திங்கள், 26 ஏப்ரல், 2021

வேளான்வேதம் வெளிப்படுத்தும்; யாக்கை நிலையாமை

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி  



யாக்கை என்பது உடம்பு எனப் பொருள்படும். உடம்பானது இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை. இறப்பு என்பது அனைவருக்கும் உரிய ஒன்றுதான்.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு” 

என்ற குறளில் பிறப்பு, இறப்பு பற்றி கூறியுள்ளார். இவ்வாய்வில் அறிஞர்களின் யாக்கை நிலையாமை கருத்துகளை கான்போம் 

யாக்கை நிலையாமை: 

“மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் நிலைமிசைத்

துஞ்சினர் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்

எஞ்சினார் இவ் உலகத்து இல்”(2)

உயர்ந்த மலைமேல் தெரியும் நிலவைப் போல யானைப் பிடர்மேல் கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து சென்ற கொற்றவர் இறப்பிலிருந்து  தப்புவது இல்லை. மரணத்திலிருந்து தப்பிய மனிதர் உலகத்தில் எவரும் இல்லை.

வாழ்நாளை அளக்கும் அளவுகோலாகச் சூரியன் நாள்தோறும் விடாது உதயமாகிறது. உலகில் பிறந்த யாரும் சாவுக்குத் தப்பி நிலைத்து நிற்பதில்லை. எனவே மரணம் வருமுன் அறங்களைச் செய்தல் வேண்டும்.

“மன்றம் கறங்க மணப் பறை ஆயின

அன்று அவர்க்கு ஆங்கே பிணைப்பறை ஆய் பின்றை

ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்தோம் ஆறே

வலிக்குமாம் -மாண்டார் மனம்”(3)

திருமண நாளில் மண்டபத்தில் மணமுரசு கொட்டப் பெறும் சில சமயம் மணக்கோலம் பிணக்கோலமாகப் பிணமுரசு கொட்ட நேர்தலும் உண்டு. எனவே மாட்சிமைக் கொண்ட அறிவுடையார் இல்லறத்திற்குச் செல்லாமல் துறவறத்திற்குச் செல்வர்.


செத்தாரைச் சாவார் சுமந்து செல்வர்:

; இறப்பின் போது கொட்டப்படும் பறையை ஓரிடத்தில் அடிப்பவர் இடைவெளி விட்டு மறுபடியும் கொட்டுவர். மீண்டும் இடைவெளி விட்டு மூன்றாம் முறை அடித்தால்; அது இறப்பு வீடு என்று பொருள். அவ்வீட்டில் செத்தவரைத் துணியால் மூடி கொள்ளித் தீயை ஒருவர் சுமந்துவரப் பாடையில் வைத்து வருங்காலத்துச் சாக இருப்பார் சுமந்து வருவார். வாழ்க்கை இத்தகையது.

உறவினர் ஒன்றாகத் திரண்டு நின்று கதறி அழ இறந்தவர் பிணம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். இதனைப் பலமுறை பார்த்தும் இல்வாழ்க்கையில் இன்பம் உண்டு என்று நம்பித் திருமணம் செய்துவாழ்க்கையில் வாழ்வார்க்கு அவ் ஆசையை விடு, விடு எனப் பறை டொன், டொன், டொன் என்று அறிவித்துக் கொண்டே இருக்கும்.

“நார்த்தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து

பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர்; பழிக்கில் என்?

தோற்பையுள்நின்று தொழில் அறச்செய்து ஊட்டும்

கூத்தன் புறப்பட்டக்கால்”

உடலாகி தோற்பையில் வாழ்ந்து தொழிலை முற்றுமாகச் செய்து உயிர் ஊட்டிக் கொண்டிருந்த கூத்தனாகிய உயிர் உடம்பை விட்டு பிரிந்தப் பின் அவ்வுடம்பை நாரினால் கட்டி இலுத்தாலென்ன? ஆடை முதலியவற்றை அணிந்து அடக்கம் செய்தாலென்ன? எறிந்துவிட்டால்தான் என்ன? பார்க்கும் பலர் பழித்தாலென்ன?

பெரும் மழை, நீராக ஓடும்போது தோன்றும் குமிழி அடுத்த சில கணங்களில் உடைந்துவிடும். உடலும் இத்தகு நீர்க்குமிழி போன்றதே. உடலின் நிலையாமையை நன்கு அறிந்து பிறவித் தடுமாற்றத்தை நாம் ஒழித்து விடுவோம் என்று உணரும் திண்மை மிக்க அறிஞர்க்கு நிகரானவர் உலகில் யார்? யாரும் இல்லை.

உடம்பு மலைமேல் அங்குமிங்குமாக ஆடுகின்ற மேகம் போலத் தோன்றி நிலை பெறாது மறைந்துவிடும். அத்தகு உடம்பை உலகில் வாழ்வதற்காகப் பெற்றவர் தாம் பெற்ற உடம்பைக் கொண்டு உரியவற்றை ஆற்றுதல் வேண்டும்.


பறவையைப்போல் உயிர் உடல் கூட்டைப் பிரியும்:


“கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே

சேக்கை மரண் ஒழியச் சேண் நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து”

மரத்தில் உள்ள பொந்தில் பிறந்து வாழும் குஞ்சு வளர்ந்து இறக்கை முளைத்து தான் குடியிருந்த முட்டை ஓட்டையும், கூட்டையும் விட்டுவிட்டு எங்கோ பறந்து சென்றுவிடும். அப்பறவையைப் போல ஒரு குடும்பத்தில் அக்குடும்பத்தினரைக் கேளாமல் வந்து பிறந்த சொந்த பந்தத்துடன் வளர்ந்து, ஒரு காலத்தில் அவர்களை விட்டு விட்டு உயிர் பிரிந்து சென்று விடும்.

சற்று நேரத்திற்குமுன் நின்று கொண்டிருந்தான். பிறகு அமர்ந்தான், பின்னர் படுத்தான், கொஞ்ச நேரத்தில் தம் உறவினர் கதறி அழும்படியாக இறந்துப்போனான் என்று உயிர்ப்பற்றி வாழ்க்சை; சொல்லப்படுதலால் காலை வேளை புல்மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிப்போல நிலையாதது வாழ்;க்கை. எனவே இப்போது நம்மால் முடியும் அறப்பணிகளைச் செய்தல் வேண்டும்.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள்அது உணர்வார்ப் பெறின்”

வாளின் கூரியவாய், பொருளை இரண்டாகத் துண்டிப்பது போன்று, நாளின் வரையறை மனித உடலையும் உயிரையும் துண்டிக்கும் என்பதை உணர வேண்டும். பேச்சு அடங்கி, விக்குள் எடுத்து, இறப்பதற்கு முன்னமேயே நற்செயல்கள் பலவற்றையும் செய்துவிட வேண்டும். உலக மக்களின் வாழ்வு நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்று கூறும்படியான பெருமைக்குரியது இவ்வுலகம்.

“ஒருபொழுதும் வாழ்வது அறிவார் கருதுப

கோடியும் அல்ல பல.”

ஒரு பொழுதளவு கூட உயிருடன் இருப்போம் என்பதை அறியாத உலக மக்கள் பலகோடி எண்ணங்களை எண்ணுவார்கள்.

“குடம்பை தனித்துஒழியப் புற்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு.”

முட்டையுள் இருந்து பறவை பறந்து வெளிச்செல்வதற்கு ஒப்பாகும் உடம்பிற்கும் உயிருக்கும் இடையில் உள்ள நட்பு. உறங்குவது போன்றது இறப்பு உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. உயிருக்கு நிலையான ஓர் உடம்பு கிடைக்காததனால் அவ்வுயிர் ஒவ்வோர் உடம்பினுள்ளும் தங்கி இருக்கும்.

திருவருட்பா யாக்கையின் தன்மையை புழுக்கள் நிறைந்தது. கானல் நீரைப் போன்றது. ஒதிய மரத்தைப் போல் ஒன்றுக்கும் உதவாதது. வைத்திருக்கும் மண்பாண்டம் போல இற்றுப்போன இயல்புடையதாகியும் கண், காது, மூக்கு முதலிய ஒன்பது துவாரங்களின் வழியாக அழுக்குநீர் ஒழுகுவதாக உள்ள உடம்பு வான்வெளியில் வீசி எறிந்த கல் ஆகிவிடும், மலையிலிருந்து விடும் அருவி போலவும், கடுங்காற்றுள்ள இடத்தில் வைத்துள்ள அகல் போலவும், மேகத்தில் தோன்றியுள்ள மின்னல் போலவும், சூறாவளிக் காற்று இடைப்பட்ட மேகம் போலவும், நீரில் எழுத்துப் போலவும் வெறும் மாய்க்கை தோற்றம் எனவும், பறவைக்கூடு பறவை நீங்கியப்பின் கிடைப்பது போல் பயனற்றுக் கிடப்பது எனவும் பொய்யான கனவு எனவும் திருவருட்பா உடம்பின் தன்மையைப் பற்றிக் கூறுவது இங்கு சிந்திக்கத்தக்கது.

மேலும் யாக்கையின் இழிவுப்படுத்தியும் எமன் வருகையைக் காட்டியும் பிறப்பு, இறப்பு தத்துவத்தை விளக்கியும் திருவருட்பாவில் பாடல்கள் பல உள்ளன.

திருவருட்பா மனிதனின் யாக்கையின் நிலையாமையைப் பற்றி மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குகிறது. மேலும் திருவருட்பா வாழ்வில் நடக்கும் அன்றாட செயல்களைக் காட்டி யாக்கை நிலையாமையைச் சுட்டுகிறது.

“சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான்

சொல்லிட்ட முடன் அனைத்துத்

துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுதுண்டு

சும்மா இருத்தி என்றால்

காரிட்டதற்குமுன் யார்இட்ட சாபமோ

கண்டிலேன் அம்மம்ம ஓர்

கறங்கெனச் சுழல்கின்றதே.”(9) 

என்ற உள்ள நிலையாமையைத் திருவருட்பா  கூறுகிறது


வாழ்வும் காலமும்:


உயிர் வாழ்க்கை நிலையில்லாதது என்று கூற வந்த திருவருட்பா வாழ்க்கையை இழித்துக் கூறுவதனை

‘……………….. மாய வாழ்க்கையெனும்

காட்டைக் கடந்து நின் உருவைக் கண்கள’ 

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

வாழ்க்கையை நீரில் தோன்றும் குமிழி எனவும், கானல் எனவும், பாலைவனம் எனவும், மத்தில் அகப்பட்ட தயிரெனவும் வஞ்சமெனவும் கூறி வாழ்க்கை நிலையாமையை உணர்த்துகிறது. வாழ்க்கையின் கால அளவினைக் கணக்கிட்டுத் திருவருட்பா கூறுவதனை

“நாழிகையோர் நாளாக நாடினையே நாளை ஒரு

நாழிகையாய் எண்ணி நலந்திலையே”(11)


“வாழ்வுநிலை யன்றியமைப்பில் மாறுகின்றதென்றுரைத்தும்”

என்பவற்றால் அறியலாம்.


இறைவனை அடைய ஒட்டாது தடுப்பவை:


இந்த உயிர் இறைவனையடைய தடை செய்வது ‘தளை’ ஆகும். அவை ஆவணம், கன்மம், மாயை என்னும் மூவகையாகும்.

இதனை சைவ சித்தாந்த ஆராய்ச்சி என்ற நூலில் சச்சிதானந்தனார், “மனம் தனக்கு வேறாக உள்ள உடம்பைத் தன் வடிவாக மாறுபடக் கருதி உடலை நானெனப் பற்றுற்றிருத்தலும் இன்பத் துன்பங்களை விளைவிக்க நல்வினை, தீவினைகளைச் செய்து வருதலும் ………… ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை மலங்கலென்னும் குற்றங்களை மனமுறுவதனால் உயிர் தனிமுதற் பொருளை அறிய வல்லதன்று என்று கூறுகிறார். எனவே மனமே அனைத்து துன்பத்திற்கும் காரணம் எனலாம். அதனால் தான் குறட்பாவும்

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீற பிற.”

என்கிறது.

உள்ளம்:

உடலில் உள்ள உள்ளமானது வெளியே நட்பும் அகத்தே வஞ்சகமும் கொண்டது என்பதனை அறியலாம். மேலும் முக்தி நெறிக்கான அறிவுப் பேற்றில் சிறப்புறாதவன் மனிதன் என்று   உணர்த்துகிறது. உள்ளத்தின் தன்மையை “வஞ்சுமலர்க் கோது அகற்றும் குகேசன்” என்ற அடியின் மூலம் மனஇருளைத் தருகின்ற நெஞ்சம் என்பதனை அருட்பா அருளுவதை உணரலாம். மேலும் உள்ளத்தின் தன்மையை அருட்பாக்கள் விளக்கமாக உணர்த்துகின்றன. 


“பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்

மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி

வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன” (20)


ஆணவம்:


ஆணவம் மனப்பற்றோடு தொடர்புடையவை செய்பவை நல்வினைகளும் தீவினைகளும் என்பதனை 5-வது குறட்பாவிலும், அந்த ஆணவம் நீங்கப் பிறவித் துன்பம் நீங்கும் என்பதனை “இருள் நீங்கி இன்பம் பயக்கும்” என்று 352-வது குறட்பாவிலும் திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆணவம் மனத்தின் தாக்குதலை 53-வது அருட்பாவிலும் “பிற்படுமோர் பொய்” என்று 21-வது அருட்பாவிலும் உடலை “ஆணவத்தின் கட்டென்கோ” (494) “மாய விளைவின்கோ” (495) என்ற அடிகளாலும் ஆணவத்தின் தன்மை அவ்வாணவம் மனிதனை ஆட்டுவித்துத் துன்பத்தில் அழுத்துகின்ற முறைமை ஆகியவற்றை அருட்பா தெளிவாக உணர்த்துகின்றன.

“…………………………….தீது செயும்

வீணவத்தை யெல்லாம் வினைக்கும் திறல்மூல

ஆணவத்தி னாலே அழிந்தனையே ஆணவத்தில்

நீயார் எனஅறிவாய் நின்னெதிரில் நின்றவரை

நீயார் எனவினவி நீண்டனையே” (21)

என்ற அருட்பாக்களைச் சுட்டலாம்

கன்மம்:

அநாதியே மனத்தைப் பற்றுதல் உயிரின் வினையாய் உயிர்க்குற்றங்களுள் வைத்து எண்ணப்படும். கன்ம மலம், அநாதியே உள்ளது.

அநாதியே உள்ள கன்மம் “மூலகன்மம்” எனப்படுகிறது. அது காரண கன்மம் என்றும் கூறப்படும். கன்மம் காரிய நிலையில் இரு வகைப்படும். அவை நல்வினை (புண்ணியம்) தீவினை (பாவம்) எனப்படும்.

“வகுத்தான் வகுத்த ………………… அரிது”

“ஊழையும் ………………….பவர்”(22)

என்ற குறட்பாக்களின் மூலம் வினையையும் மனிதன் தன் முயற்சியினால் இறையருளைப் பெற்று வெற்றியும் பெற முடியும் என்பதனை உணர முடிகிறது.


மாயை:

மாயை என்றும் உள்ளது. அஃது உருவம் சடம் அற்றது. மாயை ஒரே பொருளாக உள்ளது. இறைவனுக்கும் பரிக்கிரக சக்தியாக உள்ளது. இதனை சிவஞான சித்தியார் தெளிவாக்குகிறார். இதனை குறட்பாக்களும்

“பொருளல்ல வற்றைக் பொருளன் றுணரும்

மருளானாம் மாணப் பிறப்பு” (23)

என்ற குறட்பா மூலம் பிறப்பிற்குக் காரணம் மாயை என்பதனை உணரலாம்;.

திருமூலர் யாக்கை நிலையாமையைக் கூறி மனித சமுதாயத்துக்கு இரங்குகிறார். அழகாகப் போற்றி வளர்க்கும் இவ்வுடம்பு மண்ணாலாகிய பாத்திரம் போன்றது. ஆனால் அம்மண்ணாலாகிய பாத்திரம் மழைநீர் பெய்யின் கரைந்து மண்ணாவது போல வினைக்குக் கொள்கலமாகிய இவ்வுடம்பு முடிவில் மண்ணாய்ப் போகிறது.

வினைக்கு இடமான உடம்பு நாளாவட்டத்தில் தேய்ந்து நீங்கினால் உடனிருந்து மகிழ்ந்த பெண்டிரும் மக்களும் உடன் வரமாட்டார். அப்பொழுது அவருடன் வருவன அவர் செய்த அறத்தின் பயனும் ஞானமேயாகும்.

“பண்டம்பெண் கூரைபழகி விழுந்தக்கால்

உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே”(24)

என்பது அவர் வாக்கு.

இறுதியில் ஊரில் உள்ள எல்லோரும் கூடி ஒப்பாரி வைத்து இராகத்தோடு பாடிப்பேரை மாற்றிப் பிணம் என்ற புதிய பெயரிட்டுச் சுடுகாட்டில் இட்டுச் சுட்டபின் நீரில் சென்று மூழ்கி இறந்தவரது நினைவுமின்றி வீடு திரும்புவர்.

இறப்பு எதிர்பாராத வகையில் எத்துணை அவசரமாக வருகிறது என்பதைப் பற்றி அவர் கூறுவது இன்று காட்சியில் காணக்கிடக்கின்ற ஒன்றாகும்.

“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.”(25)

பகல்  முழுதும் நன்றாக இருந்து மனைவியோடு கூடி மகிழ்ந்து உண்டிருந்தவர் நெஞ்சு வலிக்கிறது என்று கூறி மருத்துவர் வருமுன்னர் இறந்து கிடக்கிறார் என்பது போன்ற செய்தி நாள்தோறும் கேட்கக்கூடியதாக உள்ளது.

உடம்பிலுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களும் உடம்பில் ஜீவன் உள்ளவரைதான் தொழில் புரியும் ஜீவன் புரிந்தபின்னர் அவை தொழில் செய்யா. மேலும் சுவாசக் காற்றுகளும் உடம்பைவிட்டுப் பிரிந்துவிடும். அவ்வாறு பிரிந்தபின் அவரது சடலத்தைக் காக்கைக் கொத்தித் தின்றால் என்ன? கண்டவர் பழித்தாலென்ன? போற்றினால்தான் என்ன? உடம்பிலிருந்து ஆட்டிக்கொண்டிருந்த ஜீவன் உடம்பை விட்டு வெளியே புறப்பட்டு விட்;டது. பின் உடம்புக்கு ஏதும் உணர்ச்சி இல்லையே.

இவ்வாறு கூறியது நிலையில்லாத உடம்பில் வாழும்போது நிலையான அறத்தை மேற்கொண்டு செய்துவிட வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே ஆகும்.

"ஆயாகு அறிவு அயர்ந்து அல்லாந்டது அகலிடத்து

மாயா நதியும் மனைச்செறீஇ - ஈயாது

இறுகப் பொதியன்மின் இன்றொரு நாளைக்

குறுக வருமரோ ! கூற்று.”

உலகத்தில் வாழ்வாரோ! உம்மைக் கொல்லுவதற்குக் கூற்றுவன் நெருங்கி வருவான் அது இன்றோ? நாளையோ நடைபெறும் 1. அதனை ஆராய்ந்துப் பார்க்கும் உணர்ச்சியினை மறந்தீர்;! 2. அகன்ற உலகத்தின்கண் சுற்றிச் சுழன்று அழியாத பெரும்பொருளை நமது இல்லிலே சேர்த்து வைப்பீர்! 3. அவற்றைப் பிறருக்கு வழங்காமல் இறுகப் பற்றிக் கொண்டுள்ளீர் ஒழிவீராக. இறத்தல் அனைவருக்கும் நிகழக் கூடியது. ஆக உடம்பை பாதுகாத்தல் என்பது வீணான செயல் என்று நாலடியார் கூறுகிறார்.

“கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே

சேக்கை மரண் ஒழிலச் சேண்நீங்க புன்போல்

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.” (27)

பறவைகள் ஒரு இடத்தில் வெகு நாட்கள் தங்கி இறுதியில் அவ்விடத்தை விட்டு நீங்கிவிடும். அதுப்போல உயிரானது உடம்பில் வெகுநாட்கள் இருந்தாலும் ஒரு நாள் அவ்வுடம்பை விட்டு உயிரானது தனியாகப் பிரித்துச் சென்றுவிடும்.

நாடு, நகரம், வீடு, செல்வம் இதர பொருள்கள் இவை யாவும் நடுவனாகிய எமன் நம் உயிரை பறிக்க வரும்போது நம்மோடு கூட வருமோ? வராது. உடலை விட்டு உயிரானது பிரிந்துப் போன பிறகு அப்பொருள்களால் ஆகக்கூடிய பயன்தான் என்ன? எதுவுமில்லை, எனவே கூத்தாடும் சிவபெருமானின் திருவடிகளைக் குறித்த பாம்பே நீ ஆடுவாயாக. யானைப்படை, காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகளும் அணியாக வந்து எமன் வரும்போது துணையாகுமா? இதனை நன்கறிவாய் ஞானம் சிறிதும் இல்லாத நாய்களுக்குப் புத்தி வருமாறு நீ நின்று பாம்பே ஆடுவாயாக.

“மாணிக்கமோ மணிமுடி வாகு வலயம்

மார்பில்தொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்

ஆனிப்பொன்முத் தாரமம்பொன் அந்த கடகம்

அழிவான பொருளெனநின் நாடாய் பாம்பே”(28)

மாணிக்கத்தால் ஆகிய மணிமுடி தோள்வலயம், மார்பில் தொங்கும் பதக்கங்கள் ஆகிய (ஆணிப்பொன்) முத்துமாலை கையில் அணியும் பொற்கடகம் ஆகிய இவை அனைத்துமே அழியும் பொருள்கள்தான் என்று வலியுறுத்துகிறது.

செம்மையான பொன்னை மலை போன்று குவித்து வைத்திருப்பவர்கள் எமன் வரும்போது அவற்றை வாரிக்கொண்டு செல்வார்களோ மனதை அங்கும் இங்கும் அலையவிடாமல் தலைவனாகிய இறைவன் மேல் வைத்திருப்பவர்கள் என்றும் அழியமாட்டார்கள் என்று பாம்பே நீ ஆடுவாயாக. முக்கனிகள், சர்க்கரை, மோதகம் என மிகுந்த சுவைமிக்க பண்டங்களை முன்பு விரும்பி உண்ட வாயானது உடலை விட்டு உயிர்போன பின்பு மண்ணை விழுங்குவதை உண்மையாகவே காண்கிறோம். பல வண்ணப்பட்டாடைகளும், வாசனைப் பூச்சும், அழகிய வடிவமும், சிறந்த குடையும், ஆலவட்டமும் மற்றும் ஆடம்பரச் சின்னங்கள் பலவும் இயமபுரம் செல்லும்போது கட்டாயமாக கூட வராது. பிள்ளைகள், மனைவி, உறவினர், மருமக்கள் போன்றோர் நாம் இறக்கும்போது அவர்களும் நம்முடன் இறப்பதில்லை. இவ்வுலகங்கள் அனைத்தையும் தந்த இறைவனைத் நினைத்து மகிழ்வோம்

“ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலினலே உண்டை சேர்த்தே

வாய்த்தருய வனார் பண்ணும் பாண்டம்

வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே”(29)

மக்கிப்போன மண்குழியிலிருந்து மண்ணை எடுத்து இரத்தமாகிய நீரால் உண்டை சேர்த்து விவரமாகக் குயவனார் (இறைவன்) உண்டாக்கும் பாத்திரம் (இவ்வுடல்) உடைந்துப்போன ஓட்டுக்குரிய மதிப்பைக்கூடப் பெறாது எனத் தெரிவிக்கின்றுத. இறைவன் என்னும் குயவனால் படைத்த இவ்வுடல் முடிவில் நிலையில்லாமல் அழிந்துவிடும். எனவே வாழும்போதே புண்ணியச் செயல்களை ஆற்ற வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்தாகும்.

“இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையா யிருப்பினும் அந்தச் சூளை

அரைக்காசுக்கு ஆகாதுஎன்று  ஆடாய் பாம்பே”(30)

இருவர் சேர்த்து மண்பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில் வைத்து பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்கும் உதவாதது. இது இப்பாடலின் வெளிப்படையான கருத்தாகும். நீரில் எழும் நீர்க்குமிழியானது நிலைகெட்டு நீராய் கலத்தல்போல் இந்த உடலும் நிலைத்து நிற்காமல் அழிந்து விடும். இது நிச்சயம் என்று இவ்வுலகில் பல உயிர்களையும் படைத்த இறைவனை மிகவும் பற்றிக்கொள்ள வேண்டும்.




முடிவுரை


இவ்வாய்வின் வழி “மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைப் போல மண்ணால் செய்த உடம்பில் உயிர் என்னும் நூலைக் கட்டி திரைக்குள்ளே இருந்து ஆட்டுபவன் (இறைவன்) அவ்வுயிரை இயக்க மறுத்தால், உடலும் கீழே விழும் என்று அறிந்தக் கொள்ளலாம். பத்து நாடிகள்,  ஏழு வாயுக்கள்,   ஏழு தாதுக்கள் இவைகளால் கட்டப்பட்டது இவ்வுடல் என்னும் மரக்கப்பல். அது தடுமாறி விழவும் கூடும். அவ்வாறு இல்லாமல் இசைவாகக் கப்பலை ஒரே வெள்ளத்தில் எந்நாளும் செலுத்துவது எப்படி என்று முடிவு செய்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக