் பருவத்திலேயே கல்வி கற்றல் வேண்டும். கற்க வேண்டிய பருவத்தில் கற்காமல் மூப்பு வந்தவுடன் கற்றல் என்பது சுங்கம் வசூலிக்கிற இடத்தில் இருப்பவர்கள், சுங்கத் தீர்வை செலுத்த வேண்டியவர்களை வெகுதூரம் போக விட்டு பின்னர் அவர்களிடம் போய் வசூலிக்க முயல்வது போல் பயனற்றதாகி விடும்.
“சுரம்போக்கி உல்கு கொண்டார் இல்லையே, இல்லை
மரம்போக்கிக் கூலி கொண்டார்” (பழ.நானூ.2.3-4)
என்று விளக்குகிறது.
சோர்வடையாமல் கற்றல் வேண்டும்
கற்றறிந்த சான்றோர்களிடம் தனக்கு தெரியாதவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கேட்காமல் தயங்கி நின்றோமானால் நமக்கே எல்லாம் தெரியும் என்ற நிலையிலேயே பின்தங்கினவராய் இருந்து விடுவோம். அதனால், மனம் சோர்வடையாமல் புதியனவற்றைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
“நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்” (நீதி.8:33)
இதனைப் பழமொழி நானூறு,
“சொற்றொரும் சோர்வு படுதலால் சோர்வு இன்றிக்
கற்றொரும் கல்லாதேன் என்று வழி இரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்று அறியுமேல்
கற்றொரும் தான்கல்லாத வாறு” (பழ.நானு.3)
கல்வி பயனுடையதாய் இருத்தல் வேண்டும்
விளக்கினைக் கொளுத்துபவர் அது வெளிச்சம் தருமென்றே அதனைக் கொளுத்தி வைக்கிறார். அவ்வாறு ஏற்றப்பட்ட விளக்கினை மூடிப் போட்டு வெளிச்சம் வெளியில் வராத வண்ணம் மூடி வைத்தால் என்ன பயன்.
“விளக்கைக் கொளுத்தி மரக்காலில்; மூடி வைக்காமல்,
விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது
அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்.5:15)
இதனைப் பழமொழி நானூறு,
“விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம் இன்றுஎன்று அனைத்தும் தூக்கிவிளக்கு
மருள் படுவதாயின் மலைநாட! என்னைப்
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்” (பழ.நானூ.4)
நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும் கொடுத்துப் பெறும் கல்வி பயனுடையதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
கற்றாரின் அடக்கம்
புத்திமானாய் இருக்கிறவன் அதிகம் பேசாமல், பெருமையைபாராட்டிக் கொள்ளாமல் எங்கு எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் பேசி தன் நாவை அடக்குகிறான்.
“அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்;
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்” (நீதி.17:27)
இதனைப் பழமொழி நானூறு,
“நிறைகுடம் நீர்தளும்பல் இல்” (பழ.நானூ.10:4)
நிறைந்த நீரினை உடையக் குடமானது தளும்பாமல் இருக்கும். அதுபோல, நிரம்பிய அறிவினை உடையவர்கள் அடக்கமாக இருப்பர்.
“பணியுமா மென்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” (குறள்.978)
கற்றார் செருக்கின்றி அமைதியாக இருப்பர்.
முடிவுரை
நாம் சேர்த்து வைத்த செல்வங்கள் அழிந்தாலும், அழியாமல் என்றும் நம்முடன் இருப்பது கல்வி அறிவாகும். வாழ்வு செம்மையுற்று அமைய தேவையான பழக்க வழக்கங்களையும், எண்ணங்களையும் வளர்க்க கல்வி துணையாக அமைகின்றது என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக