சனி, 24 ஏப்ரல், 2021

அகத்திணையும் ஐந்திணையும்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


ஓவ்வொரு மக்கள் குழுக்களுக்கும் ஒவ்வொரு வாழ்வியல் முறைமைகளை நாம் வரலாற்றின் பாதைகளில் காண்கின்றோம், வட இந்திய மரபில் அதிகமாக எண்வகை திருமண முறைகளை காண்கிறோம், தமிழர் மரபிலோ அகத்தணை வாழ்க்கையை காண்கின்றோம். ஆவ்வகையில் தமிழ் மொழியில் காணப்படும் அகத்திணை, ஐந்திணை மரபுகளை இங்கு காண்போம்

அகத்திணை

தமிழர்கள் அகத்திணைகளை ஏழாக வகுத்துண்ணனர். அவையாவன கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்தினை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

     அகத்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணைகளை விட ஐந்திணை பல்லாற்றானும் மேலாயது என்பதற்கு உறழ்கூற்று வேண்டா அகத்திணைத் தொல்லாசிரியர் தொல்காப்பியர் கைக்கிளை பெருந்திணைகளின் பொருள்களை இருவேறு தனிச்சிறு சூத்திரங்கள் அளவில் (995 - 996) அகத்திணையியல் இறுதிக் கண்ணே சொல்லி அமைகுவர் “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்” (949) என எண்ணுங்கால் முதலிடம் பெற்ற கைக்கிளைகூடப் பொருள் கூறுங்கால் அவ்விடம் பெறாமை கருதத்தகும்.  கைக்கிளைக் குறிப்பே, ஷபெருந்திணைக்குறிப்பே| எனறு இவ்விரு திணைகளின் சிறுநிலை தோன்ற அவற்றின் பொருட் சூத்திரங்களை முடித்துக் காட்டுவர் “குறிப்பு” என்ற சொற்பெயவால் இவ்விரு திணைகள் விரித்துப்பாடும் என்று சுட்டுகிறார்.

     இதனால் தொல்காப்பியம் ஐந்திணையே அகத்திணை என்பதுபோல, ஐந்திணையின் இலக்கணக் கூறுகளைப் பலபட விரத்துரைப்பக் காணலாம், அகத்திணையியல் 55 நூற்பாக்களைக் கொண்டது.  அகத்திணை எனப் பொதுப் பெயர் பூண்டிருத்தும், இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து மொழிதல் காண்க.

     தொல்காப்பியர் செய்தது போலக் கைக்கிளை பெருந்திணைகட்கு உரிய ஒதுக்கிடம் நல்கினர்.  இப்பாங்கின்படி, ஐந்திணை பெரிதும், ஏனை இருதிணை சிறிதுமாக இந்நூலிலும் ஆராய்ச்சிப்படும்.  ஐந்திணை இயல்பால் மேலாந்தரத்ததெனினும் அகத்திணை ஐந்திணை என்ற சொற்கள் ஒருபொருப் பன் மொழியாகா என்பதை அறிக.  ஷஅகத்திணையின்கண் கைக்கிளை வருதல் திணை மயக்கமாம்| பிறவெனின், கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய எழுதிணையினுள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் ஷஅகத்தைச் சார்ந்த புறமாயினும்| (பா-4) என்னும் திருக்கோவையாசிரியரும் பகிர்கின்றார்.

          “கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் 

          முற்படக் கிளந்த எழுதிணை யென்ப”14  (தொல்-946)                    

என்ற தொன்னெறிப்படி, அகத்தின் முதலாகவும் இறுதியாகவும் எண்ணுப்பெற்ற கைக்கிளை பெருந்திணைகளை ஷஅகத்தைச் சார்ந்தபுறம்| என்றும் கோவையுரையாசிரியர் குறிப்பது அடி முரணாகும் இவ்விரண்டையும் புறமாக்கிய அவர் அகத்தை என்ற சொல்லால் முழுவதும் ஐந்திணையைத் தானே கருதிவிட்டார் என்பது புலப்படுகிறது.

           “புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது

            ஆகத்திணை மருங்கின் அளவுத லிலவே”15  (தொல்.946)

           “அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர்

            புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்”16  (தொல்.1001)

அகத்திணைப் பொதுப்பெயரை ஐந்திணைப் பிரிவின் மறுபெயராகத் தொல்காப்பியம் ஆண்டதில்லை “மக்கள் நுதலிய ஐந்திணை” (999) “அன்பொடு புணர்ந்த ஐந்திணை” (1037) என்றாங்கு உரிய பிரிவுப் பெயரால் விதந்து சொல்லும் நடை நினையத்தகும்.  ‘அகன் ஐந்திணை’ என்ற பொதுபடையால், ஐந்திணை அகத்திணையுள் ஒருவகை என்பதும் அகக்கைக்கிளை கொள்ளக்கிடைத்தால் காண்க. “அன்பின் ஐந்திணை களவெனப்படுவது” என்ற இறையனாரும், “அகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி” என்று கம்பரும் விழிப்போடு சொறபெய்தலை ஒப்பு நோக்க வேண்டும்.

ஐந்திணை களவியல் இயற்கைப் புணர்ச்சி

     களவொழுக்கம் கற்பொழுக்கம் என ஐந்திணை இருபாற்படும் என்று பொதுவாகக் கூறினாலும், குறிஞ்சிக்களவு குறிஞ்சிக்கற்பு, பாலைக்களவு பாலைக்கற்பு, முல்லைக்களவு முல்லைக்கற்பு, மருதக்களவு மருதக்கற்பு, நெய்தல் களவு நெய்தற்கற்பு எனத் திணைதோறும் இரண்டும் கொள்ளத்தகும்.  இங்ஙனம் கொள்வதால் களவுக்காதலும் கற்புக்காதலும் எல்லா நிலத்திலும் நிகழ்வனவே என்னும் உலக வழக்கம் பெறப்படும்.

ஐந்திணை – கற்பியல்

களவு ஒரு குறிக்கோள் அன்று: முடிவான பயன் அன்று.  ஒரு குறிக்கோளை, முடிந்த பயனை அடைவதற்கு உரிய நெறியேயாம்.  கற்பாக – திருமணமாக – முடியுங்கால், களவு நெறி நன்னெறி எனப் போற்றப்படும்.  இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும்.  கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்றும் மறைவுநெறி ஒரு தலையாக நடக்க வெண்டுமோ எனின் இல்லை.  இதுவே பண்டைத் தமிழ் மாண்டான் கருத்து.

     காதலர்கள் ஓரில் இருப்பினும் ஊர்விட்டு ஓடினும் வரைவு என்னும் பெருவேலிக்கு உட்பட்டுக் கணவன் மனைவி என்று பலர் வெளிப்படையாகச் சொல்லும் இயல்பு நிலையை ஒருநாள் அடைதல் வேண்டும்.

     இந்நிலைபேறு அடையும் அன்புக் களவைத்தான் பெற்றோரும் போற்றி வரவேற்பர் சமுதாயமும் நல்லொழுக்கம் என உடன்பாடு போற்றி வரவேற்பு அளிப்பர்.  களவின் முடிவு கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது.

     கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்ததற் குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

           “கற்பெனப் படுவது கரணமொடு புரைக் 

            கோளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

            கோடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”17 (தொல். 1087) 

     எனத் தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர்.

     திருமணம் என்னும் கட்டுப்பாடு என்றும் யாண்டும் இன்றியமையாதது, மாறாதது. மணச் சடங்குகள் (கரணம்) தேயந்தோறும் இனந்தோறும் வேறுபடுவன காலந்தோறும் கூடுவன, குறைவன, மயங்குவன.  ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுற்றுத்திக் ‘கரணமொடு புணர’ என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினர்.

சங்க இலக்கியத்தில் அகத்திணை தோற்றம்

அகத்திணை தோன்றிய முதற்காலத்தை நோக்குழிச் சங்க இலக்கியம் காலத்தால் பின்பட்டதேனும், கருத்துவகையால் அகத்திணை முதனாலுக்கு மாறுபட்டதன்று, ஆதலின் அகத்திணை யாராய்ச்சிக்குச் சங்கவிலக்கியங்களை நம்பலாம் என்பது.

     அகப்பாட்டின் பலவகைக் கூறுகளை வரலாற்றுக் கண்ணோடிக் காணம்போது இவர் துணிபு மேலும் தெளிவாகின்றது.  தமிழில் எவ்வளவோ அகப்பாடல்கள் இருந்தன.  அவற்றிலிருந்தே அகவிலக்கணம் எழுதப்பட்டது.  இதனை அறிவுறுத்ததும் வகையில் முந்து நூல்கண்டு எழுதினார் தொல்காப்பியர் எனப் பாயிரம் புகழ்கின்றது.  ‘எழுதிணையென்ப’, ‘மொழிப்புலவர் நன்குணர்ந்த புரலமையோரே’, ‘பாடலுட் பயின்றவை நாடுங்காலை’ என்று நூற்றுக்கு மேலாக வரும் தொடர்கலிருந்து தொல்காப்பியத்துக்கு முன்னே பற்பல நூல்கள் இருந்த வரலாறும், அந்நூல்களின் செய்திகளைத் தொல்காப்பியம் தழுவிக் காத்து நிற்கும் வழிநிலையும் எளிதில் விளங்கும்;;.  இதன் அடிப்படையில் இலக்கணக் குறியீடுகளும் படைக்கப்பட்டன.  இவ்வளவிற்கும் பிந்தியே நம் சங்கப்பாக்கள் இயற்றப் பெற்றன.  இக்கோட்பாட்டின் உறுதிக்குச் சான்று பல வேண்டா.  குறீயிட்டுச் சொற்களையும் அமைத்துச் சங்கத்தொகை நூல்களில் வரும் அகத்திணைச் சொற்கள்.

            “பல்பூங் காற் பகற்குறி மரீகுச் 

            சேல்வல் கொண்க செறித்தனள் யாயே”18  (நற். 258)

             “பின்னிலை முனியா நம்வயின்     

             வேட்னை யல்லையால் நலந்தந்து சென்குமே”19  (நற்.349)

             “அறத்தொடு நின்றேனைக் கண்ட திறப்பட 

             ஏனையர்க் குய்த்துரைத்தாள் யாய்”20   (கலி. 39)

            “பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் 

            அருளில் சொல்லும் நீசொல் லினையே”21 (கலி. 21)

            “தேர்செல வழுங்கத் திருவிற் கோலி

            மனைமருண் டிருந்த என்னினும்”22   (அகம். 189)

            “மாமயி லன்னார் மறையிற் புணரமைந்தர்

            காமங் களவிட்டுக் கைகொள் கற்பு”23  (பரி. 8)

     இவ்வாறு சங்கப் பனுவல்கள் இலக்கணவழி வந்த இலக்கியமாகவும் காலப்பிற்பட்டனவாகவும் இருத்தலின்;.  முதனூல்கள் போல அகத்திணையின் தோற்ற ஆய்வுக்கு உகந்த கருவியாகா என்று கொள்ளலாமோ எனின், அதுகான் இல்லை.

     ஒரு மரம் தந்த விதையிலருந்து உண்டாக்கிய மரம் வேற்றுச் சாதியாகுமோ?  முற்றும் இலக்கண வழிவந்த நம் சங்கவிலக்கியம் அவ்விலக்கணத்தைக் தந்த முழுவிலக்கியத்தோடு ஒப்ப மதிக்கத்தக்கது என்று சுட்டுவதற்கே, துறைச்சொற்களின் ஆட்சியை எடுத்துக் காட்டினோன்.



பண்டைத் தமிழர் வாழ்வில் அகத்திணை

     அகத்திணைத் தோற்றம் சமுதாயவியல் மானிட நிலவியல் தொல் தமிழினத்தின் உளவியல் என்னும் முக்கூற்றுத் தன்மைகளைச் சார்ந்து நிற்பது.  ஆதலின் இம்மூவகையாலும் நாம் ஆராய வேண்டும்.  இம்மூவகையாலும் அகத்திணைப் பிறப்புக்குச் சிறந்தது எது?  என்று கணிக்க முடியாது.  மூன்றும் சிறந்தனவே.  அகத்திணைக்கு உரிய இச்சிறப்பியலைத் தனித்தனியாக விளக்குதற்கு முன்னர்.  பண்டைத் தமிழினத்தின் வாழ்க்கை முழுவதும், சிறிய பெரிய எச்செயலகத்தும், உயிரென ஓடிக்கிடக்கும் ஒரு தமிழியத்தை – நினைவியலை – நாம் விளக்கிக் கொள்ள வேண்டும்.

     இவ்விளக்கமில்லாத் தமிழாராய்ச்சி மண்ணை விண்ணெனவும் மலையைக் கடலெனவும் கருதிய பெருங்குற்றப்படும்.  நாம் பிறந்து வாழும் இவ்வுலகம் உள் பொருளே பெருகிய பொருள் நாகரிகம் வேண்டத்தக்கது.

     அறமும் வளமும் உடைய இவ்வுலக வாழ்வே வாழ்க்கை என்பது சங்கத்தமிழ் மன்பதை – சமுதாயம் - தெளிந்து கடைப்பிடித்த பெருநெறியாகும்.

           “புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற்

            பட்டினம் - பெறினும் - பட்டினப்பாலை”24 (பட். 217-8)

            “மன்னா உலகத்து என்ற தொடருக்கு

             நிலையா உலகம் - நிலையாதது என்றல்

             கருத்தன்று”25 (புறம். 165)

சமுதாய அடிப்படை:

     அகத்திணை இலக்கியத்தின் உரிப்பொருளான காதல் தமிழினம் கொண்டொழுகிய உலகியல் நோக்கத்துக்கு முற்றும் இயைந்தது என்று மேலையாராய்ச்சியிற் கண்டோம்.

     மக்கள் பலர்கூடி வாழும் சமுதாயக் கூட்டறவிலிருந்து இலக்கியம் முகிழ்க்கும் சமுதாயப் பெருங்களம் இன்றேல், மக்கட்கு வினையாற்றலும் நாகரிகப் பாங்குகளும் தோன்றாது.  வேறுபட்ட எண்ணங்கள்.  வேட்கைகள், எதிர்பார்ப்புகளெல்லாம் சமுதாய நிலைக்கண்ணாடியிற்றான் முழுவதும் காணப்படும்.

     அரசு மதம் ஒழுக்கப்பாடெல்லாம் சமுதாய நிலை பெற்றுக்குத் தானே வேண்டப்படுகின்றன.  ஆதலின் தமிழர் கண்ட அகவிலக்கியக் கட்டிடத்துக்கு வேண்டும் துணைக்கூறுகளும் தமிழ்ச் சமுதாயத்திலிருந்தே கிடைத்தன என்பது என் கருத்து.  ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழினச் சமுதாய வாழ்வைச் சங்கப்பாடல்களே காட்டுகின்றன.  இப்பாடல்களும் நான்கில் மும்மடங்கு அகத்திணை சார்ந்தவை எனின், சமுதாயச் செய்திகள் அகவிலக்கியப் படைப்பில் பெற்றுள்ள பேரிடம் வெளிப்படையான நிலையில் அமைந்துள்ளது.

அகத்திணையில் மரபு நெறி

     களவுக்கும் கற்புக்கும் உரிய தொடர்பு என்ன? இது மிகவும் ஆராய வேண்டுவது.  கற்பாவது நல்வாழ்வு என்றும், களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும்

            “மாமயி லன்னார் மறையிற் புணர் மைந்தர்

            காமம் களவிட்டுக் கைகொள் கற்புற்றென”26  (பரி. 11)

இவ்வாறு இரண்டின் தொடர்பை ஆசிரியர் நல்லந்துவனார் எடுத்துக்காட்டுவர்.  களவு கொண்டு விடுதற்குரியது.  கற்பு கைக்கொள்ளுதற்குரியது என்று களவின் நிலையாமையும் கற்பின் நிலைமையும் உறவுபடுத்திக் கூறுவர்.  இதனால் கற்புவாழ்க்கைக்குக் களவு நல்ல தோற்றுவாய் எனப்படுவது மட்டுமின்றி இத்தோற்றுவாயின்றிக் கற்பியல் அமையாது.

     நல்ல காதல் வாழ்க்கை களவானே முகிழ்விக்கும் என்றால் பொருளன்று.  ‘கற்பெனப்படுவது களவின் வழித்தே’ என்பது இறையனார் களவியல் ஆசிரியர் இக்கருத்து அகத்தமிழ் நெறியன்று என கூறுகிறார். ஒவ்வொரு கற்பியலுக்கு முன்னும் களவியல் நிகழ்ந்தாதல் வேண்டும் எனவும், திருமணங் கூட்டும் ஒரே களவுதான் எனவும் கூறுவார். இக்கூற்று இறையனார் யாத்த இவ்விலக்கணம் அகவிலக்கியத்;திலும் தமிழ் மன்பதையின் வாழ்க்கையிலும் காணாத கட்டுரையாகும்;.

களவுநெறியும் மரபு நெறியும்

     திருமண வாழ்வு என்னும் கற்பியலுக்கு இருநெறிகள் உள.  களவுநெறி, மரபுநெறி என்று அவை சொல்லப்படும்.  “மறை வெளிப்படுதலும் தமரிற்பெறுதலும்” என்பர் தொல்காப்பியர் (1444) இவ்விருநெறிகளும் களவே சங்க விலக்கியத்துப் பாடல் சான்றது என்பதை நாம் அறிவோம், களவொழுக்கத்தில் விரைந்து அலைகின்றன.

      மரபுமுறை அகத்திணைக்கண் ஒரு துறையாகப் பேசப்படுவதில்லை.  இலக்கியப் படுத்தற்கு வேண்டும் உணர்ச்சிகககூறு அதற்கு இல்லை என்று கூடக் கூறலாம்.


மரபுநெறிச் செல்வாக்கு

     மணவாழ்வுக்கு மேற்சொல்லிய இரண்டும் தக்க நெறிகளே என்று தமிழ்ச் சமுதாயம் உடன்பட்டது.  “களவொழுக்கமின்றியே தனிக் கற்புமுறை வழங்கியதில்லை” என்று தொல்காப்பியப் பொருளதிகார ஆராயிச்சி என்னும் நூலாசிரியர் மொழிகுவர்.

நில அடிப்படை

     அகத்திணை அமைப்பு மூன்று, அவற்றுள் முதலாவதாகிய சமுதாய அடிப்படையை இதுகாறும் ஆராய்ந்தோம் அடுத்து இனி ஆராயத்தக்கது புறநிலை என்னும் நில அடிப்படையாகும்.  இவண்கூறும் கருத்துக்களைச் சமுதாய அடிப்படையாகும் கொள்ளலாம்.  ஏன்?  எவ்வழியான் வரும் சூழ்நிலைகளும் ஓழப்பரவி முடிவில் ஒன்றாய்க் கலக்குமிடம் சமுதாயக் கடலன்றோ?  எனினும், அங்ஙனம் கலந்த கூறுகளை, கூறுகளுள் நிலச்சார்பாலும் காலச் சார்பாலும் அகத்திணை பெற்ற இயற்கைச் சாயல்களை தனித்தெடுத்துக் காண்போம்.

நானிலச் சாயல்

     பழந்தமிழோர் இயற்கையைக் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் - மலைகாடு வயல் கடல் - என நானிலங்களாகக் கண்டனர், வரையறுத்தனர் என்பதனை நாம் பலகாலமாக கேட்டுள்ளோம்.  சங்க இலக்கியத்தைச் சிறிதுபற்றி எழுதுவாரும் நானிலப் எழுதப்படுதலின், திணையமைப்பு சுவையற்ற பழங்கருத்தாகப் படலாம்:  எனினும் திணையறிவில்லாதார்குச் சங்க விலக்கியம் விளங்குதல் பருவம் வாயாதார் இன்பம் நுகர்வதை ஒக்கும்.  ஆதலின் நிலம் பற்றிய திணைப்பாகுபாடு எல்லோர்க்கும் தெரிய வேண்டும்.  தமிழ்ச் சமுதாயம் தன்னைச் சூழ்ந்த இயற்கைக்கு ஏற்ற தனிக் கூறுகளைக் கொண்டு விளங்குவது.

              “நாடா கொன்றோ காடா கொன்றோ

              ஆவலா கொன்றோ மிசையா கொன்றோ

              எவ்வழி நல்லவர் ஆடவர்

              அவ்வழி நல்லை வாழிய நிலனே.”27  (புறம். 781)

  என்பது ஒளவையார் தம் அறப்பாட்டு.  இப்பாட்டில் நாடு என்பது மருதம் காடு என்பது முல்லை, அவல் (பள்ளம்) என்பது நெய்தல், மிசை (மேடு) என்பது குறிஞ்சி.  வாழ்விடத்தின் மேன்மை அங்கு வாழ்வாரது திறத்தைப் பொறுத்தது என்று மனிதவாற்றவை உயர்த்த வந்த ஒளவையார், தமிழ் கண்ட நானில அடிப்படையில் அறங்கூறுதலை எண்ணுக.  தமிழகத்தின் நாடுகளும் நகரங்களும் திணைப் பெயராலும் கருப்பெயராலும் திசைப் பெயராலும் வழங்கப் பட்டுவந்த மரபுகளை ஊரும் பேரும் என்னும் ஒரு பெருநூலில் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை எடுத்துக் காட்டுவர்.

                “பாடல் சான்ற நெய்தல் நெடுவழி

                 முல்லை சான்ற முல்லையம் புறவு

               மருதஞ் சான்ற மருதத்த தண்பணை

               குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி”28 (சிறு – 151)           

என்று சிறுப்பாணாற்றுப் படையில், புலவர் நத்தத்தனார் புரவலன் நல்லயக் கோடனை நானில உரிமை காட்டிப் போற்றுவர்.  

                     “நாடன் என்கோ ஊரன் என்கோ 

         பாடமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ”29 (புறம். 43) 

எனப் பொய்கையார சேரமான் கோக்கோதை மாரபனை ஓர் இரவலுனுக்கு அறிமுகப்படுத்துவர்.

முடிவுரை

 தமிழரின் வாழ்வில் திணை மரபு என்பது ஆழம் விழுதப்போல தளைத்திருந்ததை காணமுடிகிறது. அகத்திணை மரபுகளான களவு நிலைகள், கற்பு நலைகள், தமிழரின் வாழ்வியல் கூறுகள், எனும் திணைசார் வாழ்வியல் முறைகளையும், ஐந்து நில அமைப்புகளையும் விரிவாக அறியமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக