சனி, 24 ஏப்ரல், 2021

சங்ககால திருமணமும் குடி மரபும்


ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


இந்திய மரபு முழுவதும் குடி மரபாகவே இன்றளவும் நிலவுகிறது. பகுத்தறிவு பேசும் நபர்கள் கூட தம் திருமணத்தில் ஒரே குடியில் தான் திருமணம் செய்கின்றனர். திருமணத்தில் குடிமரபையும் அதன் வேரினை தேடிய பயணமே இந்த ஆய்வு.

திருமணத்தில் ஆண், பெண் செயல் பற்றி பேசும் தொல்காப்பியம் 

உலக வரலாற்றில் மனித வாழ்க்கையை அழகாக அகம் புறம் என்று பிரித்து, எழுத்து. சொல், பொருள், என்று மூன்றாக வகுத்து இயம்பிய பெருமை தொல்காப்பியம், தொல்காப்பியரையே சாரும். தொல்காப்பியர் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வர்ண பாகுபாடு, ஐந்திணை பாகுபாடு திணைக்கடவுள்கள், திணைக்குடிகள் பற்றிய பல்வேறு செய்திகளை விவரித்து செல்கிறது.

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வோடு திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”

(தொல் மெய் 25)

எனப் பிறப்புடன் குடிமையும் ஓர் அங்கமாக முன்வைக்கிறது. திருமணத்தில் முதன்மைiயான இடம் பெறும் அளவிற்கு குடிமை இருந்துள்ளதை அறியமுடிகிறது நிச்சியக்கபட்ட திருமணம் மட்டும் இல்லாமல் காதல் திருமணத்திலும் குடிமை சங்க இலக்கியத்தில் குடி வழிபட்ட குலமரபுத் திருமணம், குடிவழி மீறல் திருமணம் எனும் இருவகை திருமணம் நிகழ்ததை ஆதாரத்துடன் அறியமுடிகிறது.

திணை மீறிய காதல் உறவு

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

     (குறுற். 40)

எனும் பாடல் குடிவழி அல்லாத இரத்த உறவு இல்லாத திணை மீறிய இரு குடிகளின் காதல் உறவைக் காட்டுகிறது.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீரோ எனச் சேரிதொறு நுவலும்

அவ்வாங் குந்தி அமைதோளாய் நின்

மெய்வாழ் உப்பின் விலை எய்யாம் எனச்

சிறிய விலங்கினம் ஆக”

(அகம் 390)

எனும் பாடல், மருதநில ஆணுக்கும் நெய்தல் நிலப் பெண்ணுக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்துகிறது.

“நொதுமலாளர் கொள்ளார் இவையே

எம்மொடு வந்து கடலாடு மகளிரும்

நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையாள்

உலகங் கொள்வோர் இன்மையின்

தொடலைக் குற்ற சில பூவினரே”

(ஐங்.187)

மணலால் அமைக்கப்பட்ட பாவைக்கு நீராடும் மகளீர் பிற தழைகள் கலந்து தொடுக்கப்பட்ட நெய்தல் மாலையைச் சூட்டமாட்டார்கள். இவ்வாறு மாலை கட்டுவோர் நெய்தல் பூவைத் தவிரப் பிற மலர்களை இணைத்துத தொடுக்கமாட்;டார்கள் எனவே, புதியவர் யாரும் இந்த மாலையைக் கொள்ளார். ஆகையால், நாங்களும் பிற தழைகள் கலந்த இந்த மாலையைக் கொள்ளமாட்டோம். ஏன தோழி தலைவன் கொடுத்த பரிசு பொருளை மறுத்து தலைவன் கொடுத்த பிற தழைகள் பிணைத்த மாலையை மறுப்பது திருமண உறவில் குடிவழி மரபு போற்றபட்டதை அறியமுடிகிறது.

“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி

மீன்உண் குருகினம் கானல் அல்கும்

கடல் அணித்தன்று அவர் ஊரே

கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே”

              (ஐங் 184)

எனும் பாடலும், கடலுக்கு அண்மையில் இல்லாமல் தொலைவில் உ;ள வேறு குடி சார்ந்த தலைவனின் காதலைப் பேசுவதாகவும், அதற்கு தலைவி உடன்படுவதாகவும் உள்ளது.

“இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல்நிறப் பெருங்கடல் எலங்க உள்புக்கு

மீனெறி பரதவர் மகளே

நீயே நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்

கடுந்தேர்ச் செல்வன் காதல்  மகனே

……………………….

பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை

நூம்மொடு புரைவதோ அன்றே

எம்மனோரில் செம்மலும் உடைத்தே”

(நற்.45)

நெய்தல் நிலம் சார்ந்த எங்கள் குடியில் உள்ளவர்கள் சுற்றத்தார் அல்லாதவராகிய மற்றவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள் எனும் பண்புடையது என்பதையும், மேலும் இப்பாடல் நெய்தல் நிலத்து சிறுகுடி சார்ந்த பெண்ணுக்கும் பழைய பெருங்குடி செல்வக்குடியைச்சார்ந்த ஆண்மகனுக்கும் இடைபட்ட காதலையும் காதல் மறுக்கப்பட்டதையும் காட்டுகிறது. 

திணைசார் காதல் திருமண உறவு

சங்க இலக்கியத்தில் திணைக்குள் அமைந்த காதல் உறவுகளை காணமுடிகிறது. 

“இகுளை இஃதுஒன்று கண்டை இஃதுஒத்தன்

கோட்டினத்து ஆயர் மகன் அன்றேமீட்டுஓரான்

போர்புகழ் ஏற்றுப் பின்னர் எருத்தில் தத்துபு

தார்போல் தழீஇயவன”;

(கலி 103)

“இகுளை இஃதுஒன்று கண்டை இஃதுஒத்தன்

கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்

மறை எற்றின்மேல் இருந்து ஆடித்துறைஅம்பி

ஊர்வான் போல் தோன்றுமவன்”

(கலி 103)

“இகுளை இஃதுஒன்று கண்டை இஃதுஒத்தன்

புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ள”p

…………….. (கலி 103)

 மேற்கண்ட கலித்தொகைப்பாடலில் மூவகையான ஆயர்கள் குறிக்கபடுகின்றனர். அதாவது கோட்டினத்து ஆயர்(எருமை) கோவினத்து ஆயர்(மாட்டினம்) , புல்லினத்து ஆயர் (ஆடு) எனும் மூவினத்தவரும் ஒரே குடியாக முல்லை திணையில் காட்டபடுகின்றனர். இத்தினையில் ஒத்த குடியாக இருந்தால் காதல் திருமணம் ஏற்கப்பட்டதை 

“ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்

நின்வெய்யன் ஆயின் அவன்வெய்யை நீயாயின்

அன்னை நோதக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம்

அன்னை நெஞ்சு ஆகப்பெறின்.”

(கலி 107)   

காதலன் காதலியும் ஆயர் குடியாக இருந்தாள் அன்னை கோபித்து கொள்ளமாட்டாள் என்கின்ற இந்த தோழிக் கூற்று ஒத்த குடி காதலை ஏற்பதாக உள்ளது. மேலும்

“யானும்ஓர்  ஆடுகள மகளே என்கைக்

கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த

பீடுகெழு குரிசிலும்ஓர் ஆடுகள மகனே”

(குறு 31)

என்ற குறுந்தொகைபாடல் ஒத்த குடிக்குள் ஏற்பட்ட காதலையும் அக்காதல் ஏற்பையும் வெட்டவெளிச்சம்மிடுகிறது. மேற்கண்ட தகவல் மூலம் ஒத்த குடி காதல் ஏற்க்கப்பட்டதை அறியமுடிகிறது. 

குடி மரபு திருமணம்

ஓத்தகுடி திருமணம் நிகழவேண்டும் என்பதை முதுகுடி மன்னர் பாடல்களில் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பாடல்கள்(336-355) வரையறுத்த திருமணத்தை கூறுகிறது அவை

“திருநயத் தக்க பண்பின் இவள் நலனே

பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே”

(புறம் 342)

“இவள் தன்னை மாரே

செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி

நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்லெனக்

கழிப்பிணிப் பகையர் கதுவாய் வளர்”

(புறம் 345)

“புரையர் அல்லேர் வரையலள் இவள்எனத்

தந்தையும் கொடா அன்”

(புறம் 343)

 என்ற பாடலின் வழியே ஒத்த குடிக்குள் தான் திருமணம் நிகழவேண்டும் என்ற கருத்தினைக்காண முடிகிறது.

முடிவுரை

இன்று நிகழக்கூடிய திருமண குடி மரபு முறை தான் சங்க இரக்கிய காலகட்டத்தில் இருந்து வழக்கில் பின்பற்றபடுகிறது என்பதனை அறியமுடிகிறது. ஒத்த குடியாக இருந்தாலும் கூட அதற்குள்ளும் உட்பிரிவு பார்க்கப்பட்டதையும் அறியமுடிகிறது. மன்னர்களில்கூட முதுகுடி, தொல்குடி மன்னர்கள் என்ற முறையும் காணமுடிகிறது. இந்த ஆய்வின் வழியாக தமிச்சமூகம் இராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருமணத்தில் குடிமரபு பின்பற்றபட்டதை நிறுவ முடிகிறது.

  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக